ஐதராபாத்: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது தெலுங்கில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் நடித்து வெற்றிபெற்று, 300 கோடி ரூபாய் வசூலித்துள்ள ‘சங்கராந்திகி வஸ்துனம்’ என்ற படத்தின் நிகழ்ச்சியில் மீனாட்சி சவுத்ரி பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு: துல்கர் சல்மானின் மனைவியாக, ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தில் அம்மா வேடத்தில் நான் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரசிகர்கள் என்னை அம்மாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்தேன். அவர்களைப் பற்றி நான் சந்தேகப்பட்டேன். ஆனால், அந்த சுமதி கேரக்டருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். பிறகு ரசிகர்கள் என்னை சுமதியாகவே ஏற்றுக்கொண்டதைப் பார்த்து அதிக மகிழ்ச்சி அடைந்தேன். அந்த வேடத்துக்கு தகுதியானவள் என்பதை இப்போது ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகையாக எனக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு எனது வாழ்வில் ஒரு மைல் கல் ஆண்டாகும். ஆரம்பத்திலேயே எனக்கு மிகவும் வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவிதத்தில் நான் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி.