திருவேங்கடவனாக காட்சியளித்த திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி

காவிரி பாய்ந்து வளம் சேர்க்கும் பிரதேசம். காவிரி கரையோர நந்தவனங்களில் பூத்த மலரோடு தமிழும் மணம்வீசிக் கொண்டிருந்தது. தமிழகத்தின் ஜீவ நாடியான அந்த காவிரிக்கு இன்று என்ன கோவமோ தெரியவில்லை. பொங்கி எழுந்துவிட்டாள் காவிரி அன்னை. பிரளய கால வெள்ளம் போல இருந்தது அவளது பெருக்கு.  இளங்கன்றை போல துள்ளி துள்ளி ஓடிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த ஓட்டத்திலும் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத ஒரு பக்குவம் இருந்தது. அது உற்று நோக்கியவர் கண்களுக்கு மட்டுமே விளங்கியது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க பாய்ந்து ஓடும் அந்தக் காவிரியின் வெள்ளப் பெருக்கில் ஒரு ஒற்றை ஓடம் தத்தளித்த படி இருந்தது. அடிக்கும் காற்றிலும் காவிரியின் ஓட்டத்திலும் அந்த ஓடம் பந்தாடப் பட்டது. அந்த ஓடத்தில் சொல்லி வைத்தாற்போல பன்னிரண்டே நபர்கள் தான் இருந்தார்கள். அந்த பன்னிரெண்டு பேரும் நெற்றியில் அழகாக தீட்டியிருந்த திருமண் காப்பு அவர்கள் தீவிர விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லாமல் சொல்லியது. பந்தாடப் படும் அந்த படகில் தவித்துக் கொண்டிருந்த அந்த பன்னிருவரும் ஒரே சமயம் அழகாக கை குவித்தார்கள்.

அன்று‘‘ஆதி மூலமே’’ என்று ஒரு பாமர யானை அழைத்த போது ஓடோடி வந்த கார்மேக வண்ணா! இன்று இங்கு எங்களை காக்க வரமாட்டாயா? ஹே பிரபோ தீன தயாளா’’ ஒரே குரலில் கோவிந்தனை வேண்டி சரண் புகுந்தார்கள் அந்த பன்னிருவரும். அவர்கள் வேண்டியது தான் தாமதம் உடன் நொடியில் வெள்ளம் வற்றி விட்டது. படகும் வெகு லகுவாக கரை ஏறியது.

கரையில் இவர்களது வருகைக்காகவே காத்திருத்தவர் போல ஒரு முனிவர் நின்று கொண்டிருந்தார். அதிக உயரமில்லை. அழகிய அவரது வதனத்தில் அருளுக்கும் கருணைக்கும் பஞ்சமில்லை. நெற்றிகொள்ளாத திருநீற்று பூச்சு. இடையில் இறுக்கிக் கட்டிய காஷாயம். கழுத்து கொள்ளாத ருத்ராட்ச மாலைகள். வாயில் தேன் தமிழ் மணம் என்று அந்த புதிய முனிவர் ஒரு தினுசாகத் தான் இருந்தார். அவரை கண்டதும் இந்த பன்னிருவரும் மரியாதைக்காக கை குவித்து வணங்கினார்கள். அவரும் சளைக்காமல் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கினார். பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார்.

‘‘கும்பத்தில் இருந்து பிறந்தவன் இந்த அடியேன். அந்த ஈசனுக்கு உபதேசம் செய்த முருகனிடம் தமிழ் பயின்றேன். அகத்தியம் என்ற இலக்கணம் எழுதி தமிழ் வளர்த்தேன். அகத்தியன் என்பது எனது திருநாமம். நீங்கள் யாரென்று நான் அறியலாமா சுவாமி!’’ பெயருக்கு ஏற்றார் போல அடக்கமாக வினவினார்,அகத்திய மாமுனிவர். தனது எதிரில் நிற்பது அகத்தியர் என்று தெரிந்ததும் பன்னிருவரின் முகமும் மலர்ந்து போனது. அந்த பன்னிருவரில் முதலில் இருந்த நபர் முன் வந்து பேச ஆரம்பித்தார்.

‘‘சுவாமி அடியேன் ’’பொய்கை ஆழ்வான் ‘‘ இவர் பூதத்தாழ்வார், அடுத்தவர் பேயாழ்வார்,....’’ என்று விரலால்  தனித் தனியாக ஒவ்வொரு ஆழ்வாரையும் சுட்டிக் காட்டி அகத்தியருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘‘தெரியும் சுவாமி அதனால் தான் தங்களுக்கு உதவும் பாக்கியம் கிடைத்ததும் ஓடோடி வந்தேன்.

நீங்கள் காவிரியில் தத்தளிப்பது தெரிந்ததும் கரையில் இருந்தபடியே விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டேன். அவருடைய அருளால் காவிரியில் வெள்ளம் வற்றி தேவரீர்கள் கரையேற வழியும் பிறந்தது. அதனால் இவருக்கு ‘‘கரையேற்று விநாயகர்’’ என்ற நாமம் வைத்துள்ளேன்’’ பெருமிதத்தோடு சொன்னார் அகத்தியர். கேட்ட பன்னிரு ஆழ்வார்களின் முகத்திலும் பரம சந்தோஷம். (கரையேற்று விநாயகரை இன்றும் கோயிலில் தரிசிக்கலாம். இவருக்கு வெறும் தைலக்காப்பு மட்டுமே சாத்திப்படுகின்றது.)

‘‘அன்று, எனது ராமனுக்கு வழிகாட்டிய நீங்கள் இன்று இந்த எழைக்கும் காட்டி விட்டீர்கள். அந்த ராமன் தான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும்’’ என்று அகத்தியரின் கைகளை பிடித்துக் கொண்டு கரைந்துபோனார் குலசேகர ஆழ்வார். அவரது தோளை தடவித் தந்து சமாதானப் படுத்தினார் அகத்தியர். பிறகு மெல்ல மற்ற ஆழ்வார்களை நோக்கி பேச ஆரம்பித்தார்.

 ‘‘உங்கள் பன்னிருவரையும் அடியேன் தரிசிக்கும் பாக்கியம் எப்படி ஏற்பட்டது...’’‘‘அதுவா சுவாமி! நாங்கள் வடவேங்கட மாமலையில் வானவர்கள் சந்தி செய்ய நிற்கும் தெய்வத்தை ( அமலன் ஆதி பிரான் - எனத் தொடங்கும் பிரபந்தத்தின் வரிகள்) சேவிக்கச் சென்றோம். ஆனால் அங்கே எங்களுக்கு அந்த திருமலை வேங்கடேசன், தரிசனம் தர மறுத்து விட்டான். இங்கே தென் தமிழ்நாட்டில் திருக்கோடிக்காவலில் நாங்கள் விரும்பும் தரிசனம் கிடைக்கும் என்று அசரீரியாக மட்டும் பேசினான்.

உடனே அந்த வேங்கடவனை தரிசிக்கும் ஆவலில் சற்றும் தாமதம் செய்யாமல் கிளம்பி விட்டோம். பிறகு நடந்ததை நீங்களே அறிவீர்கள் சுவாமி’’ திருப்பாணாழ்வார் மரியாதையோடு மொழிந்தார். அதைக்கேட்ட அகத்தியரின் முகத்தில் ஒரே ஒரு நொடி சிந்தனை கீற்று தோன்றி நொடியில் மறைந்தும் போனது. அதை ஆழ்வார்கள் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அகத்தியர் மெல்ல சுதாரித்துக் கொண்டு பயபக்தியோடு வணங்கி பேச ஆரம்பித்தார்.

‘‘உங்கள் பன்னிருவருக்கும், மாலவனை தரிசனம் செய்துவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா சுவாமி?’’ அடக்கத்தை விடாமல் கேட்டார் அகத்தியர். ‘‘அதற்கு நாங்கள் அல்லவா பாக்கியம் செய்திருக்க வேண்டும்! வேதம் என்னும் காட்டில் வாழும் அந்த மறைபொருளை, பந்த பாசம் அறுத்து, கானகத்தில் தவமிருக்கும் உங்களை போன்ற முனிவர்கள்தானே அறிவார்கள்.? ஆகவே, இனியும் தாமதம் வேண்டாம். உடன் எங்களுக்கு தரிசனம் செய்து வையுங்கள்’’ பன்னிரு ஆழ்வார்களும் ஒரே குரலில் மொழிந்தார்கள்.

‘‘அப்படியென்றால் என்னைப் பின்தொடர தேவரீர்கள் சித்தம் செய்ய வேண்டும்’’மீண்டும் பணிவோடு கேட்டார். ‘‘அது நாங்கள் செய்த தவப் பயன் சுவாமி’’தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமிதத்தோடு சொன்னார். பிறகு சற்றும் தாமதிக்காமல் அகத்தியர் நடக்க ஆரம்பித்தார். நடந்த படியே பின் தொடரும் ஆழ்வார்களை நோக்கினார்.‘‘செல்லும் வழியில் துணையாக, தேவரீர்களின் திவ்யப் பிரபந்தங்களை கேட்க ஆசையாக உள்ளது. சற்று மனம் வைக்கக் கூடாதா?’’ என்று அன்போடு அகத்தியர் கோரிக்கை வைத்தார்.

‘‘அவ்வளவுதானே சுவாமி! கரும்பு தின்ன கூலியா!’’ என்றபடி பன்னிரு ஆழ்வார்களும் முறையாக ஒருவர் பின் ஒருவராக தங்களது பிரபந்தங்களை மெய்மறந்து பாட ஆரம்பித்தார்கள். அதைக்கேட்ட மற்ற ஆழ்வார்களும் அகத்தியரும் உருகிப் போனார்கள். அகத்தியர் அப்படியே அவர்களை நடத்திக் கொண்டு ஒரு கோயிலுக்குள் நுழைந்தார்.

அதன் ராஜ கோபுரத்தில் ‘‘திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத கோடீஸ்வரர் ஆலயம்.’’ என்று பெரிய எழுத்தில் இருந்தது. அந்த எழுத்து அது ஒரு சிவன் கோயில் என்பதை பறை சாற்றியது. ஆனால், ஆழ்வார்கள் அனைவரும் மாலவனை பாடுவதில் முழுகிப் போனதால் அதை கவனிக்கவே இல்லை. அதைக் கவனித்த அகத்தியர் ஒரு கள்ளப் புன்னகை பூத்தார். மெல்ல அவர்களை நடத்திக் கொண்டு போய் திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சந்நதியின் முன் நிறுத்தினார். பிறகு கைகளை குவித்தார். அவரது இதழ்கள் மெல்ல பிரார்த்தனைகளை

முணுமுணுக்க ஆரம்பித்தது.

‘‘அம்மா! அம்பிகே! திரிபுர சுந்தரி! அன்று பாற்கடலை கடைந்த போது, அந்த மாயவன் மோகினி அவதாரம் எடுத்து (காமனை எரித்த) உனது கணவனையே மோகிக்க வைத்தார். அந்த, மோகினி அவதாரத்தை எடுக்கும்முன் , அந்த மேக வண்ணன் உன்னை தியானம் செய்தானாம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதாவது, உன்னைப் போலவே வேடம் தரிக்க வேண்டுமென்றால், முதலில் உன் உருவம் மனதில் தங்க வேண்டும் இல்லையா? அதுமட்டுமில்லை, உன்னை அல்லால் வேறொருவரிடம் அந்த ஈசன் மோகிக்க மாட்டார். ஆகவே, அந்த கோவிந்தன் உன்னை தியானம் செய்து நீயாகவே மாறிவிட்டாராம். அதனால்தான் மோகினியிடம் ஈசன் மோகித்தாராம். இதை நான் சொல்லவில்லை. ஹரிஸ் த்வாம் ஆராத்ய பிரணத ஜன சௌபாக்ய ஜனனி...’’ என்று தொடங்கும் சௌந்தர்யலஹரியின் பாடல் சொல்கிறது.

முன்னம் உன் அண்ணன் உன்னை தியானம் செய்து உன்னைப் போலவே வேடம் தரித்து நீயாகவே ஆகிவிட்டார். இப்போது இது உன் முறை தாயே. அகில உலகிற்கும் ஒரே தாய் நீதானே. இந்த பன்னிரு குழந்தைகள் அந்த மாயவனை தரிசிக்கப் படாதபாடு படுகின்றது. இதைக்கண்டு உன் தாயின் உள்ளம் இறங்கவில்லையா? இவர்களுக்கு அருள்வாய் தாயே! நீயே சரண் என்று நம்பி நான் இவர்களை அழைத்து வந்துவிட்டேன். இனி உன் பொறுப்பு. இவர்களை மேலும் அலைகழிக்காதே கண்களில் நீர்மல்க இரு கைகளையும் குவித்த படி திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரியை சரண் புகுந்தார் அகத்தியர்.

இது எதுவும் தெரியாமல் ஆழ்வார்கள், மாலவனை எண்ணி திளைத்திருந்தார்கள். அப்போது நொடியில் நடந்தது அந்த அதிசயம். திரிபுர சுந்தரியின் சந்நிதானத்தில் திடீரென்று ஒரு ஒளிக்கற்றை தோன்றி எங்கும் பரந்து விரிந்து அனைவரது கண்களையும் கூச வைத்தது. கண்களை கசக்கிக் கொண்டு கண்களைத் திறந்து பார்த்தால்.....

திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்பிகையின் கைகளில் பாசமும் அங்குசமும் இல்லை. மாறாக சங்கமும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப்போனது. ஞானப் பால் வழியும் தனங்களில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டுவிட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்துபோய் பீதாம்பரம் மிளிறியது. அவள் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் மின்னியது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்பிகை மாலவனாக மாறி விட்டாள்...

இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திருமாலாக காட்சி தருகிறாள், பெருமாட்டி. அவளது மகிமைகள் ஏராளம். துர்வாசர், எமன், சித்ரகுப்தன், செம்பியன் மாதேவி, ராஜராஜசோழன், நந்தி வர்ம பல்லவன், பாஸ்கராயர் ( லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதியவர்) என்று இவளது அருள்பெற்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். நாமும் திருக்கோடிக்காவலுக்கு சென்று அவளை வணங்குவோம். அவள் அருள்பெற்றவர்களின் பட்டியலில் இணைவோம்!திருக்கோடிக்காவல் எனும் இத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார்கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related Stories: