×

வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

யோகியால் கிடைத்த பள்ளி படிப்பு

நான் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் திருவண்ணாமலையிலுள்ள யோகிராம் சுரத்குமார் சுவாமிகளை நேரில் சென்று அவர் ஆசி பெற்று வருவது வழக்கம். ஒருமுறை எனது பேத்திக்கு சென்னையிலுள்ள பிரபலமான ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்க்க முயன்றேன். அங்கு இடம் கிடைக்க மிகவும் கடினம் என்று அறிந்ததும். நான் திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் சுவாமிகளிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன். சுவாமிகள் என்னை தொட்டு ஆசீர் வதித்தார். அதன் பலனாக ஒரு வாரத்தில் எங்கள் விண்ணப்பத்திற்கு அங்கு சேர்த்து கொள்ள கடிதம் வந்தது. கடிதத்தை கண்டதும் சுவாமிகளிடம் கொண்டு போய் கொடுத்து அவர் ஆசி பெற்று என் பேத்தியை அந்த பள்ளியில் சேர்த்தேன். அதன் பிறகு ஒருமுறை சுவாமிகளை சந்திக்கச் சென்றதும் சுவாமி அடக்கமாகி விட்டது கேட்டு மிகவும் கண்ணீருடன் சுவாமிகளை அடக்கம் செய்த சமாதிக்குச் சென்று வணங்கி வந்தேன். அதன்பின்னர், அடிக்கடி சமாதிக்கு போய் வணங்குவது என் வழக்கமாகி விட்டது. எந்த காரியமும் சுவாமிகளை நினைத்து செய்தால் அந்த காரியம் நல்லபடியாக நடக்கிறது.
- R.M. வெங்கடசுவாமி, திருச்சி - 620018.

அம்பாள் அருளால் எனது மகளுக்கு சுகப்பிரசவம் ஆனது

வணக்கமுடன் தெரிவித்துக் கொள்வது, எனது மகள் எஸ்.ஜெய்ஸ்ரீ கருத்தரித்திருந்த வேளையில் நான் தர்மபுரி நகரில் உள்ள ஒரு பிரசித்திப் பெற்ற அம்பாள் ஆலயத்திற்கு வாரந்தோறும் வெள்ளியன்று சென்று எனது மகளுக்கு பிரசவம்  சுகப்பிரசவமாக அமைய வேண்டும். தாயும், சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என்று அந்த அம்பாளை பிரார்த்தனை செய்து வந்தேன். அதன் பலனாக எனது மகளுக்கு கடந்த 24.10.2020 அன்றிரவு சுமார் 11 மணியளவில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. எல்லாம் வல்ல அம்பாளுக்கு எனது  நன்றியினை காணிக்கையாக்குவதோடு அம்பாளின் கருணையை, அந்த தாயின் அற்புதத்தை யாவரும் அறியும் பொருட்டு ஆன்மிக இதழுக்கு அனுப்பி வைத்தேன். இறைவனின் மேல் என்றும் நம்பிக்கை வைப்போம். வெற்றி பெறுவோம்.
- K. சுப்பன், தர்மபுரி - 636803.

இசக்கியம்மனின் அருளால் இனிதே நடந்தது

நான் தற்சமயம் 3 வருட காலமாக சென்னை பல்லாவரத்திலுள்ள எனது மகளின் வீட்டில் நானும் என் மனைவியும் இருக்கிறோம். எங்களது பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா ராதாபுரத்தை அடுத்த சீலாத்திக்குளம் என்னும் சிற்றூர் ஆகும். இப்போது எனக்கு 71 வயதாகிறது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. எனது 2 பையன்களும் இன்ஜினியரிங் படிக்கும் நேரம் வேலை இல்லாததால் கையில் பணம் இல்லாத நிலை. அப்போது இரு வருடங்களுக்கு ஒருமுறை கிராமத்தில் கரிக்குவால் என்னும் பெயருடைய எங்களது குடும்ப தெய்வத்திற்கு கொடை கொடுப்பது வழக்கம் எனது பங்கிற்கு ரூ. 2000/ வரி கொடுக்க வேண்டும். கொடை கொடுக்கும் நாளும் வந்தது. 3 நாட்கள் கொடை. முதல் நாள் இரவு முடிந்து இரண்டாம் நாள் மத்தியானம் மிக விசேஷம் கண்டிப்பாக எல்லோரும் வருவார்கள்.

அப்போது நான் கேரளா கொல்லத்தில் இருந்தேன். எனது வீட்டில் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருந்தேன். காலை 8 மணி இருக்கும் எனது வீட்டின் வாசலில் வந்து ஒருவர் ‘‘நீங்கள் தானே பால கிருஷ்ணன்’’ என்று கூறி ஒரு கவரை கொடுத்து விட்டு உடனே போய் விட்டார். அதில் எனது பெயர் இருந்தது பிரித்தேன். அதில் 2000/- பணம் இருந்தது. அதில் ஒரு  தபாலும் இருந்தது. கணக்கில் 2000/- வரவு  வைத்துக் கொள்ளவும் மீதி வரும்போது தருகிறேன் என்று, யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதை கரிக்குவால் இசக்கியின் அருள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. உடனே ஊருக்கு புறப்பட்டேன் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் தான் எனது வீடு. ஓட்டமும் நடையுமாக சென்றேன்.

ஒருவர் நாகர்கோவிலுக்கு ஆள் கூப்பிட்டு கொண்டிருந்தார். விசாரித்ததில் கொச்சிக்கு வந்து விட்டு செல்வதாக கூறினார். உடனே ஏறினேன். 12 மணிக்கு நாகர்கோவில் அங்கிருந்து திருச்செந்தூர் பஸ்சில் சமூகரெங்கபுரம் சென்று அங்கிருந்து சீலாத்திகுளம் மூன்று கி.மீ தூரம். அன்று ஆட்டோ இல்லை. நடந்தே சென்றேன். கோயிலுக்கு சென்றபோது இரண்டரை மணிக்கு உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்தது. போய் அம்மாவை கும்பிட்டேன். எனக்கு ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அம்மனின் அருள் என்னவென்று சொல்வது. இதுவரை தவறாமல் எனது பிள்ளைகளும் நானும் பேரன் பேத்திகளும் எங்கிருந்தாலும் கொடைவிழா தோறும் ஊருக்குச் சென்று இசக்கியம்மனை கும்பிட்டுட்டு வருகிறோம்.
- V.பாலகிருஷ்ணா ரெட்டியார், சென்னை.

மனித உருவில் வந்த தெய்வம்

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு பக்கத்தில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தனிச்சேரி ஆகிய கோயில் பத்து என்ற ஊரில் சூரியன் வழிப்பட்ட சிவாலயம் உள்ளது. சுயம்புலிங்கமாக ஸ்ரீபார்வதீஸ்வரரும், ஸ்ரீசுயம்வரம் தபஸ்வினி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். நானும் என் குடும்பத்தாரும் காரைக்காலுக்கு என் பேத்தியை பார்த்து வரச் சென்ற சமயம் மறுநாள் 28.10.2020 புதன்கிழமை பிரதோஷமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு சிவாலயத்திற்கு சென்றேன். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சற்று நேரத்தில் எனக்கு முழங்காலில் வலி எடுத்தது. என்ன செய்வது, பேத்தி வீட்டிற்கு எப்படி போவது முழங்கால் வலி அதிகமாக இருந்ததால் அம்பாளையும், சுவாமியையும் மனதில் நினைத்து வேண்டினேன். நான் பேத்தி வீட்டிற்கு போகவேண்டும். எனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு திரும்பினேன்.

அம்பாள் சந்நிதானத்தில் நடுத்தர வயதுடைய அன்பர் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் எனக்கு 82 வயது. முழங்கால் வலி அதிகமாக உள்ளது. தாங்கள் என்னை பேருந்து நிலையம் வரை கொண்டு விடமுடியுமா என்று கேட்டேன். சரி என்று எதிரில் உள்ள ஸ்ரீகோதண்டவர் கோயிலுக்கு சென்று வாருங்கள் என்றார். சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் அவரும் அவர் மனைவியாரும் நின்று கொண்டிருந்தார்கள். அன்பர் பேத்தி வீடு எங்கு இருக்கிறது என்றார். மனைவியாரிடம் சொன்னதும் தாத்தாவை பத்திரமாக விட்டு வரும்படி கூறி அனுப்பி வைத்தார்கள். எனக்கு அங்கேயே சுவாமிகளின் நல்லாசி கிடைத்தது என்பதை உணர்ந்தேன். தெய்வம் மனித உருவில் வந்து உதவும் என்பதை என் வாழ்வில் உணர்ந்து கொண்டேன்.
- P.கணபதி, திருவாரூர்.

Tags :
× RELATED சுந்தர வேடம்