×

பலன் தரும் ஸ்லோகம் (தம்பதியர் ஒற்றுமை ஓங்க)

சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ
- கவிராஜ பண்டிதரின் ஸெளந்தர்ய
லஹரி தமிழாக்கம்

பொதுப் பொருள்: சிவசக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சீவன் சிவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தட்சிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். அந்த சித்சக்திதான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக் கிடக்காமல் வெளியே வந்தால்தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் பிரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும். ஆகையால், சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக் காத்து ரட்சிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம். இந்தத் துதியை பாராயணம் செய்து வந்தால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். சகல நலன்களும் கிட்டும்.

Tags : Couple Unity Onga ,
× RELATED காமதகனமூர்த்தி