அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

289. ஜகதஸ்ஸேதவே நமஹ: (Jagathassethave namaha)

ராமனும், வானர சேனையும் கடலைக்கடந்து இலங்கையை அடைவதற்காக, வானர வீரர்கள் மலைகளைக் கொண்டு வந்து கடலில் எறிந்து அணையை, பாலத்தை அமைத்தார்கள். இந்த வரலாற்றை,“குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்தரங்கநீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சதன்னால் அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே” என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார்.

ஒவ்வொரு மலையையும் பல குரங்குகள் சுமந்து வந்து கடலில் வீசியதாக இப்பாடலில் ஆழ்வார் தெரிவிக்கிறார். என்ன காரணம்? குரங்குகளுக்குப் பலம் இல்லையா? என்றால் அது காரணமில்லை. ஒவ்வொரு குரங்குக்கும் பல மலைகளைச் சுமக்கும் வலிமை இருந்தது. ஆனால் மலைகளின் எண்ணிக்கையை விடக் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாம்! எழுபது வெள்ளம் வானர சேனையை அழைத்துச் சென்றிருந்தான் ராமன். அதனால், ஒவ்வொரு குரங்கும் ஒரு மலையை எடுத்துச் சென்றால், மீதமுள்ள குரங்குகளுக்கு  ராமனுக்குத் தொண்டு செய்யும் பேறு கிட்டாமல் போய் விடுமாம். அதனால் பல குரங்குகள் சேர்ந்து ஒவ்வொரு மலையையும் தூக்கிச் சென்று, “நாங்களும் ராமனுக்குத் தொண்டு செய்யும் பேற்றைப் பெற்றோம்!” என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டனவாம்.

இதைக் கண்ட ஓர் அணில், “ஆஹா! இந்த வானர வீரர்கள் தமது வலிமைக்கேற்றபடி ராமனுக்குச் சிறப்பாகத் தொண்டாற்றுகிறார்களே! நாமும் நமது சக்திக்கேற்றபடி ஏதாவது ஒரு தொண்டை ராமனுக்குச் செய்ய வேண்டும்!” என்று தீர்மானித்தது.அதனால் அந்த அணில் கடலில் மூழ்கி, அந்த ஈர உடம்போடு கடற்கரை மணலில் புரண்டு, அதன்பின் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை வானரர்கள் எறிந்த கற்களின் மேல் உதறியதாம். அந்த அணிலின் தொண்டைக் கண்டு மகிழ்ந்த ராமன், அதன் முதுகில் தனது விரல்களால் வருடவே, அணிலின் முதுகில் கோடுகள் உண்டாயின.

வானர வீரர்கள் அனைவரும் அணையைக் கட்டி முடித்தவுடன், அதைக் கடந்து இலங்கைக்குச் செல்ல அனைவரும் தயாரானார்கள். ஆனால் அனுமன், ராமனிடம், “இந்த அணைக்கு நீங்கள் ஒரு பெயர் சூட்ட வேண்டும்!” என்று பணிவுடன் பிரார்த்தித்தார். வடமொழியில் ‘சேது’ என்றால் பாலம் அல்லது அணை என்று பொருள். ராமன் அமைத்த சேது என்பதால், ‘ராம சேது’ என்று இதற்கு ராமன் பெயரிடப் போகிறார் என்று வானர வீரர்கள் எண்ணினார்கள். ஆனால் ராமனோ, “வானர வீரனான நளன் இதை முன் நின்று கட்டி முடித்தான். எனவே ‘நள சேது’ என்று இந்த அணை அழைக்கப்படும்! மேலும், நளன் - தமயந்தி கதையைக் கேட்பவர்கள் கலியின் கொடுமைகளில் இருந்து விடுபடுவது போலவே, இந்த நள சேதுவைக் காண்போரும் கலியின் கொடுமைகளில் இருந்து விடுபடுவார்கள்!” என்றார்.

அப்போது அனுமன், ராமனைப் பார்த்து, “சுவாமி! உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் தாங்கி நிற்கும் சேதுவாகத் தாங்கள் அல்லவோ இருக்கிறீர்கள்? தங்களது கருணையினால், இந்த அணைக்கு எங்கள் கூட்டத்தில் ஒருவனான நளனின் பெயரைச்சூட்டி எங்கள் வானர இனத்தைக் கௌரவித்துள்ளீர்கள் என்று புரிந்து கொண்டேன்!” என்றார். அதன்பின் இலங்கையை நோக்கி வானர சேனை புறப்பட்டது.

அனுமன் சொன்னபடி அகில உலகுக்கும் அணையாகத் திருமால் திகழ்கிறார். இதைச் சாந்தோக்ய உபநிஷத், “ஸ ஸேது: வித்ருதி: ஏஷாம் லோகானாம் அஸம்பேதாய” என்று கூறுகிறது. உலகிலுள்ள பாவம் - புண்ணியம், நன்மை - தீமை, நட்பு - பகை, விடம் - அமுதம், இன்பம் - துன்பம், கலக்கம் - தேற்றம், குளிர் - வெப்பம் போன்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தினுள்ளும் திருமால் இருக்கிறார். ஆனால் அவை ஒன்றோடு ஒன்று கலக்காதபடி அணையாக இருந்து அவற்றைத் தனித்தனியே பிரித்து வைக்கிறார் திருமால். ஆற்றின் இரு புறங்களையும் அணை பிரித்து வைப்பது போல், இத்தகைய எதிர்மறையான விஷயங்களைப் பிரித்து வைக்கிறார் திருமால்.

ஆயிரம் பசுக்கள் இருந்தாலும், கன்றுக்குட்டி தாய்ப்பசுவைச் சரியாகக் கண்டறிவது போல, பாபம் - புண்ணியம் போன்ற செயல்களின் பயன்களான துயரம் - மகிழ்ச்சி ஆகியவை, எந்தக் குழப்பமும் இன்றி அந்தந்த செயல்களைச் செய்தவரைச் சென்று சேர்கின்றன அல்லவா? இப்படி உலகில் எந்தக் குழப்பமும் கலப்பும் ஏற்படாதபடி, அணையாக இருந்து தாங்கி இயக்கும் திருமால் ‘ஜகதஸ்ஸேது:’ என்றழைக்கப்படுகிறார். ஜகத் என்றால் உலகம். ஸேது என்றால் அணை. உலகுக்கே அணையாக இருக்கும் திருமாலுக்கு ‘ஜகதஸ்ஸேது:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 289-வது திருநாமம். “ஜகதஸ்ஸேதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அரிய பல மைல்கல்களைக் கடக்கும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

290. ஸத்ய தர்ம பராக்ரமாய நமஹ:(Sathya-dharma-paraakramaaya namaha)

“ஸ்ரீரங்கம் கரிசைலம் அஞ்ஜனகிரிம் தார்க்ஷ்யாத்ரி ஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமம் ச பதரீநாராயணம் நைமிசம் ஸ்ரீமத்த்வாரவதீ ப்ரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முனி:” என்ற ஸ்லோகம் ராமானுஜர் யாத்திரை சென்ற திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறது.தமது சீடர்களுடன் மதுரா, ஆய்ப்பாடி போன்ற இடங்களுக்கு யாத்திரை சென்ற ராமானுஜர், சீடர்களைப் பார்த்து, “இந்தப் பகுதிகளில் எத்தனை எத்தனை லீலைகளைச் செய்தான் நம் கண்ணன்? அவனது மாயம் என்ன மாயமோ!” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார்.

அப்போது சில சீடர்கள், “சுவாமி! கண்ணனே கீதையில் சொன்னபடி, நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, அறத்தை நிலைநாட்ட அவன் அவதரிக்கிறான்! ஆனால் அந்தக் கண்ணன் எதற்காக சிறுபிள்ளை போல் பற்பல லீலைகளைச் செய்ய வேண்டும்? அவற்றுக்கு ஏதாவது பயன் உண்டா?” என்று வினவினார்கள்.

அதற்கு ராமானுஜர், “கண்ணனின் லீலைகளுக்கு இரண்டு விதமான பயன்கள் உண்டு - பாமரர்களுக்கு ஒருவிதமான பயன், பண்டிதர்களுக்கு ஒருவிதமான பயன்!” என்றார்.“அவை என்ன?” என்று கேட்டார்கள் சீடர்கள்.“முதலில் பாமரர்க்கு என்ன பயன் என்பதைச் சொல்கிறேன்!” என்று சொன்ன ராமானுஜர், “வேதங்களைக் கற்றோ, பெரியோர்களின் உபதேசத்தைக் கேட்டோ, தவம் புரிந்தோ இறைவனை அறிய இயலாதவர்கள் கூட, கண்ணன் செய்யும் லீலைகளால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள்.

வெண்ணெயைத் திருடிக்கொண்டு, வீடு வீடாகச் சென்று விஷமம் செய்து கொண்டு, பெண்களிடம் விளையாடும் இந்தச் சிறுவனைக் காண்கையில், பாமரர் கூட இவன் நம் வீட்டுப்பிள்ளை என்று அபிமானித்துக் கண்ணன் மேல் அன்பு காட்டத் தொடங்குகிறார்கள். எனவே வேத ஞானமோ, பெரிய பக்தியோ இல்லாத பாமரரின் மனங்களைக் கூடத் தன்பால் ஈர்ப்பதற்காகக் கண்ணன் இத்தனை லீலைகள் புரிந்தான்!” என்றார்.

“அப்படியானால் பண்டிதர்க்கு என்ன பயன்?” என்று கேட்டார்கள் சீடர்கள்.அதற்கு ராமானுஜர், “வேதாந்தங்களான உபநிஷத்துகள் சொல்லும் எத்தனையோ கடினமான அர்த்தங்களை எளிய வகையில் லீலைகள் மூலம் கண்ணன் விளக்கியுள்ளான். சில உதாரணங்களைச் சொல்கிறேன்: பூதனையின் இரண்டு மார்பகங்களில் உள்ள விஷப்பாலை உறிஞ்சி அவளைக் கண்ணன் வதைத்தான் அல்லவா? பூதனைதான் நம் அறியாமை. நான் எனும் அகங்காரமும், எனது எனும் மமகாரமும் அவளது இரண்டு மார்பகங்கள். கண்ணனின் திருவடிகளை நாம் பற்றினால், நமது அகங்கார - மமகாரங்களை உறிஞ்சி நமது அறியாமையை அவன் போக்கிவிடுவான் என்பதைப் பூதனா மோட்சம் மூலம் அவன் நமக்கு உணர்த்துகிறான்.

காளியன் மீது கண்ணன் நடனமாடிய வரலாற்றை நாம் அறிவோம். அந்தக் காளியன் எனும் பாம்புதான் நமது மனம். பாம்பு வளைந்து வளைந்து செல்வது போல் நமது மனமும் நேராகச் செல்லாமல் பல வழிகளில் வளைந்து வளைந்து செல்கிறது. கண்ணனின் திருவடிகளை நாம் பிடித்துக்கொண்டால், அலைபாயும் நம் மனமாகிய பாம்பை அவன் கட்டுக்குள் கொண்டு வருவான். இதுவே காளிய நர்த்தனம் உணர்த்தும் தத்துவம்.

கண்ணன் பானையிலிருந்து வெண்ணெயைத் திருடுவது கூட ஒரு தத்துவம்தான். நம் உடல்தான் பானை. ஜீவாத்மா தான் வெண்ணெய். நாம் வெண்ணெய் போலத் தூய்மையான (வெள்ளை மனத்துடன்) இருந்தால், நம் உடலாகிய பானைக்குள் இருக்கும் அவனது சொத்தான வெண்ணெய் போன்ற ஜீவாத்மாவை அவன் எடுத்துக்கொள்கிறான் என்பதையே இது உணர்த்துகிறது. இவ்வாறே கண்ணன் செய்த ஒவ்வொரு லீலையும் பண்டிதர்களுக்குப் பற்பல வேதாந்தப் பொருளை விளக்குகிறது. பாமரர்களின் மனங்களை அவன் பால் ஈர்க்கிறது. அவனது குணங்களோ செயல்களோ என்றுமே வீண்போவதில்லை!” என்றார் ராமானுஜர்.

திருமால் செய்யும் எந்த ஒரு சிறிய செயலுக்கும் கூட ஏதோ ஒரு பயன் இருக்கிறது, அவரது எந்த குணமும் செயலும் வீண்போவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிய முடிகிறதல்லவா? ‘ஸத்ய’ என்றால் (இவ்விடத்தில்) வீண்போகாத என்று பொருள். ‘தர்ம’ என்றால் குணங்கள் என்று பொருள். ‘பராக்ரம’ என்றால் செயல்கள் என்று பொருள். வீண்போகாத குணங்களையும் செயல்களையும் உடைய திருமால் ‘ஸத்யதர்மபராக்ரம:’ என்றழைக்கப்

படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 290-வது திருநாமம்.

“ஸத்யதர்மபராக்ரமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் வீண்போகாமல் பயன்தரும்படித் திருமால் அருள்புரிவார்.

291. பூத பவ்ய பவந் நாதாய நமஹ: (Bhootha-bhavya-bhavan-naathaaya namaha)

பலராமனும் கண்ணனும் உஜ்ஜைனியில் வாழ்ந்துவந்த சாந்தீபனி என்ற குருவுக்குச் சீடர்களாகி, அறுபத்து நான்கு நாட்கள் அவரது குரு குலத்திலேயே தங்கி இருந்து, அந்த அறுபத்து நான்கு நாட்களுக்குள் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அவரிடம் பயின்று தேர்ந்தார்கள். கல்வி கற்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் குருவுக்கு அனைத்து விதமான பணிவிடைகளும் செய்து வந்தார்கள்.

அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த பின் சாந்தீபனியிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளும் நேரத்தில், கண்ணன் அவரிடம், “குருவே! அறுபத்து நான்கே நாட்களில் எனக்கும் எனது அண்ணனுக்கும் அறுபத்து நான்கு கலைகளைத் தாங்கள் உபதேசம் செய்திருக்கிறீர்கள்! தங்களுக்கு என்ன குரு தட்சணை நாங்கள் தர வேண்டும்?” என்று கேட்டான்.

சாந்தீபனியோ, “உங்கள் இருவருக்கும் குருவாக இருந்தமையே எனது பெரும் பாக்கியம்! இதற்கு மேல் எந்தக் காணிக்கையும் எனக்கு வேண்டாம்!” என்று பதிலளித்தார். ஆனால் இதைக் கவனித்துக் கொண்டிருந்த சாந்தீபனியின் மனைவி அவரை உள்ளே அழைத்தாள். “சுவாமி! இந்த பலராமனையும் கண்ணனையும் பார்த்தால் சாதாரண பிள்ளைகளாகத் தெரியவில்லை! இவர்கள் தெய்வீக புருஷர்கள்! அதனால்தான் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் இவர்களால் கற்க முடிந்திருக்கிறது! எனவே இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இவர்களிடம் இருந்து பெரிதாக எதையாவது கேட்டுப் பெறுங்கள்!” என்றாள் சாந்தீபனியின் மனைவி.

சற்று யோசித்த சாந்தீபனி, கண்ணனிடம் வந்து, “கண்ணா! எனக்கு ஒரு மகன் இருந்தான். பல ஆண்டுகளுக்கு முன் அவன் பிரபாச க்ஷேத்திரத்தில் கடலில் மூழ்கி இறந்துவிட்டான். இப்போது உன்னால் அவனை மீட்டுக்கொண்டு வர முடியுமா? கடலுக்குச் செல்லும் முன் என் இளம் மகன் என்னைப் பார்த்துச் செய்த புன்முறுவல் என் மனத்தில் இன்றும் இருக்கிறது! அதே முகத்தை நான் பார்க்க விழைகிறேன்!” என்று கேட்டார். சற்றும் தயங்காமல் “சரி!” என்று சொன்ன கண்ணன், பலராமனுடன் பிரபாச க்ஷேத்திரத்தில் உள்ள கடற்கரைக்குச் சென்றான்.

கடல் அரசன் இருவரையும் மரியாதையோடு வரவேற்றார். “என் குருவின் மகனைத் திரும்பத் தாருங்கள்!” என்று கடல் அரசனிடம் கேட்டான் கண்ணன். கடல் அரசனோ, “அந்தச் சிறுவனை நான் ஒன்றும் செய்யவில்லை. இக்கடலில் வாழும் பஞ்சஜனன் என்ற அசுரன் தான் அவனை விழுங்கிவிட்டான்!” என்றார். கடலுக்குள் சென்ற கண்ணன் பஞ்சஜனனை வதைத்தான். அவனது வயிற்றில் தேடிப் பார்த்த போது, சாந்தீபனியின் மகன் அதில் கிடைக்கவில்லை. எனவே அடுத்தபடியாக யமனின் இருப்பிடத்தை நோக்கிக் கண்ணனும் பலராமனும் சென்றார்கள். யம பட்டணத்தில் சாந்தீபனியின் மகன் தன் முன்வினைப் பயன்களை அனுபவித்து வருவதைக் கண்டார்கள். கண்ணன் வருவதைக் கண்ட யமன் பணிவோடு வந்து, “தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“சாந்தீபனியின் மகனைத் திரும்பக் கொடுத்துவிடுங்கள்!” என்று கண்ணன் ஆணையிட, யமனும் அதை ஏற்றார். அப்போது பலராமன் கண்ணனிடம், “நம் குரு தன் மகன் இறந்தபோது எப்படி இருந்தானோ அப்படியே வேண்டும் என்றல்லவோ கேட்டார்? இப்போது இந்தச் சிறுவனின் தோற்றம் மாறி இருக்கிறதே!” என்று கேட்டார். தனது சுதர்சனச் சக்கரத்தைச் சுழற்றினான் கண்ணன். இறப்பதற்கு முன் இருந்த அதே இளமைத் தோற்றத்துக்கு மாறினான் சாந்தீபனியின் மகன். அந்த மகனைக் குருவிடம் ஒப்படைத்துக் குரு தட்சிணையைச் செலுத்தினார்கள் பலராமனும் கண்ணனும். இந்த அதிசயச் செயலைக் கண்ட சாந்தீபனி, தன் மனைவியிடம், “சாட்சாத் திருமாலே எனக்குச் சீடனாக வந்திருக்கிறார் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்!” என்றார்.

“எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவர் மனைவி. அதற்குச் சாந்தீபனி, “இறந்துபோன ஒருவனை மீட்பது என்பது யாராலும் இயலாத செயலாகும்! அப்படியே மீட்டாலும் அவன் இறக்கும் முன் எப்படி இருந்தானோ அதே தோற்றத்துக்கு அவனை மாற்றுவது என்பது மேலும் அரிதாகும்! இச்செயலைக் கண்ணன் செய்திருக்கிறான் என்றால் என்ன பொருள்? கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலமும் அவனது கட்டுப்பாட்டில் உள்ளன என்றுதானே பொருள்? முக்காலத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆளும் திருமால் தான் கண்ணன் வடிவில் எனக்குச் சீடனாக வந்து அருள்புரிந்திருக்கிறார்!” என்றார். அதன்பின் சாந்தீபனியின் மகன் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தான் என்பது வரலாறு.

சாந்தீபனி சொன்னது போல், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் திருமால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ‘பூத’ என்றால் கடந்த காலம், ‘பவ்ய’ என்றால் நிகழ்காலம், ‘பவத்’ என்றால் எதிர்காலம். ‘நாத:’ என்றால் தலைவர். ‘பூத - பவ்ய - பவந் - நாத:’ என்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்கும் தலைவர் என்று பொருள். முக்காலத்துக்கும் நாதனானபடியால் ‘பூத-பவ்ய-பவந்-நாத:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 291-வது திருநாமம்.“பூத-பவ்ய-பவந்-நாதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எக்காலத்திலும் நன்மைகள் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: