பிறைசூடியோனை வணங்கினால் பிரிந்தவர் சேர்வர்

?30 வயதாகும் என் மகனுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்படியே போனாலும் சம்பளம் வாங்கி நண்பர்களுக்கு செலவழித்து விடுவான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டால் அப்படித்தான் செய்வேன் என்று வீட்டு சாமான்களைப் போட்டு உடைப்பான். சகவாசம் சரியில்லை. பணத்தைப் பார்த்தால் எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வருகிறான். அவன் நல்லபடியாக வாழ வழி சொல்லுங்கள்.

- லதா, திருச்சி.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்த உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசியின் அதிபதியாகிய சுக்கிரன் ஆட்சி பலத்துடன் எட்டில் அமர்ந்திருப்பதும், லக்னத்தில் சந்திரனின் அமர்வும் அவரை சுகவாசியாக வாழ வைத்திருக்கிறது. மிகச்சிறந்த திறமைசாலியாக இருந்தாலும் அதனை சரியான வழியில் உபயோகப்படுத்திக் கொள்ளத்தெரியாமல் தடுமாறி வருகிறார். ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது அவரை சித்தன்போக்கு சிவன் போக்கு என்ற பாதைக்குள் திருப்பி விட்டிருக்கிறது. அதே நேரத்தில் பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டின் பலம் இவருக்கு நல்வாழ்வினை ஏற்படுத்தித்தரும். உங்கள் மகன் உள்ளூரில் இருக்கும் வரை அவரால் முன்னேற்றம் காண இயலாது. வெளியூருக்குச் சென்று உத்யோகத்தை அமைத்துக்கொள்ள வலியுறுத்துங்கள். பந்தபாசத்திற்கு அடிமையாகாமல் மகனின் நல்வாழ்வினைக் கருதி அவரிடம் சற்று கடுமையாக நடந்து கொள்ளுங்கள். அவருடைய எதிர்கால வாழ்வு என்பது சொந்த ஊரில் இருந்து தொலைதூரத்தில்தான் அமைந்திருக்கிறது. தற்போது நடந்து வரும் நேரமே நல்ல நேரம்தான். இப்பொழுது முயற்சி செய்தால் கூட உடனடியாக வேலை கிடைத்து விடும். வியாழன்தோறும் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி நரசிம்ம ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். 16 வாரங்கள் முடிவதற்குள் அவருடைய நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

“ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி

ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த

லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம குமாரஸ்ய தேஹி கராவலம்பம்.”

?கடந்த ஏழு வருடங்களாக குடும்பத்தை விட்டு தனியாக இருக்கிறேன். பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- குமார், சென்னை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. கேது தசை துவங்குவதற்கு முன்னால் இருந்து அதன் தாக்கமானது குடும்பத்தில் வெளிப்பட்டிருக்கிறது. குடும்பத்தை விட்டு நீங்கள் தனியாக வசிப்பதற்கான காரணத்தை நீங்கள் மிக நன்றாகவே அறிந்திருப்பீர்கள். ஜென்ம லக்னத்திலேயே நான்கு கிரஹங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் நீங்கள் மிகவும் வலிமை பொருந்தியவர் என்பதை உங்கள் ஜாதகம் நன்றாகவே எடுத்துக் காட்டுகிறது. மிதுன ராசியில் பிறந்திருக்கும் நீங்கள் பிரச்னையை சமாளிக்கும் திறனையும் கொண்டவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வது என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் மனது வைத்தால் இந்தப் பிரச்னையை எளிதாக தீர்த்துவிட முடியும். இருந்தாலும் கேதுவின் தசை நடந்துகொண்டிருப்பதால் உங்கள் மனம் அதற்கான வழியினைத் தேடவில்லை. 15.01.2021 முதல் உங்கள் மனதில் மாற்றத்தினை உணரத் துவங்குவீர்கள். அதனைத் தொடர்ந்து நீங்கள் செய்யும் முயற்சியின் மூலம் பிரிந்த குடும்பம் நிச்சயமாக ஒன்றிணையும். மனதளவில் எல்லோருடன் ஒன்றிணைந்து நீங்கள் செயல்படுவதற்கு இன்னும் ஓராண்டு பிடிக்கும். உங்கள் ஜாதக பலத்தின்படி 12.01.2022 முதல் குடும்பத்தினரோடு மகிழ்ச்சிகரமாக உங்கள் வாழ்க்கைப்பயணம் என்பது நல்லபடியாக சென்று கொண்டிருக்கும். தினமும் காலையில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை தியானித்து வணங்கி வாருங்கள். பிரிந்த குடும்பம் விரைவில் ஒன்றிணையும். “சண்டவிநாசன ஸகலஜனப்ரிய மண்டலாதீச மஹேசசிவ சத்ரகிரீட ஸூகுண்டல சோபித புத்ரப்ரிய புவனேசசிவ.”

?என் மகளுக்கு எட்டு வயதில் தொண்டையில் சதை வளர்ந்து ஆப்ரேஷன் செய்தோம். அன்று முதல் தற்போது 20 வயதாகும் வரை முடி கொட்டிக்கொண்டே இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் அவளது அத்தைகளால் கைவிட்டுப் போய்கொண்டு இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் என் மகளுக்கு கிடைக்குமா? இந்தப் பிரச்னைகளுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- ஹேமா, சென்னை.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளுக்கு தொண்டையில் டான்சில்ஸ் ஆப்ரேஷன் செய்ததற்கும் முடி தொடர்ந்து கொட்டுவதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதன் மூலமாக முடி கொட்டினாலும் மருந்தினை நிறுத்தியவுடன் இதுவும் சரியாகிருக்கும். ஆனால் முடி தொடர்ந்து கொட்டுவதன் காரணம் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுவின் தாக்கமாக இருக்கலாம். மற்ற எண்ணெய்களை விடுத்து அவரது தலைக்கு தொடர்ந்து நல்லெண்ணெய் தடவி வாருங்கள். செக்கில் ஆட்டிய எண்ணெய் ஆக இருக்கட்டும். ஒன்பதாம் வீட்டில் புதன் நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தினை அனுபவிக்கும் பாக்கியம் உங்கள் மகளுக்கு நிச்சயமாக உண்டு. உறவினர்களால் சொத்து விரயமாகிக் கொண்டிருக்கிறது என்றாலும் அதனால் பெருத்த அளவிலான நஷ்டம் ஏதுமில்லை. உங்கள் மனதைப் போட்டு வீணாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இவை எல்லாவற்றையும் விட அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீடு மிகவும் வலிமை பெற்றுள்ளது. ஸ்திரமான உயர்ந்த உத்யோகம் என்பது உங்கள் மகளுக்கு நிச்சயமாக கிடைத்துவிடும். அவரது சுயசம்பாத்யத்தின் மூலமாகவும் நல்ல வருமானமும் அந்தஸ்தும் உங்கள் மகளுக்கு கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். மகளின் எதிர்காலம் என்பது சிறப்பாகவே உள்ளது. ஜாதக பலம் நன்றாக இருப்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?என் மகளின் வாழ்வில் எல்லாமே தடங்கலாக உள்ளது. சிஏ படிப்பை இன்னும் முடிக்கவில்லை. அவள் விரும்பிய பையனுடன் பிரச்னை உண்டாகி தோல்வியை சந்தித்தார். நாங்கள் பார்த்த மாப்பிள்ளையும் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுவிட்டது. அதன்பின் அவரே ஒருவரை தேர்ந்தெடுத்து அதுவும் கல்யாணப்பேச்சு வரை சென்று நின்றுவிட்டது. இதனால் என் மகள் ஒரேடியாக திருமணமே வேண்டாம் என்கிறார். என் மகளின் ஜாதகத்தில் என்னதான் பிரச்னை? என்ன தீர்வு?

- வேலூர் வாசகி.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி,

மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. என்றாலும் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நீச பலத்துடன் சுக்கிரன் அமர்ந்திருப்பதும் ஏழாம் பாவக அதிபதி ஆகிய புதன் எட்டாம் வீட்டில் இடம் பெறுவதும் கடுமையான தோஷத்தினைத் தந்திருக்கிறது. அதோடு எட்டாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் இணைவும் இதுபோன்று திருமணத் தடையினை உண்டாக்கி வந்துள்ளது. உங்கள் மகளின் ஜாதகப்படி அவருக்கு வருகின்ற சித்திரை மாதத்திற்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும். அவ்வாறு நடத்தவில்லை என்றால் மேலும் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். திருமணம் என்பது எப்பொழுது நடந்தாலும் வாழ்க்கைத்துணையின் தரப்பிலிருந்து பெருத்த உதவி எதையும் எதிர்பார்க்க இயலாது. அதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் அப்படியே இருந்துவிடுவதாகச் சொல்வதும் கூடாது. விதிப்பயன் என்பதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். உங்கள் குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்துகொண்டு நல்லபடியாக திருமணத்தை நடத்துங்கள். கூடவே உங்கள் மகளை தனது படிப்பிலும், உத்யோகம் பார்ப்பதிலும் கூடுதல் கவனத்தை செலுத்தச் சொல்லுங்கள். அவரது சுயசம்பாத்யம் மட்டுமே அவருக்கு உரிய கௌரவத்தைப் பெற்றுத்தரும் என்பதை அவருக்கு புரிய வையுங்கள். உங்கள் மகளின் ஜாதகப்படி குலதெய்வ ஆராதனை என்பது மட்டுமே அவரது பிரச்னையைத் தீர்க்கும் பரிகாரமாக அமைந்துள்ளது. இறையருளால் விரைவில் கெட்டிமேளம் கொட்டட்டும். மகளின் நல்வாழ்வு மலரட்டும்.

Related Stories:

>