×

அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலை

சமயம் வளர்த்த நாயன்மார்கள்-6

அப்பர் பெருமான் திருநல்லூரை தம் சிரசுச் சிகரத்தில் சூடி மகிழ்ந்த விஷயம் நெகிழ்ச்சுக்குரியது. திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார். திருச்சத்தி முற்றம் அடைந்து கொழுந்துச் சிவந்திருக்கும் ஈசனைக் கண்டு கண்ணீர் சொரிந்தார்.

சிவக்கொழுந்தீ குழைந்து தழுவிக் கிடக்கும் பெரிய நாயகியைக் கண்டு, ஈசனின் பேரணையால் தீந்தமிழ் பாக்களை மாலையாக்கி மகேசனின் பாதத்தில் சூட்டி மகிழ்ந்தார். மாலை சூடிய நாயகன் தன்னை பல்வேறு திருவுருவங்களாய் தரிசனம் அளித்தான். பேரானந்தப் பெருவெள்ளத்தில் அவரை முகிழ்த்தினான். ஆனாலும், எங்கோ தீராத ஏக்கம் நாவுக்கரசரின் நெஞ்சை தவிக்க வைத்தது.

‘‘கொன்றை சூடிய வேந்தன் தம் நனைந்த திருவடிகளை தேவர்கள் தலையில் வைத்தீராமே என ஈசனை நோக்கி நெக்குருகினார். அந்த பாக்கியம் எமக்குக் கிடையாதா என சத்திமுற்றத்துச் சந்நதியை தம் கண்ணீரால் நனைத்தார். சிவக்கொழுந்தீசனும், ஐயனை குழைவாய் தழுவும் கோலம் கொண்ட உமையும் நாவரசரை குளுமையாகப் பார்த்தனர். நாவுக்கரசர் அருளில் நனைந்தார். அந்நேரம் செவிக்குள் அசரீரியாய் நல்லூர் வருவாயாக...விரைவாய் வருவாயாக என ஒருமுறைக்கு இருமுறை கட்டியம் கூறுவதுபோல் பகர்ந்தார். திருநல்லூர் திக்கு நோக்கி விரைந்தார். சிவத்தொண்டர்களால் நிறைந்த திருநல்லூர் நாவுக்கரசரின் அடி பணிந்து வணங்கியது. திருநல்லூர் நாயகன் கல்யாணசுந்தரேஸ்வரின் முன்பு களிப்பெய்தி அமர்ந்தார்.

சிறு குழந்தைபோல் தரையில் தவழ்ந்துபோய் கண்ணீரோடு ஈசனைப் பார்த்தார். ‘‘கூற்றம் எனும் எமன் வந்து குலைக்கும் முன் பெருமானின் பூவடிகளை என் தலைமீது பொறிக்க மாட்டீரா என கேவல் பொங்க அழுதார். நல்லூர் பெருமான் கனிந்தார். உமையன்னையும் உடன் அமர்ந்தாள். சட்டென்று ஈசன் லிங்கத்தினின்று ஜோதியாய் கிளர்ந்தெழுந்தான். வீரக்கழல் அணிந்த ஈசனின் திருவடி ஜோதியின் ஒளிபட்டுப் பிரகாசித்தது. நாவுக்கரசரின் முகம் ஒளிர்ந்தது. எம்பெருமானே... எம்பெருமானே... என கண்கள் கூச அலறினார்.

நெகிழ்ந்து கிடந்த நாவுக்கரசரின் தலையின் மேல் தம் திருவடிகளை மெல்ல பதிக்க பரவசத்தின் சிகரத்தைத் தொட்டார். புறவுலகின் நினைவை முற்றிலும் இழந்து அகத்தில் பொங்கி ஆர்ப்பரித்த ஈசனின் அருட் சமுத்திரத்தில் கரைந்தார். ஈசன் இன்னும் அழுத்தமாய் பதிக்க ஈசனோடு ஏகமாய் கலந்த நிலையில் கண்கள் திறக்க யாவினுள்ளும் ஈசன் உறைந்திருப்பது பார்த்து நாதழுக்க பெருங்குரலெடுத்து அலறினார்.

ஈசன் மெல்ல சுருங்கி லிங்கத்தினுள் ஒடுங்க, அகம் நிறைந்த நாவுக்கரசர் குழந்தைபோல தளர் நடை நடந்து சந்நதிக்கு அருகே அமர்ந்தார். உள்ளுக்குள் பெய்த பெருமழையை பாக்களாக மாற்றி திருப்பதிகங்களாக திருவாய் மலர்ந்தருளினார். ஒவ்வொரு பதிகத்திலும் ‘நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே’ என்று தம் சிரசில் ஈசன் சூடிய திருவடியை நினைந்து நெகிழ்கிறார்.

அதோடு நாவுக்கரசர் விடவில்லை. நம்மீது கருணை கொண்டவரான அவர், ‘‘எம் தலையில் பதித்ததுபோல் உம்மை நாடிவரும் பக்தர்பெருமக்களின் தலையிலும் திருவடி பதிக்க வேண்டுகிறேன்’’ என வினயமாய் கேட்க ஈசனும் சரியென்று உகந்தான்.

இதேபோன்று ஐயாறுகளும் பாய்ந்து வளம் பெருக்கும் தலமான திருவையாறிலும் அப்பரடிகளை ஈசன் ஆட்கொண்டதை பார்ப்போம் வாருங்கள்!
திருக்காளத்தியில் திருநாவுக்கரசர் வாயு ரூபமாக உள்ள ஈசனை தரிசிக்கும்போதே கயிலையின் நினைவு நெஞ்சு முழுதும்
பரவியது. வயிறு குழைந்தது. உள்ளுக்குள் ஒரு விம்மலும், தாங்கொணா தாபமும் பெருகியது. ‘எதுவாயினும் கயிலையை தரிசிக்காது இவ்வுடலை விடேன்’ எனும் ஒரு வைராக்கியம் பொங்கியது. மேனி முழுதும் நீறுபூசி, மனம் முழுதும் ஊற்றுப் பெருக்காக மகாதேவனின் திருநாமம் பொங்கிக் கொண்டிருந்தது. அருகே வந்தோரை நாதனின் நாமம் தீண்டி தீ போல் வளர்த்தது.

ஈசனின் அருட்பேராற்றல் பிழம்பாகப் பொங்கி சொக்கப்பனையாக திக்கெட்டும் பரவியது. பெருங்கூட்டமாகக் கூடி அப்பரடிகளின் திருவடிகளை தரிசித்தார்கள். பெரும்பேறுற்றார்கள். பஞ்சாட்சரம் எனும் நமசிவாய மந்திரமே ஒரு உரு கொண்டு வந்ததோ என்று அவர் முகப் பிரகாசம் பார்த்து விக்கித்திப் போனார்கள். ஆனால், வேறொரு புறம் பஞ்சாட்சரத்தின் மூலமான பஞ்ச நதியும் சங்கமித்துக் கலக்கும் ஐயாறு எனும் திருத்தலத்தில் உற்ற ஐயாறப்பர் நாவுக்கரசரிடம் ஆசையாக விளையாடத் தொடங்கினார்.

ஐயாறுகளும் அத்தலத்தை உரசி நகர்ந்தாலும் ஐயாறப்பனை காவிரி சற்றே நெகிழ்ச்சியாக அணைந்து தெள்ளோடையாக நகர்ந்தாள். திருக்கோயிலின் திருவாயிலில் தம் சிரசு பதித்து பணிந்தாள். பக்தியில் சிவந்து அமைதியாக நகர்ந்தாள். வேதமோதும் அந்தணர்களின் குரல் விண்ணைமுட்ட, பதிகப் பாக்கள் மேகத்தை கரைக்க தொலைவே நின்று பார்த்த காவிரி இவ்விரு இசைக்கும் சதங்கை கட்டி நாட்டியம் செய்வதுபோல் குதூகலித்தாள். ஏனோ, காவிரிக்கும் கயிலையைக் காணும் ஆவல் அதிகமானது. சிவபக்தி அவளையும் சுட்டெரித்தது. அவளறியாது காவிரிக்குள் கயிலை உள்ளுக்குள் உறைந்தது. நாவுக்கரசரை திருக்காளத்தி எனும் தலத்திலிருந்து இமயம் நோக்கி நகர்த்தியது. வாக்கீசர் வடக்கு நோக்கி நகர்ந்தார். சூரியன் உச்சி நோக்கி நகர ஆரம்பித்தான்.

இங்கே ஐயாறப்பர் சிருங்காரமாகச் சிவந்தெழுந்தார். ஐயாறுகளும் ஆர்ப்பரித்தன. அப்பரடிகளின் உள்ளமும் உறுதியாக, திருப்பாதங்கள் இமயத்தின் திக்கு நோக்கி தொடர்ச்சியாக நடக்கத் துவங்கின. ஆந்திராவின் மையமான திருப்பருபதம் எனும் சைலத்தை அடைந்தார். மல்லிகார்ஜூனரின் மலர்ப்பாதங்களில் வீழ்ந்தார். சிவாக்னி இன்னும் சுழன்றெழுந்து சபாபதியாக நாட்டியஞ் செய்தது. கர்நாடக மாநி லத்தை அடைந்து சர்வேஸ்வரனின் தலங்களைக் கண்ணாரக் கண்டு கடந்தார்.

திருக் கூட்டம் சுற்றிச் சூழ காடறுத்து காரிருள் கண்ணிமை மறைக்கும் இடங்கள் தாண்டினார். இதயத்தில் பெருஞ்சோதியன் ஈசனின் பேரொளி யாவினிலும் உடன் வந்தது. மகா மயானமாக விளங்கும் காசியை எட்டினார். காணுமிடங்களிலெல்லாம் விஸ்வநாதன் சிதையில் வேகும் ஜீவனின் அகச்செவியில் ராம நாமம் சொல்வதைப் பார்த்து திகைப்புற்றார். ‘என் சிவனே... என் சிவனே’ என்றுப் பிளிறி மூர்ச்சையுற்றார். கயிலை இன்னும் எவ்வளவு தொலைவு என்று விழித்தவுடன் வினவ விண்ணைக் காட்டினார்கள் வாரணாசித் தொண்டர்கள். எத்துணை தூரமிருப்பினும் அவன் துணை எனக்கிருக்கிறது என வீறு நடைபோட்டார். திருக்கூட்டம் அயர்ந்தது. அப்பரடிகளின் அடிபற்றித் தொடர்ந்தது.

அவர் வேகம் பார்த்து பயந்தது. கங்கை தாண்டி இமயம் நோக்கி நகரும்போது இடையில் குறுக்கிட்ட பாலை வனத்தின் வெப்பம் தாங்காது சோர்ந்தது. பாலைச் செடிகளின் நிழலில் ஒதுங்கியபோது அப்பரடிகள் தீக்கனலாக கொதிக்கும் பாலை மணலில் உன்மத்தம் பிடித்தவர்போல பதை பதைத்து நடந்தார். கூட்டம் மிரண்டு பின்வாங்கியது. அடியார்கள் பின்னோக்கி நிற்பதை அப்பர் அறியாத நிலையில் வெகு தொலைவுக்கும் அப்பால் ஓட்டமும் நடையுமாக திரிந்தார். நாவுக்கரசர் வெகு தொலைவே புள்ளியாக மறையும் வரை பார்த்து விட்டு வேறெதுவும் புரியாத நிலையில் அடியார்கள் இருண்டு போய் அமர்ந்தனர். உச்சிச் சூரியன் மேற்குப் பக்கம் தலைசாய்த்தான். செம்மணலில் சூரையாக காற்று எழுந்தது. வெகு உயரே நிமிர்ந்து மேகம் தொட்டது. ஆதவனை மறைத்தது. முதன் முதலாக அந்தப் பாலை நிலம் நாவுக்கரசரின் புனிதத்தால் அடைமழையாக விடாது பெய்தது.

திருக்கூட்டம் ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை இதுதானோ’ என்று நடந்தபடியே வாரணாசியின் எல்லையைத் தொட்டது. விஸ்வநாதர் விநயமாக அந்தப் பெரியோரை பின் தொடர்ந்தார். காவிரிக்குள் கங்கை சூட்சுமமாக எட்டிப் பார்த்தாள். ஐயாறு இன்னும் அதிர்வோடு விளங்கியது. நாவுக்கரசர் தனக்குள் மெல்ல கரைய ஆரம்பித்தார். கயிலைக் காற்று வெகு தொலைவே வரும் வாக்கீசர் மீது தவழ மெல்ல தான் உடம்பு என்கிற பிரக்ஞையை இழந்தார். வேறொரு உயர்ந்த நிலை அவருக்குள் திரண்ட வெண்ணையாக மேலெழுந்தது. ஒரு சிறு பாறைச் சறுக்கலில் உருண்டு விழுந்தார். நிதானித்து புரண்டு எழுந்தார்.

கூன்முதுகும், நாடி நரம்புகளும் அவரின் வேகம் தாங்காது சோர்ந்தன. வழுவாது உழவாரப் பணி செய்த அந்தக் கரங்களின் மணிக்கட்டுகள் மரத்துப் போனது. கணுக்கால்கள் வலிமை இழந்து மடங்கிச் சரிந்தது. தலைதூக்கி நிமிர்ந்து பார்க்க பனிப் புகையில் கயிலையின் மீது சூரியனின் கிரணங்கள் பட்டு ஒளிர்ந்ததைப் பார்த்தவர் ‘என் சிவனே... இதோ வந்து விட்டேன்’ என்று மீண்டும் எழுந்தார். உடம்பு எழ மறுத்தது. அந்தக் கடுமையான வெயிலில் சுட்டெரிக்கும் பாறையில் தனது நெஞ்சுப் பகுதியைத் தேய்த்துக் கொண்டு உந்தி உந்தி முன்னேறலானார்.

உடம்புத் தோல் கிழிந்து குருதி பெருகியது. கை கால்களின் மணிக்கட்டு முட்டிகள் பெயர்ந்து துண்டாவதுபோல தனியே கிடந்தன. அலட்சியத்தோடு தன் மேனியைப் பார்த்தார், நாவுக்கரசர். திருவதிகை வீரட்டானச் சிங்கம் உடலை வீசியெறிந்து கயிலையின் பொற்பாதத்தை பிடிக்கும் பேராவல் உயிரை பின்னே தள்ளி தமது பக்தித் தீயை முன்னே வளர்த்துப் போனது. இதயத்தில் காட்டுத் தீயாக ஈசனை காணும் தாபம் கொழுந்து விட்டெறிந்தது. மெல்ல மயக்குற்ற நிலையில் அடர்ந்த காடுகளுக்குள் கண்மூடிக் கிடந்தார். காசி விஸ்வநாதரும் கயிலை நாதனுமாகிய சிவபெருமான் கருணைக் குடையாக அவர் பின் தொடர்ந்தார். அப்பரடிகளின் ஆழ்ந்த சிவ பக்தியையும், சிவஞானத் தேடலையும் விண்ணளவு உயர்த்தி சிம்மாசனத்தின் நாளுக்காக காத்திருந்தனர்.

கயிலைப்பிரான் நாவுக்கரசர் வாயாறப் பாடிய தெள்ளமுதுப் பாக்களை அழகிய தாமரை மலர்கள் பூத்த தடாகமாக மாற்றினார். ஐயாறு தீர்த்தங்களில் ஏனோ சட்டென்று தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின. சடாபாரம் தாங்கி பசுபதியாக விளங்கும் மகாதேவன் சிறு முனிவனாக வேடம் கொண்டார். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் ரிஷப வாகனத்தின் மீதேறி அமர்ந்தனர்.

அந்த இருண்ட கானகத்தில் தன்னை இழந்த நிலையில் கிடக்கும் நாவுக்கரசரை ஆனந்தத்தோடு பார்த்தார், அந்த முனிவர். காடு முழுதும் வெண்ணீற்றின் மணம் வீசியது. வாக்கீசரின் நாசியை உரசியது. தலைதூக்கி இடுங்கிய கண்கள் கொண்டு முனிவரை பார்த்தார், அப்பரடிகள். முனிவர் வேடத்தில் வந்தவர் வேங்கைத் தோல் போர்த்திய ஈசன் என்பதை அறியாத அப்பர் ஏதோ பேச நாக்கைச் சுழற்றிப் பார்த்தார். மேலன்னத்தில் நாக்கு ஒட்டிக் கொண்டு பிரிய மறுத்தது. முனிபுங்கர் கை உயர்த்தி தானே பேசுவதாகச் சொன்னார்.

‘‘இப்படி உம்முடைய அங்கங்கள் அழிந்து, வெம்மையான பாலைவனத்தில் கருகி அவஸ்தைக்குள்ளாகும் காரணம் எதுவோ’’ என்று திருவாய் மலர்ந்து கேட்டார். அப்பர் காரணம் சொல்லும்போது தம் நெஞ்சு முழுவதையும் தம்மால் வார்த்தையாக்க முடியுமா என்று கவலையுற்றார். ஆனாலும், நாக்கை பிரித்து தமது ஆசையை வார்த்தையாக்கினார். வேடத்தினுள் மறைந்த வேதநாயகன் இன்னும் அருகே அமர்ந்தான்.

‘‘இமயத்து அரசனான இமவானின் புதல்வியான பார்வதி தேவியையும், எம் தலைவன் கயிலாயப் பதியையும் ஒரு சேர தரிசித்து என் தலைமேல் கை உயர்த்தி கும்பிடுவதற்காக அடிவாரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். தேவர்களுக்குக் கூட அரிதான இச்செயலை மக்கள் எய்துவது அவ்வளவு எளியதா என்ன?

இந்தப் பாலைவனமும், கானகத்திலும் வந்து என்ன காரியம் செய்கிறீர்’’ என்று சொல்லி எழுந்தார் முனிவர். மெல்ல நிமிர்ந்தார். விண்ணுயர வளர்ந்தார். சட்டென்று மறைந்தார். ஆனால், அசரீரியாக வெளிப்பட்டு பேசலானார். ‘‘புகழோடு ஓங்கி விளங்கும் திருநாவுக்கரசனே நீர் எழுவீராக’’ என எதிரொலித்தா.

சட்டென்று வாக்கீசரின் அங்கங்களில் காயங்கள் மறைந்து அழகிய திருமேனியைப் பெற்று ஒளியோடு விளங்கினார். ஆயினும் குரலில் இன்னும் குழைவிருந்தது. ‘கயிலையைக் காண வேண்டுமே...’ விடாப் பிடியாகக் கேட்டார். பிடியைத் தளர்த்தாத பக்தியை மெச்சினார் கயிலாயநாதர். அசரீரி அவர் செவியில் இன்னுமொரு அற்புதத்தை பகன்றது.

‘‘நமசிவாய நாமத்தை ஒரு முறை சொல்லி இதோ இப்பொய்கையில் மூழ்கி எழ கயிலையின் சகல கோணங்களையும் காணலாம்’’ என்றார். நாவுக்கரசர் குனிந்து குளம் பார்த்தார். வானத்தின் முகில்களின் மத்தியில் ரிஷபாரூடராக ஈசனைக் கண்டார். கலையாத பக்தியை உடையவர் நீரைக் களைந்து மெல்ல மூழ்கினார்.

திருவையாறு அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஐயாறப்பர் பெருமானின் வரவிற்காகக் காத்திருந்தார். எல்லோர் உள்ளத்திலும் ஒரு சொல்ல இயலாத ஒரு கிளர்ச்சி உண்டானது. சாரைசாரையாக மக்கள் கோயில் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். திருக்குளம் அருகே குழுமி நெடிதுயர்ந்த அந்த கோபுரத்தை நோக்கி இருகைகளையும் உயர்த்தி ஐயாறா...ஐயாறா...என்று பிளிறினர். அப்பரடிகள் கானகத்தில் பூத்த பொய்கையில் மெல்ல மூழ்கினார். திருவையாற்றில் சந்திரனைத் தரித்த மகாதேவன் பேரொளியோடு இறங்கினான்.

காவிரிக்குள் மறைந்திருந்த கங்கை சுழன்றெழுந்தாள். ரிஷபாரூடராக அம்மையப்பன் விண்ணில் நிறைந்தான். திருவையாறு கண நேரத்தில் கயிலையாக மாறியது. தேவர்களும், மாமுனிகளும், கந்தர்வர்களும் ஏன், பிரம்மாதி, விஷ்ணு உட்பட யாவரும் ஒன்றாக நின்று கயிலை தம்பதிகளை நோக்கித் தொழ அப்பரடிகள் நமசிவாய என்று சொல்லி குளத்தினின்று மேலெழுந்தார்.

கயிலையை கண்ணுக்குள் நின்றதைப் பார்த்தவர் அலறி ஓடினார். அழுது புரண்டார். எங்கு காணிணும் யாவற்றினுள்ளும் ஈசன் இழைந்துப் பிணைந்திருப்பதைக் கண்டவர் உன்மத்த பித்துப் பிடித்தவராக ஐயாறப்பர் சந்நதி முன்பு நின்றார். பதிகப்பாக்களை கார்மேகம் தொட்ட சூரைக்காற்றாக சுழற்றி சுழற்றிப் பாடினார். ஈசனோடு இணைந்த இதயம் பொழிந்த பதிகங்களில் பக்தியும், ஞானமும் சேர்ந்துக் குழைந்திருந்தது. திருவையாறே ஒன்றாகக் கூடியது. அப்பரின் ஞானப்பெருங்கடலில் கரைந்து காணாமல் போனது. இன்றுவரை திருவையாறு பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.

(சிவம் ஒளிரும்)

தொகுப்பு: கிருஷ்ணா

Tags :
× RELATED காமதகனமூர்த்தி