×

வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு சென்னயில்  வசிக்கும் எனக்கு சிறுவயது முதலேயே திருப்பதி பெருமாளின் மேல் மோகம்.  அனவரதமும் பெருமாளையும் தாயாரையும் நினைத்த வண்ணம் இருப்பேன். புதுவீடு  கட்ட டாக்குமெண்ட்ஸ் ரெடியாகியது. அதை எப்படியாவது திருமலை ஆலயத்திற்குள்  எடுத்துச் சென்று மலையப்ப ஸ்வாமியிடம் மானசீகமாக ஆசிர்வாதம் வாங்க எண்ணம்  கொண்டேன். கீழ்த்திருப்பதி சென்று தாயாரை தரிசித்துக் கொண்டிருந்தேன். கண்களில் பரவசமிகுதியால் ஆனந்தக் கண்ணீர். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உழைத்து முன்னேற திருவருள் தந்தாய் தாயே அலர்மேல்மங்கையே என மனமுருக  நின்றபோது கருவறையிலிருந்து பட்டர்  என்னை அழைத்து மாலை, குங்குமம் தந்தார். மிக்க ஆச்சரியத்துடன் அதைப் பெற்றுக்கொண்டு அலிபிரிக்குச் சென்றேன். 72 மணி நேரம் கழித்துதான் தரிசனம் என்றார்கள்.

வேங்கடவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அவன் நாமத்தைக் கூறியபடியே மலை ஏறினேன். நான் உண்டியலிடம்  நெருங்கியதும், அன்றுதான் உண்டியலையும் மாற்றினர். திருமலையின் வழக்கப்படி உண்டியல் நிரம்பியதும் அதை மாற்றும்போது யார் அருகில் உள்ளாரோ அவரை   சாட்சியாக பெருமாளை மிக அருகில் நின்று தரிசனம் செய்ய அனுமதிப்பர். அன்று  பெருமாளின் பெருங்கருணையால் எனக்கு அந்த பாக்கியம் கிட்டியது. நம்பினார்  
கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு என்பதை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

 - முரளிதரன், சென்னை - 15.

மருதமலையான் அருளியமழலைச் செல்வம்

என்னுடைய பெயர் சோனியா தேவி, நான் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் முடிந்த நாள் முதல் நான் மனமாற வேண்டுவது அந்த மருதமலையானைத்தான். சிறு வயதிலிருந்தே எனக்கு முருகன் மீது ஒரு அளவு கடந்த பக்தி உண்டு. அதன்பொருட்டே எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது. அன்பான கணவர், அழகான ஆண் குழந்தை கிடைத்தது. இருப்பினும் என் கணவர் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத மலையில் வீற்றிருக்கும் மருதாசல மூர்த்தியை முழுமனதோடு நம்பினேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மருதமலைக்கு சென்று என்னுடைய பிரார்த்தனையை முருகன் முன்வைத்தேன். மாயவன் மருமகன் மால்முருகன் அருளால் இரண்டாவதாக எனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நம்பிக்கை கொண்டு ஒரு தெய்வத்தின் மீது பற்றோடு இருந்தால் நிச்சயம் அது பலனளிக்கும் என்பது உண்மை. என் வாழ்நாளிலும் அது நடந்தது என்பதை ஆன்மிக மலர் மூலம் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

- சோனியாதேவி, பீளமேடு, கோவை.

பட்டம் பெற வைத்த நீலகண்டர்

நான் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் எல்லா செமஸ்டர் தேர்வு எழுதும் போதும். எங்கள் வீட்டருகே இருக்கும் பல்லாவரம் பெருமாள்நகர் திருநீலகண்டர் சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானையும், அம்பாள் திரிபுர சுந்தரியையும் மனதார வேண்டி வந்தேன். அதன் பயனாக எல்லா செமஸ்டர் தேர்விலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று பி.காம் படிப்பில் பட்டம் பெற்றுள்ளேன். இதற்கு காரணம் நான் வணங்கி வந்த நீலகண்டர் தான். என்னை படிக்க வைத்து, படித்ததை நினைவில் வைத்து எழுத வைத்தவர் திருநீலகண்டரே என்றால் மிகையாகாது.

 - கே. ராஜேஷ், சென்னை.

என்னை தளவாய் ஆக்கிய தளவாய்மாடன்

தளவாய் என்றால் காப்பாளன், வீரன் என்று பொருள் உண்டு. என்னுடைய பெயர் தளவாய் என்னுடைய சொந்த ஊர் தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் ஆகும். நான் இந்திய ராணுவத்தின் CRPFல் பணிபுரிகிறேன். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தில் பிறந்த நான், இப்போது மத்திய அரசாங்கத்தில் வேலை பார்ப்பதற்கு காரணம் என்னுடைய குலதெய்வம் நான் வணங்கும் தெய்வம் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் வீற்றிருக்கும் தளவாய் மாடசாமி ஆகும்.  நான் பிறக்கும் பொழுதே வலது காலில் ஒரு கட்டியுடன் பிறந்தேன். நெல்லை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில்  தான் எனக்கு ஆப்ரேஷன் செய்து, அந்த கட்டியை அகற்றினார்கள். அதன்பின்பு பள்ளி, கல்லூரி படிப்பு என எல்லாம் முடிந்து சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன் 7,000 ரூபாய் சம்பளத்திற்கு. சென்னையில் இருக்கும் பொழுது மிகவும் கஷ்டம். வாழ்க்கையை நடத்துவதே சற்று சிரமமாக இருந்தது. அப்பொழுதுதான் உடன் பணிபுரியும் நண்பர் ஒருத்தர் சொல்லியிருந்தார் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் வெளிவந்துள்ளது அதை நீ, நிரப்பி போடு உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்குமென்று அதன்படியே என் குலதெய்வம் தளவாய் மாடன் மீது முழு நம்பிக்கை கொண்டு நானும் வேலைக்கு அப்ளை செய்தேன்.

உடல்தகுதி தேர்வு எழுத்துத்தேர்வு எல்லாம் முடிந்து மெடிக்கலில் நிராகரித்து விட்டார்கள் செய்வதறியாது திகைத்தேன் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். மனம் வருந்தி அவர் சந்நதி முன் நின்றேன். அப்போது தளவாய்மாடனுக்கு சாமியாடும் நபர், தளவாய் மாடனுக்கு அணிவித்திருந்த மல்லிகைப்பூவை என்னிடம் கொடுத்து நீ, நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும். நான் உன்னோடு இருக்கிறேன். நம்பிக்கையோடு போ என்று சொன்னார். மறுபடியும் மெடிக்கல் அப்ளை செய்தேன் தளவாய் மாடனுடைய அருளால் எனக்கு வேலை கிடைத்தது. தெய்வத்தை மட்டுமே நம்பினேன் என் வாழ்க்கையில் இன்று  திருமணமாகி ஒரு குழந்தையுடன் நல்ல நிலைமையில் உள்ளேன். எல்லாவற்றுக்கும் காரணம் என் குலதெய்வம் தளவாய் மாடசாமி தான்.

- தளவாய், கீழ ஆம்பூர், தென்காசி.

தொழில் நிமித்தம் தந்த ஞானி

* குமராண்டி ஞானியார் சுவாமிகள், சித்தர் ஜீவ சமாதியாகி லிங்க ரூபமாக  அருள்கிறார். அவர் தான் என்னையும் எங்கள் குடும்பத்தினரையும் வழி  நடத்துகிறார். என் வாழ்வில் அவரின்றி ஓர் அணுவும் அசையாது. எனக்கு தினமும்  காலையில் அவர் புகைப்படத்தை தரிசித்தால் தான் நிம்மதி என்னுடைய  பூஜை  அறையில் மணிபர்ஸ் ல் சிறு புகைப்படமாகவும், ஸ்மார்ட்போன் கவர்  புகைப்படமாகவும் வைத்துள்ளேன். எப்பொழுதும் தரிசித்துக் கொண்டே இருப்பேன்.  அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம். ஜீவ சமாதியான நட்சத்திரம் திருவோணம். என்னுடைய  ஜென்ம நட்சத்திரம் திருவோணம். நல்ல தொழில் அமையாமல் சிரமத்திலிருந்தேன்.  அவரை விடாமல் துயரத்திலும், மகிழ்ச்சியிலும் நினைத்து வணங்கி வந்தேன். அதன்  காரணமாக எனக்கு நல்ல தொழிலும், நல்ல வாழ்க்கையும் அமைந்தது.

- லெட்சுமணன் சோமசுந்தரம் என்ற நாஞ்சில் வீராகுலசேகரபுரம், கன்னியாகுமரி.

வாசகா்கள் தங்கள் ஆன்மிக அனுபவங்களை புகைப்படத்துடன் சேர்த்து எழுதி அனுப்புங்கள்.

தினகரன் ஆன்மிக மலா்
229, கச்சேரி  சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?