அழலான அண்ணாமலையாரும் சொக்கப்பனையும்...

சிவபெருமான் மகா அக்னியின் வடிவமாக விளங்குகின்றார். விண்ணிற்கும், பாதாளத்திலும் பரந்து நிற்கும் பெரிய நெருப்புத் தூணாகச் சிவபெருமான் நின்றதைப் பல்வேறு புராணங்கள் சிறப்புடன் கூறுகின்றன. திருவண்ணாமலைத் தலபுராணம் இதனைத் தனிச்சிறப்புடன் குறிக்கின்றது. இதன்படி, ஒருசமயம் பிரம்மனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டியிட்டுப் போர் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே சிவபெருமான் பெரிய நெருப்புத் தூணாக நின்றார். அந்தத் தூணின் உச்சி வானுலக எல்லையைக் கடந்தும், அதன் அடி பாதாளத்தை ஊடுருவியும் நின்றது. புதியதாகத் தோன்றிய அந்த நெருப்புத் தூணைக் கண்டதும் திருமாலும் பிரம்மனும் எல்லையற்ற ஆச்சர்யம் அடைந்தனர். தம்முள் நடைபெற்ற சண்டையை நிறுத்திவிட்டு ஏதும் பேசாது நின்றனர். பிறகு நம்முள் சண்டையிட வேண்டாம்.

இதன் அடியையும் முடியையும் தேடுவோம். யார் முதலில் அதைக் காண்கின்றாரோ அவரே பெரியவர் என்று ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். பின்னர் பிரம்மன் பெரிய அன்னத்தின் வடிவம் தாங்கி பெருத்த ஆரவாரத்துடன் விண்ணில் பறந்து முடியைத் தேடப் புறப்பட்டான். திருமால் பன்றி உரு கொண்டு பூமியை அகழ்ந்து அதன் அடியைத் தேடிச் சென்றார். காலங்கள் பல கழிந்தன. இறுதியில் அயர்ந்து தளர்ந்துபோய் பிரம்மனும், திருமாலும் அந்த நெருப்புத் தூணின் அடியையும் முடியையும் காணாது சோர்ந்து வீழ்ந்தனர். அந்தத் தூணினின்று சிவபெருமான் வெளிப்பட்டு இருவரையும் நோக்கினார். அவர்கள் தங்கள் உண்மை நிலையை உணர்ந்தனர். சிவபெருமானே பெருந்தலைவன் என்று அறிந்து அவரைத் துதித்தனர். பின்னர், சிவபெருமான் நெருப்பு மலையாக இருந்த தனது நிலையை மாற்றிப் பொன் மயமான மலையாக மாறி அவர்களுக்குக் காட்சி தந்தார்.

இதனை நினைவுகூரும் வகையில் கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துதல் என்ற வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 10 முதல்  20 அடி உயரம் வரையுள்ள பனை மரத்தினை நட்டு அதனைச் சுற்றிலும் பனையோலைகளை கட்டி கூம்பு வடிவில் அமைப்பர். பொதுவாக ஒற்றைக் கூம்பே அமைப்பது வழக்கம். சில தலங்களில் சுவாமி அம்பிகை ஆகிய இருவரையும் நினைவூட்டும் வகையில் இரண்டு கூம்புகளை அமைக்கின்றனர். கார்த்திகை தீபத் திருநாளன்று மாலையில் சூரியன் அஸ்தமித்த ஒரு நாழிகைக்குள் (சுமார் 6 மணி அளவில்) சிவமூர்த்தியைப் பரிவாரங்களுடன் இதன் முன்னே எழுந்தருள வைத்து இந்தக் கூம்பு வடிவச் சொக்கப்பனைகளை சிவமாகவே பூசிப்பர். பின்பு அவை கொளுத்தப்படும். அந்நிலையில் அவை ஓங்கி கொழுந்து விட்டு எரியும். அந்தத் தீயை வானுக்கும் மண்ணுக்கும் இடையே தழல் வடிவாய் நின்ற சிவபெருமானாகவே போற்றி வழிபடுவர்.

பின்னர் அத்தீயின் எஞ்சிய சாம்பலைப் பிரசாதமாகக் ஏற்றுக்கொள்கின்றனர். இந்தச் சாம்பலை வயலில் தெளித்தால் அது நன்கு விளையும் என்று நம்புகின்றனர். இந்தக் கரியிலிருந்து செய்யப்படும் சாந்தினை அணிந்துகொள்வது உண்டு. சிவாலயங்கள் அனைத்திலும் கார்த்திகை மாதத் கிருத்திகை நாளில் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்தி அப்பொழுது எரியும் அக்னியைச் சிவவடிவமாகப் பூசித்து விழா கொண்டாட வேண்டுமென்று பூஜாபத்ததி நூல்கள் கூறுகின்றன.

மலைநாடுகளில் உள்ள பழங்குடியினரிடத்தில் கார்த்திகை விழாவும் சொக்கப்பனை கொளுத்துதலும் தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. நெருப்பு வடிவமாக மலை போலவும் நெடுந்தூண் போலவும் நின்ற சிவபெருமானைத் தேவாரம் திருவாசகம் முதலியன சிறப்புடன் பேசுகின்றன.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

>