×

வேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்

விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது திருத்தங்கல். இங்கு தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது.

தல வரலாறு

திருத்தங்கல்லில் உள்ள ‘தங்காலமலை’ என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை. இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன.

2ம் நிலை கோயிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களாலும்  மங்களாசாசனம் செய்துள்ளனர். மகாபலி சக்கரவர்த்தி மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருநாள் தனது கனவில் ஒரு அழகிய ராஜகுமாரனைக் கண்ட உஷை, தனது தோழி சித்ரலேகையிடம் அவனை ஓவியமாக வரைந்து தரும்படி கூறினாள். ஓவியம் முழுமை அடைந்தபோது, அந்த வாலிபர் பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தன் என தெரிய வந்தது. அனிருத்தன் அழகில் மயங்கிய உஷை அவனையே திருமணம் செய்வதென முடிவெடுத்தாள்.

இதன்பேரில் துவாரகாபுரி சென்ற சித்ரலேகை அங்கு தூங்கிகொண்டிருந்த அனிருத்தனை வாணாசுரனின் மாளிகைக்கு தூக்கி வந்தாள். தூக்கம் கலைந்து விழித்த அனிருத்தன் உஷை மீது காதல் கொண்டு அவளையே காந்தர்வ மணம் புரிந்தான். இதனால் ஆத்திரமடைந்த வாணாசுரன் இருவரையும் கொல்ல முயன்றான். இதனையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அனிருத்தனை மீட்டார். அப்போது திருத்தங்கல் பகுதியில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி அங்கு இருவருக்கும் திருநின்ற நாராயண பெருமாள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர்.  சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

Tags : Thiruninra Narayana Perumal ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிரந்தரமாக தடை செய்க: ஜி.கே.வாசன் வேண்டுகோள்