கவித்துவம் அருளும் ராஜமாதங்கி

ஸ்ரீசரஸ்வதி பூஜை 25-10-2020    

விஜயதசமி 26-10-2020

ஸ்ரீசரஸ்வதியின் மற்றொரு சொரூபமான ‘ஸ்ரீராஜமாதங்கி’ என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த அன்னை, ஸ்ரீதசமஹா வித்யைகளில் ஒன்பதாவதாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த தேவிக்கு சியாமளா, மந்திரிணி என்ற பெயர்களும் உண்டு. நகுலேஸ்வரி மற்றும் வாக்வாதினி இருவரும் இவளுடைய தோழியர்.

மதங்க முனிவரின் புத்ரியாக அவதரித்ததால் ‘மாதங்கி’ என அழைக்கப்பட்டார். ப்ரளய காலத்தில் மீண்டும் உலக ஸ்ருஷ்டி ஏற்படுவதற்காக, ப்ரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரரும், பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்தனர். அது சமயம் ப்ரம்மதேவர் பரமேச்வரனை யானை ரூபமாய் (‘மதங்க’ வடிவாய்) தியானம் செய்ய, அப்போது அவர் மனதில் இருந்து ஒரு முனிவர் உதித்தார். அவரே மதங்க முனிவர். இவரும் பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்ய விரும்பினார். எங்கும் ஜலமாக இருந்ததால், எந்த இடத்தில் தவம் செய்வதென்று புரியவில்லை. நாரத மஹரிஷி ‘சுவேத வனம்’ என்றழைக்கப்படும் திருவெண்காட்டில் தவம் செய்யுமாறு பணித்தார். சிவனுடைய சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால் அந்த இடம் மட்டும் ப்ரளயத்தால் அழியாதிருப்பதாகும்.

நாரதரின் யோசனைப்படி அங்கு தவம் செய்த முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்த மன்மதனை ‘சிவ நேத்ரத்தால் அழிவாய்’ என சாபமிட்டுவிட்டார்.

அடிபணிந்த மன்மதனிடம், ‘ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் அவருடைய மகனாய் (ப்ரத்யும்னன்) பிறந்து மீண்டும் சரீரம் பெறுவாய்’ என ஆசிர்வதித்தார். அதே போல் அவருடைய தவத்தைச் சோதிக்க விஷ்ணுவும் மோகினி ரூபம் கொண்டு வந்தார். அவரையும் சபிக்க முற்பட்ட போது, விஷ்ணு தன் மோகினி ரூபத்தைக் களைந்து தரிசனம் கொடுக்க அதில் மகிழ்ந்த மகரிஷி, அந்த இடத்திலேயே மோகினி ரூபமாகவும் விஷ்ணு ரூபமாகவும் இருந்து கொண்டு என்றென்றும் அருள் பாலிக்க வேண்டுமென்றும், யோக மார்க்கத்தை அருள வேண்டுமென்றும் வேண்டினார். முனிவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாதவனும் பத்ரியில் தர்ம ப்ரஜாபதியின் புத்திரராய் அவதரித்தபோது அம்முனிவருக்கு யோக மார்க்கத்தை உபதேசித்தார்.

மதங்க முனிவர் யோகத்தில் இருந்தபோது அவர் ஹ்ருதயத்தில் ஸ்ரீமஹா கணபதி தோன்றி அஷ்டாங்க யோக ஸித்தியை அருளினார். பரமேச்வரன் அம்பிகையுடன் அது போல் காட்சி கொடுக்க, பேரானந்தம் கொண்டார் முனிவர். அவரிடம் தான் தவம் செய்த இடம் தன் பெயரில் ‘மதங்காசிரமம்’ என்ற பெயருடன் விளங்க வேண்டுமென்றும், இங்கு பிறந்தாலும், வளர்ந்தாலும், இறந்தாலும் பக்தர்களுக்கு நால்வித புருஷார்த்தங்களையும் அருள ‘மதங்கேசர்’ என்ற பெயருடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் விளங்க வேண்டுமென்றும், பராசக்தியே தனக்கு மகளாய் பிறக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். மேலும் அவ்வாறு பிறக்கும் தன் மகளை பரமேச்வரன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் வேண்டினார். அப்போது அம்பிகை மதங்கனிடம், ‘‘நான் சித் சொரூபிணீ, நான் மகளாகப் பிறக்க முடியாது. என் சொரூபமான மந்திரிணீ தேவி உமக்கு மகளாகப் பிறந்து பரமேஸ்வரனை அடைவாள். உன் புத்திரனுக்கும் அவள் மகளாய் பிறந்து ஸ்வேதாரண்யேச்வரரை மணம் புரிவாள்’’ என அருளினாள்.

பண்டாஸூரனுடன் போரிட கிளம்பும் போது ஸ்ரீலலிதா தேவியின் கரும்பு வில்லினின்றும் உதித்தவள் மந்த்ரிணீதேவீ. இவளுடைய ரதத்திற்கு ‘கேய சக்ரம்’ என்று பெயர். இவள் எப்பொழுதும் சங்கீத யோகினிகளால் சூழப்பட்டிருப்பாள். இவளுடைய சேனையின் பலம் 1000 அக்ஷௌஹிணிகளாகும். இத்தகு பெருமை வாய்ந்த மந்த்ரிணீ தேவியைத் துதித்தார் மதங்க முனிவர். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விடியற் காலையில் மதங்க தீர்த்தத்தில் நீலோத்பல மலரில், அழகான பெண் குழந்தையாக அவதரித்தார் மந்த்ரிணீ. அவளது மரகத பச்சை வர்ண திருமேனியும் மை தீட்டிய கண்களும், வீணை, கிளியுடன் கூடிய வதனமும், பேரொளியுடன் திகழும் குழந்தையை விடியற்காலை ஸ்நானத்திற்கு வந்த மகரிஷி கண்டு ப்ரம்மானந்தத்தில் திளைத்தார். கைநிறைய அள்ளியெடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு பராசக்தியின் பெருங்கருணையை நினைத்து நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் தளும்ப தம் ஆசிரமத்திற்கு கொண்டு வந்து தன் மனைவி சித்கலையிடம்  தர, இருவரும் அக்குழந்தையை சீராட்டி ‘மாதங்கி’ என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மாதங்கீ, பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த முனிவர். பல தேவர்கள் மற்றும் முனிவர்களை உடன் அழைத்துக் கொண்டு மதங்கேஸ்வரரிடம் சென்றார்.

மாதங்கியை முறைப்படி திருமணம் செய்து கொண்டு தங்களை ஆசிர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ள, சித்திரை மாதம், சுக்ல பக்ஷம் ஸப்தமி திதி கூடிய நன்னாளில் மணம் புரிவதாய் திருவாய் மலர்ந்தருளினார் ஈசன். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விமரிசையாய் நடந்தன. ஸ்ரீமாதங்கி, தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மூலம் ஏழு ஆவரணங்கள் கொண்ட யந்த்ர மயமான மாதங்கிபுரத்தை திருமணத்திற்காக சிருஷ்டி செய்தாள். மதங்க முனிவரும் தேவர்கள் சகிதமாய் மதங்கேஸ்வரரை அழைக்க, அவரும் தன் கணங்களுடன் வந்து தங்கினார். மறுநாள் வேத கோஷங்களுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க

ஸ்ரீமாதங்கி தேவியை ஸ்ரீமதங்கேஸ்வரர் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்த வைபவத்தைக் கண்டு பேரானந்தம் கொண்ட மதங்க முனிவர் பரமேச்வரனிடம், ‘‘தாங்கள் எப்போதும் இத்திருக்கோலத்திலேயே காட்சி தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்திக்க, அவருக்கு என்றும் அவருடைய ஹ்ருதய கமலத்தில் திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் மகாதேவன். இந்த மாதங்கி தேவியே ‘ராஜ மாதங்கீ’ எனவும் அழைக்கப்படுகிறாள். இவள் ஸ்ரீபுரத்தில் உள்ள கிருகத்தின் கிழக்கு வாயிலில் உள்ள வெள்ளி மயமான பவனத்தில் வீற்றிருக்கிறாள்.

இந்த பவனத்தைச் சுற்றி கதம்ப வனம் உள்ளது. அதிலிருந்து இவளுக்கு பிடித்தமான ‘காதம்பரீ’ என்ற மது உண்டாகிறது. இந்த தேவி ஸ்ரீலலிதா தேவிக்கு மிகவும் வேண்டியவள். இவளை தியானிப்பதால் சாதகன் பலவிதமான ஸித்திகளை அடைகிறான். விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெறுகிறான். அவனுடைய பாபங்கள் நசிக்கின்றன. சிறந்த ஞானத்தைப் பெறுகிறான். லட்சுமி அவன் கிருகத்தில் நித்திய வாசம் புரிகிறாள். நல்ல பண்புகளையும், சங்கீத ஞானத்தையும் பெற்று விளங்கும் பக்தன் இறுதியில் முக்தி பெறுகிறான். இந்த தேவியை துதித்தே காளி தாஸன் கவித்வம் பெற்றான். மாதங்கியின் அருளைப் பெற்றதும் அவர் பாடிய முதல் பாடல்தான் ஸ்ரீசியாமளா தண்டகமாகும்.

மாணிக்க வீணாம் முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்சுள வாக் விலாஸாம்

மாஹேந்த்ர நீல த்யூதி கோம லாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

- சியாமளா தண்டகம்

சரஸ்வதி என்றதுமே அவள் வீணை தாங்கி இருக்கும் உருவமே நம் மனக்கண் முன்வரும். வீணையுடன் காணப்படும் கலைமகளை ‘வீணாகான சரஸ்வதி’ என்று கூறுவர். சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருட்களையும், ஸூக்ஷ்ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து பூஜாதிகளால் திருப்பதியடைந்து நம்மை காப்பாற்றுகிறாள். வாக்தேவியின் கரங்களில் உள்ளது ‘‘கச்சபீ’’ என்ற வீணை. ஆதிசங்கரர் அம்பிகையின் வீணையைப் பற்றி குறிப்பிடுகையில், அம்பிகை தனது நாயகனாகிய பசுபதியின் பெருமையை சரஸ்வதி தேவி மிக அற்புதமாகத் தன் வீணையில் இசைப்பதைக் கேட்டு மனம் மகிழ்ந்து அவள் இசையைப் பாராட்டியதாக தனது ஸௌந்தர்யலஹரியில் குறிப்பிடுகிறார். தேவிபாகவதத்திலும் இக்கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மூல மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்யை பட் ஸ்வாஹா

ஸ்ரீராஜ மாதங்கீ உபாசனை செய்பவர்கள் கதம்ப மரத்தை வெட்டக் கூடாது. இசைக் கருவிகள், நாட்டியம், ஸங்கீத கச்சேரி, பாடகர்களை நிந்திக்கக்கூடாது. காளி என்ற சொல்லை உச்சரிக்கக் கூடாது. மாதங்கி காயத்ரீ ஐம் சுகப்ரியாயை வித்மஹே க்லீம் காமேச்    வர்யை தீமஹி : தன்ன : ச்யாமா ப்ரசோதயாத்யாரை கிளியிடம் அன்பு கொண்டவளாக அறிகின்றோமோ, யாரை காமேச்வரியாகத் தியானிக்கிறோமோ, அவள் அந்த தேவியின் ஞானத்திலேயும். தியானத்திலும் எங்களைத் தூண்டட்டும். மாதங்கியின் அருளால் செயல்படுத்த முடியாததென்று எதுவும் இல்லை. எப்பொழுதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக் வல்லமை, பிறரை தன் வயமாக்கிக் கொள்ளும் சக்தி, பயமற்ற நிலை, பதட்டமில்லாமல் செயல்படும் தன்மை, நன்கு ஆராய்ந்து செயல்படும் குணம், தவறாக நிகழ்ந்த எதனையும் சரி செய்யும் ஆற்றல், எதிராளியை மடக்கி, தன்னை முன்னிருத்துதல் போன்ற பல நன்மைகள் ஸ்ரீமாதங்கீ தேவியை உபாஸிப்பதால் ஏற்படும்.

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியம்

Related Stories: