நீலகண்டரின் திருப்பெயர்கள்!

காரியுண்டிக் கடவுள்

காரி என்பது விஷத்தைக் குறிப்பது. விஷத்தை உண்ட சிவனைத் தொன்மையான இலக்கியங்கள் காரியுண்டிக் கடவுள் என்றே அழைக்கின்றன.

நீலமணி மிடற்றண்ணல்

பொதுவாக மணி என்பது ரத்தினத்தைக் குறிக்கும் சொல். சிவபெருமானின் கழுத்தில் நீலமணிபோன்று பாற்கடலில் பிறந்த ஆலகாலமானது விளங்குவதால் அவருக்கு மணி மிடற்றண்ணல், மணி கண்டர், நீலகண்டர், நீலமணிமிடற்று அண்ணல் போன்ற பெயர் அமைந்துள்ளன.

கண்டர்

பிறரை வருத்தும் துன்பமயமான விஷத்தைத் தன் கழுத்தில் நிறுத்தி சிவபிரான் உலகைக் காத்தார். இதனால் அவருடைய கழுத்து சிறப்புடையதாயிற்று. எனவே, அவர் அக்கழுத்தின் பெயரால் ஸ்ரீகண்டர் என அழைக்கப்படுகின்றார்.

கருங்கண்டர்

ஆழ்ந்த நீலம் அடர்வு அதிகமாகும்போது கருமைநிறம் பெறுகிறது. ஆதலின் சிவபெருமானுக்குக் கருத்தகண்டத்தவர். கங்குலிற்கருத்தகண்டர். (கங்குல் . இருட்டு. இருள் போன்ற கருத்த கழுத்தை உடையவர் என்று பொருள்) என்ற பெயர்கள் அமைகின்றன

விஷாபரணர்

மக்கள் பொன்னாலும் வெள்ளியாலும் நவரத்தினங்களாலும் அணி செய்யப்பெற்ற ஆபரணங்களை அணிந்து மகிழ்கின்றனர். சிவபெருமானோ தமது செம்பொன் மயமான மேனியில் (கழுத்தில்) கருநீலமான விஷத்தையே ஆபரணமாகக் கொண்டுள்ளான். எனவே அவர் விஷாபரணன் என்றழைக்கப்பெறுகின்றார்.

சுக்ரீவர்

கிரீவம் எனில் கழுத்து என்று பொருள், நீலகண்டரின் கழுத்து மேலான தியாகச் சின்னத்தை உணர்த்தி நிற்றலின் (சிற்றான கழுத்தை உடையவர் எனும் பொருளில்) அவர் (சு+கிரீவன்) சுக்ரீவன் என அழைக்கப்பட்டார்.    சுக்ரீவன் எனும் குரங்கரசனால் பூஜிக்கப்பட்டதாலும் அவருக்கு சுக்ரீவ ஈச்சுவரர் என்பது பெயராயிற்று. கொங்கு மாவட்டத்தில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் எனும் ஊரில் உள்ள இறைவன் சுக்ரீவேச்சுவரர் என அழைக்கப்படுகிறார். இதுவே குரக்குத்தளி என்கிற வைப்புத்தலமாகும்.

Related Stories: