ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர்

சீர்காழி, கடலூர்

சீர்காழியில் சிவபாத ஹிருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒரு குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள்புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தருக்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.

வழக்கம்போல் அன்றும் நீராட சிவபாத ஹிருதயர் கிளம்ப குழந்தை தானும் வருவேன் என அடம்பிடித்தது. மகனை உடன் அழைத்துச் சென்றார். மைந்தனைக் குளக்கரையில் இருக்கச்செய்து குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி குளிக்க ஆரம்பித்தார். தந்தையைக் காணவில்லை என குழந்தை குரல் கொடுக்க, அழுதகுரல் கேட்டு திருத்தோணிபுரத்துறையும் பெருமான் விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்த குழந்தைக்கு உண்ண அமுதுடன் சிவஞானம் கொடுக்கச் சொன்னார். பிராட்டியும் பொற் கிண்ணத்தில் இன்னமுதப்பால் பெய்து சிவஞானம் குழைத்து எடுத்து ஊட்டினார். குழந்தையின் அழுகை நின்றது.

குளித்து முடித்த தந்தை குளக்கரையில் தம் புதல்வன் எச்சில்பால் உண்டவாயும் கையிற் பொற்கிண்ணமுமாக இருப்பது கண்டு கோபம் கொண்டார். அருகிலிருந்த சிறுகோலை எடுத்து யார் கொடுத்தது என அடிக்க கை ஓங்கினார். குழந்தை தலைக்குமேல் விரல் ஒன்றினால் பரம்பொருளைச் சுட்டிகாட்டி ‘தோடுடைய செவியன்’ எனத்தொடங்கி பதிகம் பாடினார். 3 வயது குழந்தையை தன் தோளில் தூக்கிக்கொண்டு திருகோலக்க என்ற தலத்திற்கு சென்றார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தன் இறைவனை ‘மடையில் வாளை பாய’ என்ற பாடலை பாட கைத்தாளமிட்டதால் கைசிவக்க இறைவன் பொற்றாளம் கொடுக்க அன்னை ஓசை கொடுத்த நாயகியாக உலகெலாம் வியக்க தாளம் பெற்று பாடல் பாடினார். அப்படியே நனிபள்ளி சென்று வழிபட்டு சீர்காழி வந்தார்.

ஞானசம்பந்தன் புகழ்கேட்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் தன் துணைவி மதங்க சூளாமணியுடன் வர அவர்களை வரவேற்று இறைமுன் பதிகம் பாட பாணர் யாழ் இசைத்தார், தீண்டத்தக்காதவராய் இருந்த பாணரை ஞானசம்பந்தன் தம்முடன் யாழ் இசைக்க வைத்துக் கொண்டார். அவரை அழைத்துக்கொண்டு தில்லை சென்றார். வழியில் பாணர் ஊராகிய எருக்கத்தம்புலியூர் சென்றார், கொளுத்தும் வெய்யிலைப் பாராது மாறன்படி என்ற ஊரை அடைந்தார். பெருமான் அந்த ஊர் அடியார் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் என்பால் அனைகின்றான், அவனுக்கு முத்துச்சிவிகை மணிக்குடை சின்னம் அளியுங்கள் என்றார். பலதலங்களில் பதிகம் பாடி வழிபட்டு மீண்டும் சீர்காழி வந்தார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

Related Stories:

>