×

யார் தருவார் இந்த அரியாசனம்!

மாட மாளிகைகள், கோபுரங்கள் என்று பார்வைக்கு விருந்தாக இருந்தது அந்த நகரம். இல்லை என்ற சொல்லை இருக்க இடமில்லாமல் தவிக்கச் செய்துவிட்ட வளமையின் சிறப்பு. வாயைப் பிளந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் புலவர். அவரது பெயர் காளமேகப் புலவர் என்பது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் அருளால் கவிபாடும் வல்லமை பெற்றவர். சிலேடையாக பாடுவதில் புதிய இலக்கணம் படைத்தவர். தன் உள்ளம் கவர்ந்த மோகனாங்கி என்ற தனது காதலிக்காக திருமலை ராயனின் நகரத்திற்கு வந்திருக்கிறார். ஆம் அவள் கேட்ட முத்துக்கள் கிடைக்கும் ஒரே இடம் அவன் ஆட்சி செய்யும் நகரம் தானே! முத்துக்களுக்காக ஊர் விட்டு ஊர் வந்த புலவருக்கு ஒரே அதிசயம்.  விஜய நகர மன்னர்களுக்கு உட்பட்டு ஆட்சி செய்யும் சிற்றரசன் திருமலை ராயன். பிறப்பால் தெலுங்கர்.

ஆனால் கன்னித்தமிழ் மீது தீராத காதல் கொண்டு அவையிலேயே அறுபத்து நான்கு புலவர்களை நியமித்து, அவர்கள் பாடும் தமிழை காதார கேட்டு மகிழ்ந்தான். அவர்களுக்கு தண்டிகைப் புலவர்கள் என்று பெயர். அந்தப் புலவர்களுக்கு தலைவராக இருந்தவர் அதிமதுரக் கவி என்பவர். இவர் தனது புலமையால் ஆணவம் கொண்டு செருக்கோடு திரிந்தார். இவரும் இவர் தலைமையில் அவையில் இருந்த மற்றப்புலவர்களும், மன்னன் உதவி நாடி வரும் ஏழை புலவர்களை அவமதித்து இன்பம் கண்டார்கள்.

இந்த புலவர்களின், தமிழில் மயங்கிய மன்னனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.புலவர்கள் போட்டி இப்படித்தான் இருக்கும் போலும் என்று இருந்து விட்டான். இப்படி ஒரு சமயத்தில் தான் காளமேகப் புலவர், திருமலை ராயன் நகரத்திற்கு முத்து வேண்டி வந்தார். வந்தவர் ஊரின் வனப்பை பார்த்து அதிசயித்து போய் இருந்தார். அந்த வேளையில் தண்டிகைப் புலவர்களின் தலைவனான அதிமதுரக்கவி பல்லக்கில் ஏறி உலா வந்துகொண்டிருந்தான்.

அவர் உலா வரும் சமயத்தில் அனைவரும் அவரது புகழ் பாடி வணங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதி. இது எதுவும் தெரியாத காளமேகம், ஊரே அவரை வணங்குவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் காளமேகத்தின் செயலைக் கண்ட அதிமதுர கவியின் மெய்க்காப்பாளன், அவர் அருகில் வந்து மதுர கவியை வணங்குமாறு அதட்டினான். காளமேகம் உள்ளுக்குள் நகைத்தபடியே பாட ஆரம்பித்தார்.

‘‘அதிமதுர மென்றே அகிலம் அறிய
துதி மதுர மாயெடுத்துச் சொல்லும் புதுமையென்ன
காட்டுச் சரக்குலகில் காரமில் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு’’


அதிமதுரம் என்பது ஒருவகை காட்டுச் சரக்கு. அதை எதற்கு நான் போற்றிப் பாட வேண்டும்?, என்று வேடிக்கையாக மேலிருக்கும் பாடலை பாடி பதிலுரைத்தார். (அதிமதுரத்துக்கும் அதி மதுரகவிக்கும் சிலேடையை கவனிக்கவும்.) கூட்டமே சிரித்து விட்டது. அதிமதுர கவிக்கு அவமானமாகிப் போனது. விஷயம் அரசனின் காதுகளை அடைந்தது. போதாத குறைக்கு தண்டிகை புலவர்கள், காளமேகத்தைப் பற்றி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மன்னனின் கோபத் தீயை மேலும் வளர்த்தார்கள்.

ஆகவே சூட்டோடு சூடாக காளமேகம் அரசவை வரவேண்டும் என்ற ஆணை பிறந்தது. ஆணை பிறந்த செய்தியும் உடன், காளமேகத்தை எட்டியது. காளமேகமோ இதுவும் தன்னை வாழ வைக்கும் தெய்வம் அகிலாண்டேஸ்வரியின் செயல் என்று கருதி அவளை வணங்கிப் புறப்பட்டார். அரசவையில் தண்டிகைப் புலவர்களின் விழிகள் காளமேகத்தை கோபக்கணல் கக்கி வரவேற்றது. அவை மரியாதை கருதி முதலில் மன்னனை வணங்கி பாமாலைகளைப் பாடினார். பாடியபின், மன்னனுக்கு அன்புப் பரிசாக ஒரு எலுமிச்சை பழத்தை தந்தார். அதை அலட்சியமாக வாங்கிய மன்னன் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவரை அமரச்சொல்லி உபசரிக்கவுமில்லை.  காளமேகம் அவமானத்தால் தலை குனிந்தார். பழி தீர்த்துக் கொண்ட வெறியில் அதிமதுரன் வெற்றிப் புன்னகை புரிந்தான். அதைக் கண்ட காளமேகத்துக்கு அதிமதுரனின் சூழ்ச்சி புரிந்தது. நொடியில், அன்னை அகிலாண்டேஸ்வரி கோயில் கொண்ட சம்புகேஷ்வர கோயிலின் திசைக்கு திரும்பினார். இரு கரத்தையும் சிரத்தின் மேல் குவித்து, அம்பிகையை வேண்ட ஆரம்பித்தார்.

‘‘தமிழுக்கும், தமிழறிந்த புலவர்களுக்கும் செருக்குற்ற தண்டிகைப் புலவர்கள் செய்த அநீதியை அறிந்து, அவர்கள் கொட்டத்தை அடக்கவே நான் சிலேடையாக பாடி அவர்களுக்கு பாடம் புகட்டினேன். நான் செய்தது தவறு என்றால் தாயே! இந்த தண்டனையை நான் ஏற்கிறேன். மாறாக நான் செய்தது சரியாக இருந்தால், இங்கு நடக்கக் கூடாத அநீதி நடக்கிறது. இந்த அநீதியை தாயே நீ பார்த்துக் கொண்டிருக்கலாமா? தமிழ் காக்கும் தமிழ் தெய்வமே, நாமகளே! தமிழ் அறிந்த எனக்கு நேர்ந்த அநீதி, உனக்கு நேர்ந்தது இல்லையா?’’என்று அவர் வேண்டிய மறுகணம், வானம் இடிந்து விடும்படி ஒரு இடி இடித்தது. பூமியே பிளந்துவிடும்படி பூமி நடு நடுங்கியது. நிகழ்வது அனைத்தும் அதிசயமாக இருக்கவே, அனைவரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, திருமலை ராயனின் அரியணை வளர ஆரம்பித்தது. ஆம். அரியணை வளர ஆரம்பித்தது.

நடப்பதை கண்ட திருமலை ராயன், திக் பிரமை பிடித்து நிற்கும் வேளையில், சரியாக திருமலை ராயனைத் தவிர மற்றொருவர் அமரலாம் என்னும் படி வளர்ந்த அரியணை வளருவதை நிறுத்தியது. பிறகு இடி இடிப்பதும், பூமி அதிர்வதும் நின்றது. அந்த இடியின் கொடூர ஒலிக்கு நடுவே ஒரு பெண்ணின் ஓம்கார சொல்லோசை கேட்டது. ‘‘தமிழ் தெய்வம் கலைவாணி நான் சொல்கிறேன். புவியாளும் அரசனோடு சரியாக ஒரே ஆசனத்தில் அமர்வாய் காளமேகா!’’ என்ற வாணியின் குரலோசை கேட்டு, வெலவெலத்து போனார்கள் தண்டிகை கவிகள். மன்னனோ செய்த தவறை எண்ணி குன்றிப் போனான்.

வானம் மலர் மாரி பொழிய, அரசனோடு சரியாக ஒரே ஆசனத்தில் அமர்ந்தார் காளமேகம். தவறை உணர்ந்த மன்னன், அவர் பாதத்தில் வேரற்ற மரம் போல சரிந்து, மன்னிக்கும் படி மன்றாடினார். அவனை எழுப்பி அருகில் அமர வைத்த காளமேகம், தன்னை வாழ வைத்த வாணியை பாட ஆரம்பித்தார்......

‘‘வெள்ளைக் கலையுடுத்து
வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில்
அரசோடு என்னை சரி
ஆசனம் வைத்த தாய்’’


அதாவது, மாசற்ற அரசக் கட்டிலிலே, என்னை அரசனோடு சரியாக அமர வைத்த தாய், வெள்ளை நிற ஆடையை பூண்டு, வென்முத்து, வைரத்தால் இழைத்த ஆபரணங்களை அணிந்து, வெள்ளைத் தாமரையிலே வீற்றிருப்பாள், என்று பொருள். இதில் கலைவாணியை அவர் தாய் என்று அழைப்பதை கவனிக்க வேண்டும். மகனுக்கு நேர்ந்த அவமானத்தை, பொறுக்காமல் தாயுள்ளம் கொண்டவளாக தன்னை காத்த அம்பிகையை குறிப்பால் உணர்த்துகிறார் புலவர். அம்பிகையின் ஆயிரம் நாமங்களின் தேர்ந்த பொருளாக விளங்குவதும், ‘‘ஒப்பற்ற கருணையே வடிவான தாயே’’என்று அவளை அழைக்கும் நாமம் தானே?

(லலிதா சஹஸ்ர நாமத்தின் முதல் நாமம் - ‘‘மாதா’’) ஈசனை பாடவந்த மாணிக்க வாசகர் ‘‘தாயில் சிறந்த தயாவான தத்துவனே’’என்றும் ‘‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே’’ என்றும் அல்லவா சொல்கிறார்.  மொத்தத்தில், அனைத்து சாஸ்திரங்களும் புகழும், அம்பிகையின் தாயன்பை ஒற்றை பாடலில் அடக்கிவிட்டார் காளமேகம் என்று சொல்லலாம்.

காலம் பல சென்றது. அன்றைய கவி அரசரான காளமேகத்தின் பாடலை, இன்றைய கவி அரசரான கண்ணதாசன் வாசித்தார். அதில், ‘‘அரியாசனத்தில் அரசோடு என்னை சரி ஆசனம் வைத்த தாய்’’ என்றவரிகள் மட்டும் அவரது மனதில் ரீங்காரம் இட்டபடி இருந்திருக்கும். எவ்வளவு பெரிய சம்பவம்.  ஆனால் மக்கள் இதனை மறந்து விட்டார்களே என்று அவர் வருந்தி இருக்கவேண்டும்.

அவர் மனம் வருத்தத்தில் இருக்கும் அந்த நேரத்தில் ‘‘மகாகவி காளிதாஸ்’’ திரைப் படத்திற்காக அவரை பாடல் எழுதச் சொல்லி ஒரு விண்ணப்பம் வந்திருக்க வேண்டும். பாடல் வரும், காட்சியின் அமைப்பை விசாரித்திருப்பார் கண்ணதாசன். மூடனாக இருந்த ஒரு ஆட்டிடையன் காளி தேவியின் அருளால் காளிதாசன் ஆனது தான் காட்சியின் அமைப்பு என்று பதில் வந்திருக்கும்.  கண்ணதாசனுக்கு சட்டென்று ஒரு பொறி தட்டியிருக்கும். காளிதாசன் காளமேகம் இருவரும் அம்பிகையின் பக்தர்கள் தான். மூடானாக இருந்து அவள் அருளால் வித்தகர்கள் ஆனவர்கள்.

ஆனால் காளிதாசன் வடமொழிப் புலவர். அவர் பெற்ற பேற்றை விளக்க அவருக்கு சமமாக அம்பிகையின் அருளை பெற்றவரால் தான் முடியும் என்றும் விளங்கியிருக்கும் கண்ணதாசனுக்கு.  காளிதாசனுக்கு சமமாக அம்பிகையின் அருள் பெற்றவர் காளமேகத்தை தவிர வேறு யாராக இருக்க முடியும். ஆகவே காளிதாசன் அம்பிகையின் அருள் பெற்ற போது அடைந்த ஆனந்தத்தை விளக்க காளமேகத்தின் சொல்லை கையாண்டிருப்பார்.  இனி  கவி அரசர் கண்ணதாசன், காளிதாசன் அடைந்த பேற்றை காளமேகத்தின் பாணியில் பாடிய பாடலை பார்ப்போமா?

‘‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்...
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு.....’’


காளிதாசனின் நிலையை காளமேகத்தின் சொல்லில் பாடி, இருவரின் நிலையையும் கண் முன்னே நிறுத்தி விட்டார் கண்ணதாசன். அதை அவருக்குள் இருந்து செய்தது அம்பிகையின் திருவருள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை....

Tags :
× RELATED காமதகனமூர்த்தி