×

நல்ல சம்பந்தம் அமையும்!

?29 வயது முடிந்தும் என் மகளுக்கு திருமணம் தடைபட்டு வருகிறது. இதனால் வீட்டில் நிம்மதி இல்லாமல் போகிறது. மாப்பிள்ளைக்கு மூத்த சகோதரர் இல்லாமல் இருக்க வேண்டுமா? திருமணம் நடக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்?
- கலா, கோவை.


கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்ர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி சனி ஆறில் அமர்ந்திருப்பது சற்று தாமதத்தை உண்டாக்குகிறது. புதன் மற்றும் குருவின் வக்ர நிலையும் ஒரு விதத்தில் திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. தற்போது ராகு புக்தி நடந்தாலும் ராகுவின் அமர்வு நிலை சாதகமாக உள்ளதால் இந்த நேரத்தில் திருமணம் நடந்துவிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் மாப்பிள்ளையின் அண்ணனுக்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.

மூத்த சகோதரர் இல்லாத வீட்டில்தான் மாப்பிள்ளை தேட வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாது. களத்ரகாரகன் சுக்கிரன் ஒன்பதாம் வீடாகிய பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல சம்பந்தம் தேடி வரும். வெள்ளிக்கிழமை தோறும் ராகுகால வேளையில் அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆறு முறை சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். ஆறு வாரங்கள்விடாமல் தொடர்ந்து செய்து வர விரைவில் நல்ல சம்பந்தம் அமைந்துவிடும். கவலை வேண்டாம்.

“யாதேவி ஸர்வ பூதேஷூ மாங்கல்ய ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

?32 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் மது பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டார். எப்பொழுது இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவார்? அவருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டா? திருமணம் நடந்து நல்லபடியாக வாழ உரிய பரிகாரம் கூறுங்கள்.
- ஜோதிமணி, ஈரோடு.


ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் களத்ர தோஷம் என்பது வலிமை பெற்றிருப்பதால் திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். முதலில் அவரை நல்வழிப்படுத்த முயற்சியுங்கள். வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி முதல் சற்று சிரமமான சூழலை சந்திக்க உள்ளார். குறிப்பாக அவரது மன நிலைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியது அவசியமாகிறது. வேலை ஒன்று மட்டுமே அவரது புத்தியை ஸ்திரமாக வைத்திருக்கும். தற்போதைய சூழலில் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. தனியார் வேலையாக இருந்தாலும் தினமும் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும். உள்ளூரில் இருப்பதை விட வேற்று மொழி பேசும் மாநிலத்திற்கு அவரை வேலைக்குச் செல்ல அறிவுறுத்துங்கள். தூரத்து உறவினர் ஒருவர் மூலம் அதற்கான வாய்ப்பு வந்து சேரும்.

வெளியூரில் வேலைக்குச் செல்வதன் மூலம் தீய பழக்கத்திலிருந்து மெல்ல விடுபடுவார். அவரது ஜாதக பலத்தின்படி 2023ம் ஆண்டு வைகாசி மாத வாக்கில் திருமணம் நடந்து விடும். அவர் தனது தொழிலை எந்த ஊரில் அமைத்துக் கொள்கிறாரோ அதே ஊரில் பெண் அமையும். இன்னும் இரண்டரை வருட காலத்திற்கு சோதனையான நேரம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவரை அணுகுவது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று எலுமிச்சம்பழத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து வாங்கிச் சென்று அதன்சாறினை பிழிந்து அவரை அருந்தச் செய்யுங்கள். விடாமல் வாரந்தோறும் தொடர்ந்து செய்து வாருங்கள். நான்கு மாத காலத்திற்குள் மகனின் நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

?நான் காதல் திருமணம் செய்து கொண்ட இரண்டு நாட்கள் கழித்து பெரியவர்கள் சம்மதத்துடன் முறைப்படியாகவும் திருமணம் நடந்தது. எனக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை ஏழு மாதத்தில் பிறந்து இறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு பெண் குழந்தையும் ஏழு மாதத்தில் பிறந்து இறந்துவிட்டது. அடுத்த குழந்தை நல்லபடியாக பிறக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- லோகநாதன், சேலம்.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் பிள்ளைப்பேற்றினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சந்திரன், செவ்வாய், கேது ஆகிய கிரஹங்கள் இணைவினைப் பெற்றிருப்பது தோஷத்தினைத் தந்திருக்கிறது. அதோடு புத்ர காரகன் குருவின் வக்ர சஞ்சாரமும் அதனை உறுதி செய்கிறது. என்றாலும் ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் நிகழ்வுகளே பரிகாரமாக அமைந்துவிட்டது. அடுத்து பிறக்க உள்ள பிள்ளை நல்லபடியாக பிறக்கும் என்ற நம்பிக்கையை உங்கள் மனைவிக்கு ஏற்படுத்துங்கள். இந்த வருடத்தில் வரவுள்ள கந்தசஷ்டி (தீபாவளி அமாவாசையைத் தொடர்ந்து வருகின்ற சஷ்டி) நாள் முதல் தம்பதியர் இருவரும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

பிரதி மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை சஷ்டியில் விரதமிருப்பதை வழக்கத்தில் கொள்ளுங்கள். வீட்டிலிருந்தபடியே திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு ஒற்றை ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைத்து நேர்ந்து கொள்ளுங்கள். குழந்தை நல்லபடியாக பிறந்ததும் குடும்பத்துடன் வந்து செந்தில்ஆண்டவனை தரிசிப்பதாக பிரார்த்தனை அமையட்டும். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம் அகத்தே உள்ள கர்ப்பப்பையில் குழந்தை நல்லபடியாக உருவாகக் காண்பீர்கள். வரும் 2021- ல் உங்கள் வாரிசு கையில் தவழ்ந்துகொண்டிருக்கும்.

?எனக்கு இரண்டு பையன், ஒரு பெண். என் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தும் திருமண வாழ்க்கை சரியில்லாமல் போனது. சொந்த வீடும் கடனில் உள்ளது. என் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. என் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமையவும், கடன் தொல்லை தீரவும் பரிகாரம் கூறுங்கள்.
- சரஸ்வதி, ராமநாதபுரம்.


ஆயில்யம், மகம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்துள்ள உங்கள் பெண் மற்றும் பிள்ளைகளின் பிறந்த தேதிகளில் உள்ள கிரஹ நிலைகளை ஆராய்ந்து பார்த்ததில் பரம்பரையில் சாபம் உள்ளதாகத் தெரிய வருகிறது. அதோடு நீங்கள் இருக்கும் வீடு மூன்று தலைமுறையாக வாழ்ந்த வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதனின் நல்வாழ்விற்கு என்று ஒரு கால அளவு உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிற்கும் கால அளவு என்பது உண்டு. அரசர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பார்த்தால் இந்த வரலாறு புரியும். அரண்மனையாகவே இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாற்றம் செய்ய வசதி இல்லாவிட்டால் அதனை விற்றுவிட்டு வேறு இடம் வாங்கி அதில் குடியேற வேண்டும்.

வீட்டை விற்க மனமில்லை எனில் சாஸ்திரம் அறிந்த பெரியோர்களை வீட்டிற்கு வரவழைத்து தோஷத்தினைப் போக்க முயற்சியுங்கள். முதற்கட்டமாக சதுஷ்ஷஷ்டி பைரவர் மற்றும் யோகினி பூஜையை வீட்டினில் செய்யுங்கள். இந்தப்பூஜையின் மூலம் வீட்டினில் இருந்து வரும் அடிப்படை குறைபாடுகள் கண்ணிற்குத் தெரிய வரும். அதனைத் தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் வாங்கிக் கொண்டிருக்கும் பரம்பரை சாபத்தின் வீரியத்தைக் குறைக்க தான, தருமங்கள் செய்ய முயற்சியுங்கள். தான, தருமங்கள் மூலமாக மட்டுமே உங்கள் குடும்பத்தில் இழந்த நிம்மதியை மீட்டெடுக்க முடியும்.

?நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சாரைப்பாம்பு புகுந்துவிட்டது. டாய்லட், பாத்ரூம், கிச்சன் தவிர வேறு இடங்களுக்கு அந்த பாம்பு வரவில்லை. சமையலறையில் உப்புச்சட்டியை தள்ளிவிட்டு சட்டி உடைந்துவிட்டது. பால் காயவைத்து இருந்த பாத்திரத்தையும் தள்ளி பாலை கொட்டிவிட்டது. அதனை உயிருடன் பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டுவிட்டோம். வீட்டினுள் பாம்பு வந்ததற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
- ரங்கம்மாள், நீலகிரி.


சாரைப்பாம்பினை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுவிட்டதால் சிறப்பு பரிகாரம் ஏதும் தேவையில்லை. அதே நேரத்தில் பாம்பு தள்ளிவிட்டு உப்புச் சட்டி உடைந்ததும், பால் கீழே கொட்டியதும் நல்ல சகுனங்கள் அல்ல. வீட்டினில் சுபபலம் என்பது குறைந்து கொஞ்சம், கொஞ்சமாக துர்தேவதைகளின் ஆதிக்கம் கூடி வருவதற்கான அறிகுறியாக அமைகிறது. குறிப்பாக வீட்டினில் திருமண வயதினை எட்டியும் கல்யாண வாழ்வு கூடிவராமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் வகையில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மீது கூடுதல் கவனம் கொள்ளுங்கள்.

ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சாஸ்திரம் கற்றவர்களை வைத்து வீட்டினில் சர்ப்ப சாந்தி பூஜையை நடத்துங்கள். ஒரு மாதத்திற்கு தினந்தோறும் வீட்டு வாயிலில் கல்உப்போடு கலர்பொடிகளை கலந்து உப்புக் கோலம் போட்டு வாருங்கள். முதல்நாள் போட்ட கோலத்தில் உள்ள உப்பினை நீரில் கரைத்து மறுநாள் வீட்டினைச் சுற்றி தெளித்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதத்திற்குச் செய்து வாருங்கள். அதனைத் தொடர்ந்து வீட்டினில் சுபநிகழ்வுகள் நடப்பதோடு மனதில் உள்ள பயமும் நீங்க காண்பீர்கள்.

Tags :
× RELATED மனைவியுடன் உறவை கைவிட மறுத்த...