×

திண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்

காளஹஸ்தி, ஆந்திரா

நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் வேடர்கள் தலைவனானான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பேற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் வேட்டையாடப் புறப்பட்டான்.

அவனுடன் ஏனைய வேடர்களும் சென்றனர். அப்போது ஒரு காட்டுப்பன்றி வேட்டைக்குத் தோண்டியிருந்த குழிகளிலிருந்தும் வேடர்கள் விரித்து வைத்திருந்த வலைகளினின்றும் தப்பியோடியது.  திண்ணன், நாணன், காடன் ஆகிய மூவரும் பன்றியை துரத்திச் சென்றனர். அது வெகுதூரம் ஓடிச்சென்று திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. திண்ணன்  அதைக் கொன்று வீழ்த்தினான். பின்னர் திண்ணன் அந்தப் பன்றியைக் காடனிடம் கொடுத்து மூவரும் பசியாறுவதற்காகச் சமைக்கச் சொன்னான். காட்டுக்கும் மலைக்கும் அந்தப்பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர்.

அவ்வாறு காட்டைக் கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டான். ஓடிச்சென்று கட்டிப்பிடித்து லிங்கத்திற்கு முத்தமிட்டான். அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது. அப்போது காடன் வந்து காட்டுப் பன்றியைச் சமைத்து முடித்த செய்தியைச் சொல்லி மூவரும் உணவருந்தலாமென்று அழைத்தான். திண்ணன் இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் தன் வாயில் நிரப்பிக்கொண்டு, சிவனுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து தன் தலையில் சூடியெடுத்துக்கொண்டு, சிவனுக்குப் பசிக்குமே என்றெண்ணி மலையுச்சிக்கு விரைந்து சென்றான்.

சுயம்புவாகத் தோன்றிய அந்த சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களைத் தன் கால்களால் களைந்து வீசித் தன் வாயிலிருந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில் சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பணிந்தபின் தான் எடுத்து வந்த இறைச்சியை உணவாக அளித்தான். சூரியன் அஸ்தமனமாகிப் பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேடர்கள் தலைவன் திண்ணன், வனவிலங்குகள் இரவில் வந்து சிவனைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் அருகிலேயே தன் வில்லும் அம்பும் உடனாகக் காவலிருந்தான். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவனை விழுந்து வணங்கிவிட்டு அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான்.

அவன் சென்றவுடன் சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்நதியை மிகவும் சிரத்தையாகச் சுத்தம் செய்தபின் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்து வணங்கிவிட்டு, இப்படியொரு தகாத செயலைச் செய்தவனை நீ தான் அடையாளம் காட்டி அவனை அகற்ற வேண்டுமென்று சிவனிடம் முறையிட்டார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, அன்றிரவு சிவகோச்சாரியாரின் கனவில் சிவன் தோன்றி, “அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே! என்னுடைய அன்பே அவனை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான்.

அவன் செயல்கள் எனக்கு ஆனந்தமளிக்கின்றன. அவன் வாயிலிருந்து என் மேல் அவன் துப்பும் தண்ணீர் கங்கையைவிடப் புனிதமானது, அவன் தலையில் சூடிக்கொண்டுவந்து எனக்கு அளிக்கும் மலர்கள் தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களை விடப் புனிதமானவை. இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால் அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்!” அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈஸ்வரனின் சந்நதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார்.

அன்று ஏழாவது நாள்… திண்ணனார் அளவிலா பூஜைப் பொருட்களைக் கொண்டுவந்தார். சிவகோச்சாரியாருக்குத் திண்ணனாரின் அன்பைக் காட்டுவதற்காக சிவன் தன் முக்கண்ணில் ஒன்றிலிருந்து ரத்தம் கசியச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், அம்பும் வில்லும் இறைச்சியும் சிதற போட்டுவிட்டு, அஞ்சி அதிர்ச்சியடைந்து சிவனருகே ஓடிச்சென்று குருதியை நிறுத்த முயன்றார், ஆனால் அது நிற்கும்படியாக இல்லை. திடீரென்று ஒரு யோசனை உதிக்க, அம்பினால் தன் கண்ணைத் தோண்டியெடுத்து சிவனின் கண் இருக்குமிடத்தில் வைத்தார். உடனே ரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து வான் வரை குதித்துத் தான் செய்த வீரச்செயலையெண்ணி மகிழ்ந்தார்.

ஆனால் சிவபெருமானோ அவருடைய பக்தி இதைக்காட்டிலும் எல்லையற்றது என்பதை நிரூபிக்க முடிவெடுத்தார். அவர் வலது கண்ணில் குருதி நின்றதும் இடது கண்ணினின்று குருதி வழியத் தொடங்கியது. ஒரு கணம் அதிர்ச்சியடைந்த நாயனார், “ஓ… இப்போது தான் இப்பிணிக்கு மருந்து என்னவென்று எனக்குத் தெரியுமே… என்னிடம் இன்னொரு கண் உள்ளதல்லவா? அதுவே இதைத் தீர்த்து வைக்கும்!” என்று தெளிந்தார். முன்பு போலவே அம்பினால் கண்ணைத் தோண்டப் போனவர் அதையும் எடுத்துவிட்டால் கண்ணில்லாமல் (பார்வையிழந்த பின்) எப்படிச் சிவலிங்கத்தின் கண் எங்கேயிருக்கிறது என்று தேடி வைப்பது என்று குழம்பி அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார்.

அவர் காலைத் தூக்கிச் சிவலிங்கத்தின் கண் இருக்குமிடத்தைக் குறித்துக் கொள்வதற்காகத் தன் கால் கட்டை விரலை வைத்துக் கொண்டார். பின் அவர் அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டியெடுக்க எத்தனித்தார். இதைக் கண்ட சிவபெருமானுக்கே பொறுக்கமுடியாமல் கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் “ஓ… நில் கண்ணப்பா! நில் கண்ணப்பா!” என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் கண்ணப்பரின் அளவிலாப் பேரன்பையும் சிவபெருமான் அவருக்குக் கிட்டிய அருளையும் கண்டார். இத்தலமே காளஹஸ்தி. இத்தலம் ஆந்திரா மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தியில் உள்ளது.

- ச.சுடலைகுமார்

Tags : Kalahasti Nathan ,
× RELATED திண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்