மகிமைகள் நிறைந்த கார்த்திகை

கார்த்திகை தீபம் 29-11-2020

பிரம்ம ஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

தமிழாக்கம்: ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு. காலமனைத்தும் பரமேஸ்வர சொரூபமேயானாலும் ஒவ்வொரு கால பாகத்தில் ஒவ்வொரு தெய்வீகத் தன்மையைக் காண முடிகிறது. ஜோதிர்கணங்களின் பிரபாவம் அந்தந்த கால பரிமாணத்தில் மேல் இருந்தே தீரும். எனவே தான் நம் ஹிந்து சம்பிரதாயத்தில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் சிறப்பு உள்ளது. புராண நூல்களுள் பன்னிரண்டு மாதங்களுக்கு பிரத்யேக மகிமைகளை விளக்கும் சிறு புராணங்கள் உள்ளன. கார்த்திகை புராணம், மாக (மாசி) புராணம் போன்றவை.

வேதங்களில் யக்ஞம் போன்ற அனுஷ்டானங்களுக்குக் கூட வெவ்வேறு பருவ காலங்களில் வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை சாதாரண மக்கள் கூட அனுசரிக்கும்படி எளிமையாக்கித் தந்து  புராணங்கள் உதவுகின்றன. கார்த்திகை, மாகம் (மாசி), சிராவணம் (ஆனி, ஆடி) போன்ற மாதங்களில் பிரத்யேக தர்ம காரியங்களைச் செய்யும்படி விதித்துள்ளன.

கார்த்திகை மாதம் என்றவுடனே விடியற்காலையில் எழுந்து ஸ்னானம் செய்வது. இரண்டு சந்தியா சமயங்களிலும் சிவாலயம், விஷ்ணு ஆலயம் மற்றும் அனைத்து கோயில்களிலும் விளக்கேற்றுவது, நதி, குளங்களில் விளக்குகளை ஏற்றி மிதக்கவிடுவது... அப்பப்பா! ஒரே கோலாகலம்தான்!

இளங்குளிரில் சோம்பலை உதறிவிட்டுச் செய்யும் நீராடல், சின்னச் சின்ன தீபங்கள் நீரலைகளில் மிதக்கையில் தோன்றும் அழகு. இயற்கையழகில் தெய்வத் தன்மையை பிரதிஷ்டை செய்து காண்பிக்கும் ஹிந்து மதத்திலுள்ள தெய்வீகக் கலையின் சாதுர்யம் போற்றப்பட வேண்டியதே!

கார்த்திகை மாதத்தில் நம்நாடு பிரத்யேகமாக ஆன்மீக சைதன்யத்தோடு பிரகாசிக்கிறது. அவரவருக்குத் தகுந்த நியமங்களை அவரவர் கடைபிடித்தபடி தெய்வத்தை வணங்குகின்றனர்.

கார்த்திகை தீபத்திற்கும், மாகமாதம் ஸ்நானத்திற்கும், வைகாசி தானத்திற்கும் முக்கியமானவை. கார்த்திகையில் வரும் சதுர்த்தி, துவாதசி, பௌர்ணமி, சோம வாரங்கள் முக்கியமான பண்டிகை நாட்கள். சிலர் மாதம் முழுவதும் ‘நக்த விரதம்’ மேற்கொள்வர், (‘நக்தம்’ - என்றால் ‘இரவு’ என்று பொருள். இரவில் மட்டுமே உணவு உண்ணுவது ‘நக்த விரதம்’) சிவ. கேசவ, தேவீ பக்தர்களுக்கு இது பிரத்யேகமான சாதனை மாதம்.

இந்த மாதத்தில் விஷ்ணுவை தாமோதர நாமத்தால் பூஜிப்பர். மார்கழியில் ‘கேசவ’ நாமத்தில் ஆரம்பித்து வரிசையாக பன்னிரண்டு நாமங்களால் ஒவ்வொரு மாத சுக்லபட்ச ஏகாதசி அன்றும் விஷ்ணுவை வழிபடுவது சம்பிரதாயம். அந்த வரிசையில் கார்த்திகை சுக்லபட்ச ஏகாதசி ‘தாமோதர’ நாமத்தினுடையது. எனவேதான் அந்த மாதத்திற்கே ‘தாமோதர  மாதம்’ என்றொரு பெயருண்டு. கார்த்திகையில் ‘பிருந்தாவன விரதம்’ சிறப்பானது. இந்த மாதத்தில் பிருந்தாவனத்திற்கு அடையாளமாக துளசிச் செடியை வழிபடுவது என்பது கார்த்திகை மாதத்தில் எல்லா இடங்களிலும் காணமுடிகிறது.

துளசி, தாத்தி (நெல்லி) - சமேதமாக விஷ்ணுவை பூஜித்தல் இம்மாதத்து வழக்கம், விருட்சங்களில் உள்ள தெய்வீகத் தன்மையை தரிசிக்கும் சம்பிரதாயத்திலுள்ள சிறப்பிற்கு இது எடுத்துக்காட்டும்.இன்னுமொரு சிறப்பு ‘வன போஜனம்’. இது சமுதாய ஒற்றுமைக்குச் சின்னம். உண்மையில் இதற்குக்கூட ஒரு சம்பிரதாய முறை உண்டு. பவித்ரமான விருட்சங்கள் உள்ள வனத்தையடைந்து துளசி.

வில்வம், நெல்லி போன்ற மரங்களில் சந்நதியில் தெய்வ பூஜை செய்து, சமைத்து, நிவேதனம் செய்த ஆகார பதார்த்தங்களை போஜனம் செய்வது வழக்கம். இனி, கார்த்திகை, சுக்ல பட்ச ஏகாதசிக்கு பிரத்யேக சிறப்பு உள்ளது. அதனை ‘உத்தான ஏகாதசி’ என்பர். இந்த நாளில் ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவருக்கு சிறப்பான பலன் கிடைக்குமென்பது சாஸ்திரம், மார்கழியில் தொடங்கிய ஏகாதசி விரதத்திற்கு கார்த்திகையில் ஓராண்டு காலம் பூர்த்தியாகிறது. எனவேதான் இதற்கு முக்கியத்துவம்.

இதன் பிறகுவரும் துவாதசிக்கும் முக்கியத்துவம் உள்ளது. இதனை ‘க்ஷூராப்தி துவாதசி’ என்பர்.பாகவத்தில் அம்பரீஷரின் சரித்திரம் உள்ளது. அம்பரீஷர் இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொண்டதை அழகாக விவரிக்கிறார். மேலும்,  பிருந்தாவனத்திலேயே இதனை மேற்கொண்டதாகவும் வர்ணித்துள்ளார். ஆனால், அப்போது கிருஷ்ணாவதாரம் நடந்திராவிட்டாலும் பண்டைக் காலம் முதலே இது ‘விஷ்ணு தாமம்’ என்று அழைக்கப்படுகின்றது. துருவன் கூட முதல் மன்வந்திரத்தின் கிருத யுகத்தில் பவித்ர பிருந்தாவனத்திலேயே தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த பண்டைய விஷ்ணுக்ஷேத்திரத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்து தன் நாராயண குணங்களை லீலைகளாக நடத்திக் காட்டினார்.

கார்த்திகை பௌர்ணமி இன்னுமொரு அற்புதம். சரத்கால பௌர்ணமியான இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி ஆன்மிக, யோக சாதனைகளுக்கு விசேஷமானது. தியானம், அர்ச்சனை போன்றவை இந்த நாட்களில் அற்புத பலன்களை அளிக்கும். இந்தப் பௌர்ணமியன்று விசேஷமாக தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பானது. இதனையே ‘தேவி தீபாவளி’ என்பர். ஐப்பசி பௌர்ணமி. கார்த்திகை பௌர்ணமி - இந்த இரண்டுமே சரத்கால பௌர்ணமிகள். இந்த பௌர்ணமியன்றுதான் ராசலீலை மகோத்சவம் நடந்தது.

யோக சுத்தர்களான ஜீவர்களே கோபிகைகள். அவர்களை பரமாத்மா அனுக்கிரகித்த ‘மோக்ஷப்பிரதான லீலை’ யே ராச லீலை. இந்தப் பௌர்ணமி தேவி ஆராதனைக்குக் கூட உகந்தது. ‘சகஸ்ரார சந்திரகலா சொரூபிணி’யான லலிதா மகா திரிபுசுந்தரியை இந்த பண்டிகை தினத்தில் வழிபட வேண்டும்.

கிருத்திகா நட்சத்திரம் உள்ள நாளில் பௌர்ணமி வரும் மாதம் கார்த்திகை மாதம். ‘கிருத்திகா’’ அக்னி நட்சத்திரம். அக்னியிடம் ஈஸ்வர சொரூபத்தை வெளிப்படுத்தி வழிபடுவதே யக்ஞம் எனப்படுகிறது. எனவேதான், வேதங்களில் ‘நக்ஷத்ரேஷ்டி’ என்பது கிருத்திகா நட்சத்திரத்துடன் தொடங்குகிறது. அந்த யாக தத்துவத்திற்கு சங்கேதமாகவே ‘தீபாராதனை’ என்பது (விளக்கேற்றுதல்) கார்த்திகை மாதத்தில் பிரதானமாகியது.

கார்த்திகையில் தீபார்ச்சனை, தீபதானம் போன்றவை யக்ஞ பலன்களை அளிக்க வல்லது. கார்த்திகை சோமவாரம் போன்றவை சிவ ஆராதனையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றன. ‘கார்த்திகை’ என்றாலே நமக்கு சிவனே நினைவுக்கு வருகின்றார். சிவக்ஷேத்ரங்களில் மிக விசேஷமான வைபவங்களைக் காணமுடிகிறது.

காசி போன்ற வடக்கிலுள்ள சைவ தீர்த்தங்கள் எல்லாம் சிவசோபையுடன் விளங்குகின்றன.கிருத்திகா நட்சத்திரத்தில் பிறந்தவரான யக்ஞாக்னி சொரூபன் சுப்ரமணியரின் ஆராதனைக்கும் இம்மாதம் சிறப்பானது, ‘குமார தரிசனம்’ என்ற பெயரில் கார்த்திகை பௌர்ணமியை குறிப்பிடுவார்கள். ஜோதிர்லிங்க சொரூபனரான சிவனுக்கு அடையாளமாக ஒவ்வொரு தீபமும் ஒரு ஜோதிர் லிங்கமாக பிரகாசிக்கையில் விஸ்வ வியாபகமாக உள்ள ஈஸ்வர ஜோதியை தரிசித்து, உபாசிக்கும்படி உபதேசிக்கும் மாதமிது.

Related Stories: