×

ஆறுமுகனும் ஆறும்...

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-58

விரும்பி வழிபடும் அன்பர்களின் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றித்தரும் தெய்வமாக வேலவன் விளங்குகின்றான்.

பக்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம்
எத்தனையோ வகை இருப்பினும் அவற்றுள்
முக்திதந்து அனுதினம் முழுப்பலன் நல்க
சக்தியமாவது சரவண பவவே
என்று தெளிவாகவும், தீர்க்கமாகவும் தெரியப்படுத்துகின்றார் பாம்பன் சுவாமிகள்.
வேண்டிய போது அடியார் வேண்டிய போகம் அது
வெறாதுதவும் பெருமாளே !

என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

‘எந்த வேளையும் கந்த வேளை நினை’ என்ற வாக்கிற்கிணங்க வாழ்க்கை முழுவதுமே வடிவேலனை தியானிக்கவேண்டும் என்றாலும் சிறப்பாக நம் பெரியவர்கள் வாரவிரதம், மாதவிரதம், வருடவிரதம் என்று வகுத்திருக்கிறார்கள்.

வாரந்தோறும் வருகின்ற வெள்ளிக்கிழமையிலும்,  
மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நன்னாளிலும்,
வருடந்தோறும் தீபாவளிக்கு அடுத்த ஆறு நாட்கள் ‘கந்த சஷ்டி’
பண்டிகையாகவும் ‘முருகனுக்குரிய முக்கியமான தினங்கள்’
என வரையறுக்கப்பட்டுள்ளன.

‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்று வழங்கப்படும் பழமொழியின் உண்மை வடிவம்.

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பதே ! ஆறுமுகப் பெருமானை ஆறு தினங்கள் விரதமிருந்து கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் மங்கையர்களுக்கு புத்திரப் பேறு கிட்டும் என்பதே அப்பழமொழியின் பொருள். முருகப்பெருமானின் சிறப்புக்குரிய அம்சங்கள் அனைத்துமே ‘ஆறு . . . ஆறு’ என்ற எண்ணிக்கையிலேயே அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு வியப்பு மேலிடுகின்றது.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் என ஆறு திசைகளையும் பார்க்கும் வண்ணம் முருகனுக்கு அமைந்த முகங்கள் ஆறு ! திருப்புகழில் அருணகிரிநாதரும், திரை இசையில் கண்ணதாசனும் ஆறுமுகங்களின் அரிய செயலை அற்புதமாகப் பாடியுள்ளதைப் பார்க்கலாமா ?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே !
ஈசருடன் ஞான மொழி பேசுமுகம் ஒன்றே !
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே !
குன்று உருவில் வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே !
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே !
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும் !
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே !

மேற்கண்ட அருணகிரியார் பாடலைப் போலவே
 கண்ணதாசன் பாடலும் இலக்கியச் சுவை மிளிர ஆறுமுகங்களின் செயலை அற்புதமாக எடுத்துரைக்கின்றது.

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று !
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று !
சஞ்சலத்தில் வந்தவரைக்காக்கும் முகம் ஒன்று !
சாதி மத பேதம் இன்றி பார்க்கும் முகம் ஒன்று !
நோய் நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று !
நூறு முகம் காட்டுதம்மா  ஆறுமுகம் இன்று!

அருள் பொழியும் கந்தவேளின் முகவதனம் ஆறாக அமைந்துள்ளதைப் போலவே மூலமந்திரமும் ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்துக் களாகவே அமைந்துள்ளது.

ஒருதரம் சரவணபவா  என்று உரைக்கில் உள்ளத்தில்   நினைத்த எல்லாம்  உடனே கை கூடும்  என வேதங்கள் மொழியுதே. என்று  ‘ஆறெழுத்துக்கு  வேறெழுத்து  நிகரில்லை’ என்கின்றனர் புலவர்கள்.

முகம், மூலமந்திரம் மட்டும் அல்ல. குடி கொண்டிருக்கும் தலங்கள் ‘ஆறு படைவீடுகள்’ என்றே சிறப்புப் பெயர் பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர் சோலை என தமிழ்க் கடவுள் அருள்பொழியும் படைவீடுகள் ஆறும் தமிழகத்திலேயே அமைந்துள்ளன.

முருகப்பெருமானின் தோற்றம், திருவிளையாடல்கள், பிரணவ  உபதேசம், சூரசம்ஹாரம் என வடிவேலனின் வரலாற்றைக் கூறும் நூலை கச்சியப்பர் அருளியுள்ளார். அதுவே ‘கந்தபுராணம்’ அருமையான கந்தபெருமானின் அச்சரித்திரமும் ஆறு காண்டங்களைக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

‘ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறுபேர்க்கு  மகவென
நாணல் பூத்த படுகையில்  வருவோனே’!


என்று திருப்புகழ் குறிப்பிடும் வண்ணம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த நெருப்பு ஆறு சுடர்களாக நாணற்காடான சரவணத்தை வந்தடைந்து அங்கே ஆறு தாமரை மலர்களிலே ஆறு மழலைகளாக உருப்பெற, ஆறு மழலையர்களை கார்த்திகை மாதர்கள் அறுவர் கரத்தில் ஏந்தினர். கார்த்திகை மாதர்களின் அரவணைப்பில் கந்தப் பெருமான் வளர்ந்ததால் தான் கார்த்திகை என்ற பெயரும், கிருத்திகை நட்சத்திர வழிபாடும் உருவாயின.  

சிவ குமாரனாகவும், திருமால் மருகனாகவும், பராசக்தியின் பாலனாகவும், கணபதியின் தம்பியாகவும், சத கோடி சூரியனின் பிரகாசமாகவும் வேலன் விளங்குவதால்தான் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம்,  சௌரம், கௌமாரம் என ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுக்கும்  பொதுவான மூர்த்தியாக ‘சண்முகன் சந்நதி’ விளங்குகின்றது. ‘அறுசமய சாத்திரப் பொருளோனே’ ‘சமய நாயக’ என்றே முருகர் அழைக்கப்படுகின்றார். கல்லால மரத்தடியில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு சிவபெருமான் உபதேசித்தது போல சிவகுமாரர் முதற்படைவீடான திருப்பரங்குன்றத்தில் பராசர புத்திரர்கள் ஆறுபேர்க்கு அருள் உபதேசம் வழங்கினார். சுக்கிரவாரவிரதமே சுப்ரமணியர்க்கு உகந்தது. அவ்வகையில் சுக்கிரவாரம் என்றழைக்கப்படும் வெள்ளிக் கிழமை ஆறாவது தினம்.

மேலும் ஆறாவது திதியான ‘சஷ்டி’யே சண்முகர்க்கு உகந்தது. சூரபத்மனை வதம் செய்த சுடர்வேல் இறைவனை வழிபட காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற ஆறு உட்பகைவர்களும் அழிவார்கள் என்கிறது சாத்திரம்.திருச்செந்தூர் திருப்புகழான ‘தண்டை அணி வெண்டையம்’ என்று தொடங்கும் பாடலில் ஆறுமுகன் திருவடிகளில் சப்திக்கும் அணிமணிகளும் ஆறுதான். அவை தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என்கிறார் அருணகிரியார்.

திருமூர்த்திகளின் பெயர் முதல் எழுத்துக்கள் முகுந்தன், ருத்ரன், கமலன் இணைந்தே முருக எனும் பெயர் உண்டானது. அந்த மும்மூர்த்தி களின் துணைவியர் லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, லட்சுமி முகுந்தன் திருமார்பிலும் பார்வதி ருத்ரனின் பாதி உடம்பாகவும், சரஸ்வதி கமலன் என்னும் பிரம்மாவின் நாவிலும் இருப்பதால் ‘முருக’ என்னும் நாமத்தில் ஆறுதெய்வங்களின் அருளும்ஒருசேர அமைந்துள்ளது.

‘இன் சொல்விசாகர் க்ருபாகர’ என்று திருமுருகனைத் திருப்புகழ் அழைக்கின்றது. விசாகம் தனித்த ஒரு நட்சத்திரம் அன்று. ஆறு நட்சத்திரங்களின் கூட்டமே விசாகம் ஆகும்.‘ஆறு’ என்ற எண்ணை முருகப்பெருமான் வரலாற்றோடு பொருத்திச் சிந்தித்தால் ஆறு போல பல விஷயங்கள் ஊற்றெடுத்துப் பொங்குகின்றன. முருகனின் சீர்த்தியும், கீர்த்தியும், நேர்த்தியும் பூர்த்தியாகப் பொலியும் வண்ணம் அருணகிரியார் பாடியுள்ள பனுவல்களும் ஆறே ஆகும். அவை திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல்மயில் சேவல் விருத்தம் ஆகும்.

அருணகிரியாரையே ஆசானாக பாவித்து பாம்பன் அடிகளார் முருகப்பெருமான் மீது பாடிய பாடல் எண்ணிக்கை 6666 ஆகும். முருகப் பெருமானை வழிபடும் விழாக்களும் ஆறாகவே அமைந்துள்ளது. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம். மேற்கண்ட ஆறுவைபவங்களில் ஐப்பசி வளர்பிறையில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு கொண்டாடும் இக்கந்த சஷ்டியே மிகவும் விசேஷமானது. ஆறு முகனின் ஆறு நாள் கொண்டாட்டத்தில் உருகிப் பணிந்து அவரிடம் வரம்வேண்டுவோம்.பொன்னும், பொருளும், போகமும், அன்பும், அருளும், அறனும் என நலங்கள் ஆறும் நமக்கு அவர் அருள்வார்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags :
× RELATED வேலை வழிபடுவதே வேலை