×

செய்யாறு அருகே அருள்பாலிக்கிறார் பக்தர்களை பார்த்து புன்னகைக்கும் கூழமந்தல் பேசும் பெருமாள்

விஷ்ணுவின் அவதாரங்கள் 10 என்றாலும், எம்பெருமானின் உருவங்கள் எண்ணிலடங்கா. அதன்படி கம்பீரமான தோற்றத்துடன் கூடிய விஷ்ணு கோயில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக “பேசும் பெருமாள்” என்ற பெயரில் காட்சியளிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் நெல்லூரையும், தமிழகத்தில் காஞ்சிபுரத்தையும் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள். அதில் விஜயகண்ட கோபாலன் என்பவர் இக்கோயிலுக்கு வந்து இப்பெருமாளைக் கண்டு மிகவும் வியப்புற்று பேச, இப்பெருமாளும் பதிலுக்கு அரசனுடன் சாதாரணமாக உரையாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதும்கூட பெருமாள் முன்பு நின்று அவரை சற்றே ஆர்வத்துடன் நோக்கினால், அவர் கருணையுடன் நம்மை நோக்கி புன்னகைக்கிறார். நம்முடன் பேசுகிறார். நமக்கு பதில் சொல்கிறார்!. நாம் தெரிவிக்கும் கோரிக்கைகள் எல்லாம் அவருக்கு கேட்கிறது என்பதும், அதன்மூலம் அருளாசி வழங்குகிறார். வேதனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயில் முழுவதும் கருங்கற்களால் இழைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் உள்ளது இதன் சிறப்பு அம்சம்.

பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இரு கைகளிலும் சங்கு சக்கரங்கள், மற்றொரு வலக்கை நமக்கு அருள்பாலிக்கும் வரதஸ்தம், இடக்கை தொடையில் பதிந்துள்ளது. ஏராளமான அணிகலன்கள், கிரீடம், அதில் பல வண்ண வேலைப்பாடுகள். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்கள், தலைக்கிரீடங்களும் மெய்மறக்கச் செய்கின்றன. இவ்வளவு கம்பீரமான தோற்றமாக இருந்தாலும் சாந்த மூர்த்தியாக திகழ்கிறார் பேசும் பெருமாள்.
பெருமாள் முன்பு நின்று நோக்கினால், பெருமாள் கருணையுடன் நம்மை நோக்கி புன்முறுவலுடன் பேசுவதுபோல விளங்குவதால் “பேசும் பெருமாள்” என்று பெயர்பெற்றார்.

கண் இமைக்காமல் நாளெல்லாம் பார்த்து வணங்கத்தக்க இத்திருமேனிகளின் அழகும், நிற்கும் பாங்கும் கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு உயரமும், எழிலும் வாய்ந்த திருவுருவங்களை வேறு எங்கும் காண இயலாது. இத்திருமேனிகளின் காதுகளில் மிக மிகச் சிறிய ஊசி நுழைவதற்குரிய கண்ணுக்குத் தெரியாத துவாரங்களை அமைத்து சிற்பிகள் தங்கள் கலைத் திறனையும், கை வண்ணத்தையும் காட்டியுள்ளனர். தாமரை மலருடன் தாயார் : இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பது.

இது மிகமிக அரிதானக் காட்சி. மற்ற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும் இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார்.
ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமை, விசேஷ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மனம் உறுகி வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, ஞானம், புகழ், சகல செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறார் பேசும்பெருமாள். இக்கோயில் செய்யாறில் இருந்து 22கி.மீ. தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நிறைய பேருந்து வசதிகளும் உள்ளது.

Tags : Perumal ,devotees ,Seiyaru ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...