மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 60

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை

நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்

படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
- பாடல்  42

திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு  கனவும், கவலையும் இருக்கும். அதில் மாமனார், மாமியார் தன் மகளிடம் அன்பாக நடந்து  கொள்ள வேண்டும். கணவரின் அண்ணன், தம்பியின் மனைவிகள் சகோதரிகளாய் மகளிடம் விட்டுக் கொடுத்து, மனம் ஒருமித்து ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழவேண்டும் என்றும், மகளின் கணவன் அவளை மட்டுமே நேசிக்கக் கூடியவனாகவும், அவளுக்கு வசப்பட்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவு எத்துனை பேருக்கு நினைவாகியது எத்துனை பேருக்கு கானல் நீராகியது?

இந்த 21 ஆம் நூற்றாண்டில் இது எதுவும் பெரிய பாதிப்பையோ மன வருத்தத்தையோ அதிகமாக கொடுப்பதில்லை காரணம் இன்றைய சூழலில் திருமணம் முடிந்த உடனே பலர் தனிக் குடித்தனம் சென்று விடுவது வழக்கமாகி விட்டது. ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலையை நாம் சிந்தித்தால் மட்டுமே இதில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள முடியும். அதிலும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்த காலத்தில் ஒரு பெண் தன்னைப் பற்றிய அறிவையே தெரிந்து கொள்ளாத நிலையில் (விளையாட்டு பருவத்தில்) அவளுக்கு திருமணம் செய்து வைத்தால் அவள் என்ன செய்வாள், அத்தகைய சூழலில் பால்ய விவாகத்தை விரும்பாதவராய் இருந்தார் பட்டர் என்றாலும் பாரம்பர்ய நிமித்தமாக திருமணத்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் வருத்தப்படுவார்.

ஒரு திருமண விழாவின்போது ஆசிர்வாதம் வாங்க மணப்பெண் அவரை நமஸ்கரித்த போது, அந்தப் பெண்ணை பார்க்கின்றார் அவளுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதுதான் இருக்கும். அவள் முகத்தில் இன்னும் மழலை கூட மாறவில்லை, அந்த குழந்தை திருமணம் செய்து கொண்டு கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர் என்ற அத்துனை பேரையும் எப்படி சமாளிக்கப் போகின்றாள் என்று தன் மனதிற்குள் எண்ணியவாறே, மணப் பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டி உமையம்மையை மனதில் நினைத்தவாறே கண்களை மூடுகின்றார் பட்டர். அப்பொழுது அவர் மணக்கண்முன் ஓர் உருவம் தோன்றி மறைகிறது. அதில்...

 

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை

நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்

படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே

இந்த பாடலின் பொருளுக்கு உருவம் வந்தார்போல் தோன்றியது அபிராமிபட்டருக்கு.

அந்த பெண்ணிற்காக வருந்தி வேண்டியதை உமையம்மை செவி கொடுத்து கேட்டாளா? அதற்கு உமையம்மை என்ன செய்தாள்? என்பதை அறிவதற்கு முன்பாடலுக்குள் நுழைவோம்.எழுவகை பருவம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களின் பண்புகள் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றார்போல் மாறுபட்டு அமையும். அது உலக இயல்பு, அதுபோல் தேவதைக்கும், தியானிக்கப்படும் உருவத்திற்கும் ஏற்றார்போல் பலன் மாறுபடும் என்கிறது ஆகமங்கள். (உதா) உமையம்மையை பாலாம்பிகையாக தியானித்தால் வேண்டியதை உடனே அருள்வாள் காரிய சித்தி ஏற்படும்.

இளம் வயதுள்ளவளாக தியானித்தால் போகத்தை அருள்வாள். இதையே ‘‘யவ்வனா ரம்ப ரூடாயை’’ என்கிறது. லலிதாஸஹஸ்ர நாமம், அதே உமையம்மையை வயதில் மூத்தவளாக தியானிக்கும்போது மோட்சத்தை அருள்வாள் என்கிறது ஆகமம். இதையே ‘‘வயோ வஸ்தா விவர்ஜிதாயை’’ என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். அதுபோல் அபிராமி பட்டர், குடும்ப தலைவியாக உமையம்மையை வணங்குவோர், இல்லறம் நன்கு அமைய, மகிழ்வுற, இப்பாடலை அனுபவித்து நமக்கு அருளியுள்ளார்.

இப்பாடலானது இறைவியின்உருவத்தை விளக்கி கூறுவது போல் தோன்றினாலும், இரு பொருள் தரும்படிஅமைந்துள்ளது.   ஒரு பொருளால் உருவ நலனையும், மற்றொரு வகையால் சக்தி தத்துவத்தை விளக்குவதாகவும், அமைந்துள்ளது. ஆகையால் முதலில் உருவ நலனை காண்போம்.

 

‘‘இடம் கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி

 முத்து வடங் கொண்ட கொங்கை மலை கொண்டு’’

 - என்பது வரை உமையம்மையின் திருமார்பு நலன் விளக்கி கூறப்படுகிறது.

‘‘இடம் கொண்டு விம்மி’’  இருக்கும் இடத்தை விட்டு வெளிப்பட்டு விளங்கி தோன்றுவதாக உள்ளது என்பதனால் திருமணமாகி குழந்தை பெறாத நிலையில் உள்ள உமையம்மையை குறிப்பிடுகின்றார். இந்தப் பருவம் உடையவளாக உமையம்மையை வழிபட்டால் உடலுக்கு நலனை

செய்கின்றாள் என்கிறது ஆகமம்.  

‘‘இணை கொண்டு இறுகி’’ சரிசமமானதும் மிகவும் நெருங்கியதுமாகிற அமைப்பு. சிற்ப சாத்திரத்தின் வழி கணவன் மீது மிகுந்த அன்பு கொண்டவள் என்ற பொருளை உணர்த்தும் இந்த வடிவை தியானம் செய்பவருக்கு கணவன் - மனைவியிடம்இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். ‘‘இளகி’’ என்ற சொல்லிற்கு சாமுத்திரிகா லக்‌ஷணம் என்ற சாத்திரமானது உடல் உறுப்புகளின் அளவு மற்றும் அமைவுகளின் வழி குண நலன்களை உறுதி செய்கிறது. அது இளகிய திருமார்புகளை உடைய மகளிர் பேரன்பு.

‘‘முத்து வடங் கொண்ட’’ என்று முத்துமாலை அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். ‘‘முத்து’’ என்பது ஆகமத்தில் தூய்மையை குறிக்கும் அடையாளமாக சூட்டப்படுகின்றது. உமையம்மையானவள் மீனவர் குலத்தில் தோன்றி வளர்ந்தவள் என்பதனால் நாகை உமையம்மைக்கு மட்டும் தாய்வீட்டு சிதனமாய் முத்து மாலை சிறப்பு அடையாளமாக கூறப்படுகிறது.

‘‘கொங்கை மலை கொண்டு’’ என்பதனால் மலை போன்று நிமிர்ந்த வடிவத்தைக் கூறுவது என்பது பொருள், மலைவளத்தையும், மலை மகள் என்பதன் அடையாளத்தையும் குறிப்பிடுகின்றார்.  ‘மலைமகள் என்பது நாம் மிகையே’’ - 93 என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். ஆகமத்தின்படி மலைகளையே திருமார்புகளாக கொண்டவள் நிலமகள்.

 திருக்கடவூரின் தல வரலாற்றின்படி பூமா தேவியை குறிப்பிடுகிறது. இந்த சொல் ‘‘கொங்கை மலை கொண்டு’’ என்பதை வடமொழியில் ‘‘பர்வத ஸ்தன மண்டலே’’ என்று பூமாதேவியின் நிலையை குறிப்பிடுகிறது. இவ்வாறாக தியானம் செய்தால் வணங்குவோருக்கு பாதுகாப்பு ஏற்படும் என்கிறது ஆகமம். ஆகையால்...

‘‘இடம் கொண்டு விம்மி ’  வயதையும்

இணை கொண்ட இறுகி  என்பதனால் ஈசன் மேல் அவள் கொண்ட அன்பையும்.

‘‘இளகி’’  என்பதனால் உலக உயிர்கள் மீது கொண்ட கருணையையும்.

‘‘முத்து வடங் கொண்ட’’  என்பதனால் அவள் பிறந்த குலத்தையும்.

‘‘கொங்கை மலை கொண்டு ’’- என்பதனால் உமையம்மையை வணங்குவதால் மானுடருக்கு ஏற்படும் பாதுகாப்பையும்

குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர்.

சாக்த உபாசகர்கள் உமையம்மையின் உருவை தனித்தனியாக தியானம் செய்வது வழக்கம். அவ்வாறு தியானம் செய்வது என்பது வெவ்வேறு பயனை தரும்.உமையம்மையின் உடல் மற்றும் உறுப்பானது மானுட உடல் போல் கருதி நோக்கத்தக்கதல்ல மாறாக வர்ணம், பதம், மந்த்ரம் என்று தத்துவத்தை மையப்படுத்தி திருமார்பு நலன், இடை நலன், மொழி நலன் இவற்றை விளக்குகின்றார் பட்டர்.

இதையே லலிதா ஸஹஸ்ரநாமம் ‘‘பஞ்சாஷத் பீட ரூபின்யை’’- என்று குறிப்பிடுவதன் மூலம் உமையம்மையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பீடமாக வழிபடப்படுகிறது என்பதை அறியலாம்.மேலும், ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு உறுப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஸ்தனத்தை பற்றிய இப்பாடலின் பகுதியானது காசியில் உள்ள விசாலாட்சி, காலபைரவர், துண்டி விநாயகர் இவர்கள் மூவரையும் மறைமுகமாக குறிப்பதாகும்.

‘‘இறைவர் வலிய நெஞ்சை நடங் கொண்ட கொள்கை’’ இந்தச் சொற்களை நாம் புரிந்துகொள்வதற்கு கந்தபுராண கதையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை விளக்குவதாக இவ்வரி அமைகிறது.

பார்வதியின் முற்பிறப்பில் தட்சனின் மகளாகப் பிறந்து இறைவனை மணந்தாள். தட்சனின் யாகத்தில் மாப்பிள்ளையாகிற சிவபெருமான் மற்றும் மகளாகிற தாட்சாயனியை மதிக்காமல், அழைக்காமல் யாகம் செய்ததால் உமையம்மையானவள் கோபம் கொண்டு, தந்தையோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் உடலை யோகத்தினால் நீத்தாள்.

அந்த நேரத்தில் சிவபெருமான் தனியாக இருந்தார். மனைவி மீது பாசமற்றவராகவும், வலிய தவத்தை மேற் கொண்டவராகவும் திகழ்ந்தார். அந்த சூழலில் இந்திரன்,  பிரம்மா, விஷ்ணு முதலானவர்கள் உடல் நலம் கருதி சிவனை உமையம்மையோடு சேர்ப்பிக்க மன்மதனைக் கொண்டு சிவன் மனதில் காமத்தை தோற்றுவிக்க முயன்றார்கள். ஆனால், சிவனோ மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். காமம் சிறிதேனும் இல்லாதவராக திகழ்ந்தார்.

 இந்த திருக்கோலம்தான் கொற்கை வீரட்டானத்தில் (திருக்குறுக்கை) உள்ளது.காமதகன மூர்த்தி என்று ஆகமத்தில் கூறப்படுகிற இந்த வடிவத்தைத்தான் ‘‘இறைவர் வலிய நெஞ்சை’’ என்று இங்கேகுறிப்பிடுகின்றார் பட்டர்.சத்தியம், ஞானம், தர்மம், தயை, சாந்தி, ஷமா என்ற அறுவகை தவத்திற்குறியோர் குணத்தை பெற்றுள்ள உறுதியுடனும், குறிப்பாக மணமாகாத இளைஞனாக பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாக இறைவன் இருக்கும் திருக்கோலமே தட்சிணாமூர்த்தி.

அந்த தட்சிணாமூர்த்தியின் மன நிலையையே ‘‘வலிய நெஞ்சை ’’ என்று குறிப்பிட்டார், மேலும், உள்ளத்தை பலவீனமாக்கும் குணங்களான, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் இவைகளை நீக்கியவராய் இருப்பதே வலிய நெஞ்சாகும். இதையே ஆகமங்கள் சத்ரு சம்ஹாரஷடாணனர் என்று குறிப்பிடுகிறது. இவர் ஆறுமுகர் அல்ல. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவர், சத்யோஜாதம், அதோமுகம் என்று ஷண்முகரை உருவாக்கிய சிவனின் வடிவம். இந்த வடிவத்தையே ‘‘இறைவர் வலிய நெஞ்சு ’’ என்கிறார்.

( தொடரும்)

Related Stories: