×

நங்கையர்கள் போற்றும் நவராத்திரி...

மலைமகள், அலைமகள், கலைமகள் மும்மகளையும் ஒருசேர பாவித்து ஒன்பது நாள் பூஜிப்பதே நவராத்திரி. இன்று (17ம் தேதி) நவராத்திரி தொடங்குகிறது.

முதல் நாள் 17. 10. 2020(சனிக்கிழமை):

பிரதமை திதியான இன்று மகேஸ்வரன் இடப்பாகம் அமர்ந்திருக்கும் உமையவள் மகேஸ்வரியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜைஅறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும். மதுகைடன் என்ற அசுரனை அழித்த மகேஸ்வரிக்கு வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை நைவேத்யம் வைத்து, மல்லிகை, செவ்வரளி, வில்வ மலர்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். 2 வயது சிறுமிக்கு பாவாடை, தாவணி அணியவைத்து குமாரி அவதாரத்தில் வணங்கவேண்டும். இவ்வாறு செய்தால் வறுமை நீங்கும், ஆயுள் பெருகும். (முதல் நாள் -  வாழைப்பழம்) மகேஸ்வரியின் அம்சம்-முத்துமாரி-கோலவிழியாள்- வேம்புலி அம்மன் - ஆயிரம் கண்ணுடையாள்- முத்தாரம்மன்-மாரிமுத்தாரம்மன்-மாரியம்மன்- கருமாரியம்மன்.

இரண்டாம் நாள் 18. 10. 2020 ஞாயிற்றுக்கிழமை):

துவிதியை திதியான இன்று ஆங்கார ரூபினியான காளி, சாந்தம் கொண்டு ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக நின்றருளும் ராஜராஜேஸ்வரியை வழிபட வேண்டும். பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் மாவினால் பொட்டுக்கோலம் போட வேண்டும். மகிஷாசுரனை வதம் செய்த ராஜராஜேஸ்வரிக்கு புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள்சாதம் முதலான நைவேத்யம் வைத்து, முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும். 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும். (இரண்டாம் நாள் - மாம்பழம்) ராஜராஜேஸ்வரியின் அம்சம்- மாங்காளி-ராஜகாளி-பத்திரகாளி -வீரமனோகரி -அங்காள பரமேஸ்வரி - உச்சிமாகாளி.

மூன்றாம் நாள் 19. 10. 2020 (திங்கட்கிழமை):

திருதியை திதியான இன்று பன்றிமுகம் கொண்ட  தேவி வாராகியை வணங்க வேண்டும். பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் மலர்கோலம் போட வேண்டும். மகிஷாசுரனை அழித்த வாராகி அம்மனுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் நைவேத்யம் வைத்து, செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் தனம் பெருகும், வாழ்வு சிறக்கும் (மூன்றாம்நாள் - பலாப்பழம்) வாராகியின் அம்சம் - பிடாரி - முப்பிடாதி - எல்லைப்பிடாரி - முத்தலையம்மன் - முத்தாலம்மன்- நீலி - இசக்கியம்மன்.

நான்காம் நாள் 20. 10. 2020 (செவ்வாய்க்கிழமை):

சதுர்த்தி திதியான இன்று செல்வம் அருளும் மகாலட்சுமியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும். எல்லா வளங்களும் அருளும் மகாலட்சுமிக்கு தயிர்சாதம், அவல் கேசரி, பால் பாயசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல். நைவேத்யம் வைத்து, செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்தும் போடலாம். 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடம் அலங்கரித்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கடன் தொல்லை தீரும். செல்வம் பெருகும். (நான்காம்நாள் - கொய்யாப்பழம்)மகாலட்சுமியின் அம்சம் - உலகம்மன் - பொன்னி நிறத்தம்மன் - பொன்னி அம்மன் - துலுக்கானத்தம்மன்.

ஐந்தாம் நாள் 21. 10. 2020 (புதன்கிழமை):

பஞ்சமி திதியான இன்று கந்தனின் தாயான ஸ்கந்தமாதாவை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும். மனபலம் அருளும் ஸ்கந்தமாதாவுக்கு சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்பு வடை, பாயசம், தயிர் சாதம், பால்சாதம், பூம்பருப்பு சுண்டல். நைவேத்யம் வைத்து, கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். (ஐந்தாம் நாள்- மாதுளை)ஸ்கந்தமாதாவின் அம்சம் - அரியநாச்சி - அங்கயற்கண்ணி - நாகேஸ்வரி - நாகவல்லி - நாகாத்தம்மன் - புற்றம்மன் - அங்காளம்மன் - நாகரம்மன்.

ஆறாம் நாள் 22. 10. 2020 (வியாழக்கிழமை):

சஷ்டி திதியான இன்று சண்டிகாதேவியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும். சண்டிகாதேவிக்கு தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் நைவேத்யம் வைத்து, பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம் பூக்களால் பூஜிக்க வேண்டும். 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும். (ஆறாம்நாள் - ஆரஞ்சு) சண்டிகாதேவியின் அம்சம் -செல்லியம்மன்-செண்பகவல்லி அம்மன்-செல்வி அம்மன் - வடக்குவாச் செல்வி - செல்லாத்தா - கோணியம்மன்.

ஏழாம் நாள் 23. 10. 2020 (வெள்ளிக்கிழமை):

சப்தமி திதியான இன்று சாம்பவித் துர்க்கையை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். சாம்பவித் துர்க்கைக்கு எலுமிச்சம் பழசாதம், பழவகைகள்,  வெண்பொங்கல்,  கொண்டைக் கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயசம், புட்டு நைவேத்யம் வைத்து,  தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை பூக்களால் பூஜிக்க வேண்டும். 8 வயது சிறுமியை சரஸ்வதியாக கருதி பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். (ஏழாம்நாள் - பேரீச்சம்பழம்) சாம்பவித் துர்க்கையின் அம்சம் - வனதுர்க்கா - தீபதுர்க்கா - அக்னி துர்க்கை - திரிபுரசுந்தரி - ஸ்ரீதர நங்கை, வீரவ நங்கை - முன்னுதித்த நங்கை.

எட்டாவது நாள் 24. 10. 2020 (சனிக்கிழமை):

அஷ்டமி திதியான இன்று மகாகௌரியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் பத்ம கோலம் போட வேண்டும். மகாகௌரிக்கு பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். நைவேத்யம் வைத்து, மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி பூக்களால் பூஜிக்க வேண்டும். 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தடைப்பட்டு வந்த காரியங்கள் வெற்றியில் முடியும். (எட்டாம் நாள்-திராட்சை) மகாகௌரியின் அம்சம் - நரசிம்ம தாரினி - கங்கையம்மன்- சந்தனமாரி - சடைமாரி - ஆகாசமாரி.

ஒன்பதாம் நாள் 25. 10. 2020 (ஞாயிற்றுக்கிழமை):

நவமி திதியான இன்று பரமேஸ்வரியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் வாசனைப் பொடிகளால் திரிசூலம்
முதலான ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும். பரமேஸ்வரிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை. நைவேத்யம் வைத்து, தாமரை, மருக்கொழுந்து, துளசி மற்றும் வெள்ளை நிற பூக்களால் பூஜிக்க வேண்டும். 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள். (ஒன்பதாம் நாள்-நாவல்பழம்) பரமேஸ்வரியின் அம்சம் - சுபத்ராதேவி -காமாட்சி-மீனாட்சி-விசாலாட்சி-அபிராமி-சிவகாமி-மகமாயி -கருமாரி.

பத்தாவது நாள் 26. 10. 2020 (திங்கள்கிழமை):

தசமி திதியான இன்று விஜயா என்கிற சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறை அல்லது பூஜை செய்யும் இடத்தில் அரிசி மாவால் தாமரை முதலான மலர்களால் கோலம் போட வேண்டும். சரஸ்வதி தேவிக்கு பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகளால் நைவேத்யம் வைத்து, தாமரை, மருக்கொழுந்து, மல்லி, ஜாதி மல்லி முதலான பூக்களால் பூஜிக்க வேண்டும். 10 வயது சிறுமியை காயத்ரி தேவி வடிவில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கல்வி, தொழில் மேன்மை அடையும். இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். சரஸ்வதிதேவியின் அம்சம் - பேச்சியம்மன் - பிரம்மசக்தி- பெரியாச்சி - பெரியாயி - வெள்ளையம்மா - வாக்தேவி - ஜக்கம்மா - படைவீட்டம்மன்.தசமி அன்று விஜயாவை வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே விஜயாதசமி என்பதை விஜயதசமி என்றார்கள் முன்னோர்கள். கல்வி, செல்வம், வீரம் மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றிகொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருட் பாலிக்கும் சுபநாள். விஜயதசமி. இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Tags : Navratri ,Nangaiyars ,
× RELATED மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்