×

தெய்வயானைக்கினிய பெருமாளே!

அருணகிரி உலா-102

நாரதர் வேள்வியினின்றும் தோன்றிய ஆட்டுக் கிடாவை வீரபாகு அடக்க, முருகன் அதன்மேல் ஏறி அமர்ந்து அதை அடக்கினான். சூரபத்மனின் ஒரு கூறை மயிலாக மாற்றி அதைத் தன் வாகனமாகக் கொண்டான். தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்டபோது சீதனமாக ஐராவதம் உடன் வந்தது. பரங்குன்றக் கருவறையில் இம்மூன்றையும் காணலாம்.

‘‘சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.’’

இப்பாடலில் யானை வளர்த்த பூங்கொடியை (தெய்வயானையைத்) தழுவுகின்றவனே என்று விளிக்கிறார். திருமாலின் கண்ணில் தோன்றிய அமுதவல்லி, ஒரு குழந்தையாக வடிவெடுத்து, இந்திரன் பாற்சென்றாள். அக்காலத்தில், சூரபத்மனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்து வந்த இந்திரன் தன் யானையாகிய (தந்தி = ஆண் யானை) ஐராவதத்தினிடம் கொடுத்து வளர்க்கச் செய்தான்.

எனவே அவள் தெய்வயானை எனப்பட்டாள். சூரசம்ஹாரத்திற்குப்பிறகு முருகனுக்கும், அவளுக்கும் திருமணம் நடைபெற்றது. எனவே ‘ஆண் யானை’ வளர்த்த பூங்கொடி போன்ற பெண்ணைத் தழுபுவனே’ என்னும் பொருளுடன் ‘தந்தியின் கொம்பைப் புணர்வோனே’ என்று பாடுகிறார். மற்றொரு பாடலில் ‘தெய்வயானைக்கினிய, வெள்ளை யானைத் தலைவ, தெய்வயானைக்கினிய பெருமாளே’ என்று நயம்படக் கூறுகிறார்.

நக்கீரர் ‘மாடமலி மறுகிற் கூடற்குடவயின்’ (குடக்கு= மேற்கு) என்று மதுரையின் மேற்கே திருப்பரங்குன்றம் இருந்ததாகப் பாடுகிறார். அருணகிரியார் ‘தென்பரங்குன்று’ என்றும் ‘குடக்குத் தென் பரம் ‘பொருப்பு என்றும் தம் பாடல்களில் குறிப்பிடுகிறார். வெள்ளப்பெருக்கின் காரணமாகப் பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் மதுரை நகர் இடம் மாறியதால், இன்று மதுரை நகரின் தென்மேற்கில் பரங்குன்று உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

(மலைக்குப் பின்புறம் உள்ள குடவரைக்கோயில், இடைக்காலத்தில் ‘தென்பரங்குன்று’ எனப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. இங்கு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ‘உமையாண்டவர் குகைக் கோயிலில்’ கி.பி.1310 ஆம் ஆண்டு வரை வழிபாடு நிகழ்ந்ததாகவும் பின் சமணர்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை திருப்பரங்குன்றத்தில் பாடப்பட்ட நூல். மதுரைக் கடைச்சங்கப் புலவர்களுள் தலைமைத் தானம் பெற்றிருந்தவர் நக்கீரர். திருப்பரங்குன்றத்திற்குச் சென்று சரவணப் பொய்கையில் குளித்து சிவபூஜை செய்வதை நித்திய கர்மாவாகக் கொண்டிருந்தார். சோமசுந்தரரைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் பாடாதவர். முருகவேள் அவரைத் தன்னைப் பாட வைப்பதற்காக ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான். அண்டராபரணர், உக்கிர மூர்த்தி எனும் இரு பூதகணத் தலைவர்களை ஏவி அவரிடம் ஒரு குற்றம் கண்டுபிடித்து பின் குகையில் அடைக்குமாறு கூறினான்.

பூதகணங்கள் அரசமரத்து இலை ஒன்றினைக் கிள்ளி கீழே எறிய அந்த இலை பாதி நீரிலும், பாதி தரையிலும் விழ, நீரில் விழுந்த பாகம் மீனாகவும், தரையில் விழுந்தது பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. இதைக் கண்ட நக்கீரர் ஒரு நரம்பைக் கிள்ளி எடுத்து அவரைப் பிரித்துவிட இரண்டும் துடிதுடித்து இறந்தன.

‘இக்கொலையைச் செய்த உம்மை சிறையிலிடுவோம்’ என்று கூறி அவரைச் சிறையிலிட்டன, பூதகணங்கள். நக்கீரருக்கு, முருகப்பெருமான் கிரௌஞ்ச கிரியை வேலால் பிளந்தது நினைவுக்கு வரவே, அவனைப்போற்றி ‘திருமுருகாற்றுப்படை’ நூலைப் பாடினார் என்று பரங்கிரிப்புராணம் குறிப்பிடுகிறது. முருகனது வேல் குகையைப் பிளந்து நக்கீரரை விடுவித்தது. காளத்திப் புராணத்தில், குதிரை முகமுடைய கற்கிமுகி எனும் பூதத்தின் குகையில் 999 பேருடன் ஆயிரமாவது நபராக அடைபட்டார் என்றும், அவரது திருமுருகாற்றுப்படையில் மகிழ்ந்து முருகன் பூதத்தைக் கொன்று வேலால் குகையைப்பிளந்து அனைவரையும் விடுவித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. பல பாடல்களில் அருணகிரியார் முருகன் நக்கீரரைக் காத்தது குறித்துப் பாடியுள்ளார்.

‘‘அரிய பாவலர் உரை செய அருள்புரிகுக’’
‘‘கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர்
இயல் கேட்ட கருணை வேளை’’

(வேதங்களுக்கு ஒப்பான மொழிச் செறிவுடையது
 திருமுருகாற்றுப்படை என்கிறார்)
‘‘எதிரில் புலவர்க்குதவு வெளிமுகடு முட்ட வளர்
இவுளிமுகியைப் பொருத ராவுத்தனானவனும்’’
(இவுளிமுகி = குதிரை முகம் கொண்ட பெண் பூதமான கற்கிமுகி)

(குதிரை முகம் கொண்டவளை அடக்கியதால் முருகனை
 ‘ராவுத்தன்’ என்று குறித்திருப்பது ரசிக்கத்தக்கது)
‘‘இயல் முநிபரவ ஒரு விசை அருவரையூடதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன’’
- (புயவகுப்பு)

‘‘பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
இடித்து வழிகாணும் (வேல் வகுப்பு)

திருமுருகாற்றுப் படை பாட ‘உலகாம் உவப்ப’ என்று முருகன்
அடியெடுத்துக் கொடுத்ததையும் அருணகிரியார்
பாடுகிறார்,
‘‘அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன்
அருளால் அளிக்கு கந்த பெரியோனே’’

நக்கீரரைக் காத்த வேலாயுதனை வணங்கி, என் நெஞ்சமாகிய கனகல்லை உன் வேலாயுதத்தால் தொளைத்து அதனுள் இருக்கும் காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்சர்யம் எனப்படும் ஆறுபகைகளை அறுத்தெறிந்து விடு’’ என்று வேண்டிய வண்ணம் மதுரைக்கு அருகே உள்ள ஆறாவது ஆற்றுப்படைத் தலமான பழமுதிர் சோலையை நோக்கிப் பயணிப்போம்.

1950-களில் வேல் வழிபாடு மட்டுமே நடைபெற்று வந்த பழமுதிர் சோலையில், பிற்காலத்தில் ஆதிவேலுடன், விநாயகர், தேவியருடன் கூடிய முருகப் பெருமான் ஆகியோருக்குத் தனிச்சிறு சந்நதிகள் அமைக்கப்பட்டு, இன்று சோலைக்கு நடுவே ராஜகோபுரத்துடன் விளங்கு
கிறது. கதிர்காமமே ஆறாவது ஆற்றுப்படையான பழமுதிர் சோலை என ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் ‘பாசத்தால்’ எனத் துவங்கும் சோலைமலைத் திருப்புகழில் இத்தலம் மதுரைக்கு அருகிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசித் தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ
ஆரத் தோடகில் உள்ள தருக்குல
மேகத்தொடருமித்து நெருக்கிய
ஆதிச் சோலை மலைப் பதியிற்றிகழ் பெருமாளே’’

தன்னை நாடிப் போற்றுபவரின் உள்ளத்தில் புகும் உத்தமனே! மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளம் வந்தபோது கரை அடைக்க வந்தியம்மையின் வேலைக்காரனாய் வந்து, அவள் கொடுத்த உதிர்ந்த பிட்டமுதை உண்டு (‘வைகையாறு மீது நடமிட்டு மண் எடுத்து மகிழ் மாது வாணி தரு பிட்டு நுகர்பித்தன் - மதுரைத் திருப்புகழ்) பாண்டியனால் பிரம்படி பட்ட சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரைக்கருகில், சந்தன அகில் மரக்கூட்டங்கள் மேகத்தை அளாவி நெருங்கியுள்ள மிகப்பழைய பதியான சோலை மலையில் விளங்கும் பெருமாளே!

பழமுதிர் சோலையில் ‘நூபுர கங்கை’ எனும் சிலம்பாறு ஓடுகிறது. இது பற்றிய குறிப்பு, ‘வாரண முகம்’ எனத்துவங்கும் இத்தலத் திருப்புகழில் உள்ளது என்பதால் இப்போது நாம் காணும் தலமே பழமுதிர்சோலை என்பது உறுதியாகிறது.

‘‘ஆரண முழங்குகின்ற ஆயிர மடந்தவங்கள்
ஆகுதியிடங்கள் பொங்கு நிறை வீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுரமிரங்கு கங்கை
யாரமர வந்தலம்பு துறை சேரத்
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்குகின்ற
சூழ்மணி பொன் மண்டபங்கள் ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே.’’

வேதம் முழங்குகின்ற ஆயிரக்கணக்கான துறவிகள் வசிக்கும் மடங்களும் வேள்விச்சாலைகளும் மிகுந்துள்ள வீதிகளில் பல கிளைகளாகப் பரந்துள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாறு நிரம்பிப் பொருந்தி வந்து ஒலிக்கின்ற நீர் துறைகளும், மகர தோரணங்கள் அசைந்து கொண்டிருக்கும் உயர்ந்த கோபுரங்கள் அடர்ந்து, ரத்தினங்கள் சுற்றிப் பதித்த சூரியனைப் போன்று, பிரகாசத்தால் மேன்மையடைந்த சிறந்த பொன்மயமான மாளிகைகள் விளங்கும் சோலைமலை எனும் திருப்பதியிலே வந்து விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே!

உடல் மடிந்து உயிர் போவதற்கு முன்பாக திருப்புகழ் கற்று, அதிலுள்ள சொற்களை நன்கு பயின்று முருகன் திருவடிகளைப் பற்றித் தொழுது அவனை அடைந்து பிறப்பை ஒழிக்கும்படி பரமுத்தியடைய ஒரு பாடலில் வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘ததலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும்

திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ......டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய்

(சத்தி = கக்கல், வாந்தி எடுத்தல்
திரிபலை = கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் இவை மூன்றும் சேர்ந்த மருந்து)
காரணமதாக எனத் துவங்கும் பாடலில் ‘‘அரியும் அயனும் கண்டிராத உனது ஞான நடத்தை எனக்குக் காட்டுவாயாக’’ என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
‘‘காரணம தாக வந்து ...... புவிமீதே
காலனணு காதி சைந்து ...... கதிகாண
 நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
 ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
 சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
 சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.’’

பொருள்: ஊழ்வினையை அனுபவிப்பதற்காக இப்பூமியில் பிறந்து, எமன் என்னைப் பிடித்துப்போக நெருங்காமல், நான் நற்கதி அடைய நீ திருவுள்ளம் வைத்து, திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காணக் கிடைக்காத ஞான நடனம் புரிந்துகொண்டு என்னை ஆள வரவேண்டும். (இவ்வேண்டுகோளை முருகன் பிரான்மலையிலும், செந்தூரிலும் நிறைவேற்றிக் கொடுத்தான்)

நிறைந்த அமுதம் போன்றவளும் முன்பு திருமாலின் கண்களினின்றும் தோன்றி அமுதவல்லி எனப்பெயர் பெற்றவளுமாகிய தெய்வ யானையின் மணாளனே! (‘அமுதத் தெய்வானை’ என்பார் முஷ்ணம் திருப்புகழில்) ஆறு திருமுகங்களும் பன்னிரு கண்களும் உடையவனே! சூரனின் பரிவாரங்கள் அழியும்படி வென்ற ஒளி வடிவேலனே! பழமுதிர் சோலை மலையில் விளங்கும் பெருமாளே!

வாதினையடர்ந்த எனும் திருப்புகழில், ‘ஸோ+அஹம்’ எனும் அஹங்காரம் ஒடுங்கிய நிலை பற்றியும், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றெனப் பாவிக்கும் ‘ஸ+அஹம்’ எனப்படும் ‘சோஹம் பாவனை’ பற்றியும் எளிமையாக விளக்கியுள்ளார். பாடலை இங்கு பார்ப்போம்.

‘‘வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு

நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.’’

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?