செழிப்பான வாழ்வருளும் சித்தாத்தூர் வாராஹி

சாளுக்கிய மன்னர்கள் காலத்திலிருந்து சப்த மாதர்கள் வழிபாடு தொடங்கி இருந்தாலும் குறிப்பாக அன்னை வாராஹி, கிராம எல்லை தேவதையாக  அப்போதிலிருந்தே திகழ்கிறாள். பன்றி முகத்துடனும் எட்டு கரங்களுடனும் வலது காலை ஊன்றி இடது காலை மடக்கி, வணங்குவோரை காத்தருள்கிறாள்  அன்னை. அந்த காலத்தில் கிராமத்தின் செல்லப் பெண்ணாகவே இந்த வாராஹி தேவி பாராட்டப் பெற்றிருக்கிறாள்.

அதனால் செல்ல அம்மனாக இருந்தது மருவி செல்லி அம்மனாகி விட்டது. காலப்போக்கில் அந்நியர் படையெடுப்பின் போது பன்றி முகம் மாற்றி மனித முகத்துடன் உடைய செல்லி அம்மனாக வணங்க  ஆரம்பித்தார்கள். எனவே வாராஹி தமிழர்களின் எல்லை தேவதை என்பதில் ஆச்சர்யமேயில்லை.

ராஜராஜ சோழனுக்குப் பேரரசன் பெயர் பெற்றுக் கொடுத்தது வாராஹியே என்பது சரித்திரம் கூறும் உண்மை. அதன் காரணமாகத்தான் தஞ்சை பெரிய  கோயிலின் தென்கிழக்கு பகுதியில் தீர்த்த கிணற்றின் அருகே வாராஹி சந்நதி இன்றும் புகழோடு இருக்கிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரை இதுவே  ஆதிவாராஹி. சப்த மாதாக்களில் ஒருவராக சிவ ஆலயங்களில் கோஷ்ட விக்ரகமாக வாராஹி திகழ்கிறாள். ஆனால், வாராஹிக்கென்று தனி ஆலயம் அமைக்க  வேண்டுமென்று வாராஹி உபாசகரான கணபதி சுப்ரமணியன் குருஜியின் மனதில் வாராஹி குறிப்பால் உணர்த்தியிருக்கிறாள்.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சில கோயில்களில் மட்டும் வாராஹி சந்நதி காணப்படுகிறது.

ராமாயண காலத்தில், ராமனால் காக்கப்பட்ட ஏரியின் மறுகரையில்  நான்கு வேதங்களும் தங்கி ராமனை வழிபட்ட காரணத்தினால் வேதம் தங்கல் என்று இன்று அழைக்கப்படும் பறவைகளின் சரணாலயமாக விளங்குகின்ற  வேடந்தாங்கலை பக்தர்களின் சரணாலயமாக மாற்ற அன்னை திருவுளம் கொண்டாள். அதன் அருகில் அரை கிலோமீட்டரில் அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த  புண்ணிய பூமியில் சந்தர் கார்டனில் ஒரு சித்தரின் சமாதிக்கு அருகே கிரிசக்ரபுரம் என்ற நகரை அமைத்து அதில் அன்னையை அவர் கொலு அமர்த்தினார்.

அன்னையின் கருவறை எண்கோண வடிவில் அமைந்துள்ளது. நான்கு திசைகளில் நான்கு வாயில்கள் உள்ளன. கோபுரம் 8 பட்டையில் மூன்று நிலை  கோபுரமாகத் திகழ்கிறது. முதல் இரண்டு நிலைகளில் 16திதி நித்யாக்களை குறிக்கும் வகையில், 16 கலசம் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. எண்கோண  வடிவில் நான்கு கோஷ்டங்களில் வடகிழக்கு நோக்கி உமையும் ஈசனும் ரிஷபத்தில் காட்சியளிக்க, அக்னி திசையை நோக்கி தர்ம சாஸ்தா அருள்பாலிக்க, நிருருதி (தென்மேற்கு) திசையை நோக்கி ஞானத்தை போதிக்கும் தண்டாயுதபாணி முருகன் வீற்றிருக்க, வடமேற்கு திசை நோக்கி தத்தாத்ரேயரின்  வடிவமாக கருதப்படும் ஷீரடி சாய்பாபா திருவருள் பாலிக்கிறார்.

கருவறையின் மத்தியில் உயரே ராஜராஜேஸ்வரி கரும்பு வில்லுடன் அமர்ந்திருக்க, அவள் காலடியில் அன்னையின் செல்லப்பிள்ளை முழுமுதற் கடவுள் கணபதி  கற்பக விநாயகராக வீற்றிருக்க, கிழக்கு நோக்கி மோன தவத்தில் யோக நரஸிம்மர் வீற்றிருக்க, தெற்கு வாயிலில் ஒன்பது படிகளுக்கு மேலே நம்முடைய செல்ல அன்னையாக வருவோர்க்கு வரங்களை அள்ளித் தர அன்னை வாராஹி அம்மன் வீற்றருள் புரிகிறாள். தெற்கு நோக்கி அமைந்திருக்கும் வாராஹியின் கீழே  ஒன்பது படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஜீவன் முக்தியடைய ஒன்பது நிலைகளை கடக்கவேண்டிய தத்துவமாகும். மேற்கு நோக்கி உலக நன்மை வேண்டி  ஆஞ்சநேயர் யோக தவக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறைக்கு நேர் எதிரே தாமரை திருக்குளம் அமைந்துள்ளது. அதன் மத்தியில் தமிழர்கள் போற்றும் குறுமுனிவர் நின்ற கோலத்தில் அன்னையை நோக்கி  தவம் புரிகிறார். திருக்குளத்தின் குபேர மூலையில் நர்மதையிலிருந்து குருஜியால் கொண்டுவரப்பட்ட லிங்கம், குபேர லிங்கம் எனும் திருப்பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மேற்குப்புறத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 நட்சத்திர லிங்கங்கள் வாராஹி மண்டபத்தின்  இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.  மண்டபத்தின் குபேர மூலையில் விநாயகர் சாட்சியாகத் திகழ, வாயு மூலையில் கிழக்கு நோக்கி ஏழுமலையானான  வேங்கடநாதன் பூர்ண அலங்காரத்தில் தரிசனமளிக்கிறார்.

வடகிழக்கு திசையில் மேற்கு நோக்கி மூன்றரை அடி உயரத்தில் கம்பீரமாக ஆதிவாராஹி அமர்ந்துள்ளாள். பூமிக்கு அதிபதியான செவ்வாய் கிரகத்தின்  அதிதேவதை வாராஹி. எனவே இந்த அன்னையை தரிசிக்க, வாராஹியின் எண் கரங்களுக்குள் ஒன்று ஏர்கலப்பையை தாங்கி நிற்பதால் விளைச்சல் பெருகும்.  வாராஹியை பூஜித்தால் பருவமழைக் காலத்தில் பெய்து நீர்நிலைகளில் நீர் வற்றாமல் இருக்கும். தன்னுடைய கரத்தில் உலக்கையை தாங்கி நிற்பதால் இவளை  வணங்குபவர்களுக்கு எதிரியின் பயம் நீங்கும்.

தண்டினி என்ற பெயரை தாங்கி நிற்பதால் தன் திருக்கோயிலுக்கு வருகிறவர்களின் எதிரிகளை அவள் தண்டிப்பாள். அன்னையின் கரத்தில் இருக்கும் சங்கை  தரிசிப்பதால் மனதிலிருந்து பயம் நீங்கும். சக்கரத்தை தரிசிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் விலகும். அமாவாசையன்று வாராஹி உன்மத்த  வாராஹியாக சிவனை நோக்கி தவமிருப்பதால் அன்று வாராஹியை தரிசிக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அக்குறை நீங்கப் பெறுவார்கள்.

பௌர்ணமியன்று மாலை வாராஹியை தரிசிப்போருக்கு மகப்பேறு கிட்டும். செவ்வாய்க்கிழமையன்று செவ்வரளி மாலை சூட்டி வாராஹியை வழிபட்டால்  பெண்களின் மாதவிலக்கு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பஞ்சமியன்று வாராஹியை வழிபட்டால் தடை நீங்கி முறையே நல்ல திருமண வாழ்க்கை ஆண், பெண்  இருபாலாருக்கும் அமையும். அன்று ஆலயத்தில் படி பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. வளர்பிறை அஷ்டமியன்று வாராஹியை வழிபடும் குழந்தைகளுக்கு  நல்ல கல்வியறிவு கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் சித்தாத்தூரிலுள்ள கிரிசக்ரபுரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். சென்னை மதுராந்தகம் ஜி.எஸ்.டி ரோடில் படாளம் கூட்  ரோடு திரும்பி திருமலைவையாவூர் வழியாக 12 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கலிருந்து அரை கி.மீ. தொலைவு சென்றால் இத் தலத்தை அடையலாம்.

தொகுப்பு: ந. பரணிகுமார்

Related Stories:

>