×

நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வதின் தத்துவார்த்த விளக்கம் என்ன?

நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும். நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும். தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது திருவடியை தன் தலைக்கு மேல் ஏந்திக்கொள்கிறேன் என்று கூறுவதுமாகும்.

நெற்றியுள்நின்றென் னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி,
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்,
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே.

என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வதில் பெருமையை பறைசாற்றுகிறார். திருநாமம் இடும்போது நடுவே இடும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் கூடி இருக்கிறார் என்று காட்டுகிறது. திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு மேன்மையான எண்ணங்களை உருவாக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது நிலையை மேல்நோக்கி கொண்டு செல்லும். திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது 12 இடங்களில் திருநாமம் இடவேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போது பகவான் நாமத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம்.

நெற்றி - கேசவன்
வயிற்றின் மத்தியப்பகுதி - நாராயணன்
மார்பு மத்தியப்பகுதி - மாதவன்
கழுத்து மத்தியப்பகுதி - கோவிந்தன்
வயிற்றின் வலதுபுறம் - விஷ்ணு
வலது தோள் - மதுசூதனன்
வலது கழுத்து - திருவிக்ரமன்
இடது வயிறு - வாமனன்
இடது தோள் - ஸ்ரீ தரன்
இடது கழுத்து - ரிஷிகேசன்
கீழ்முதுகு - பத்மநாபன்
கழுத்துக்கு பின்புறம் - தாமோதரன்

என சொல்ல வேண்டும். இதுபோல் ஸ்ரீ சூர்ணம் இடும்போதும் மகாலட்சுமி தாயாரின்பன்னிரெண்டு நாமங்களை கூறவேண்டும்.

நெற்றி - ஸ்ரீ
வயிற்றின் மத்தியப்பகுதி - அம்ருத்தோற்பவா
மார்பு மத்தியப்பகுதி - கமலா
கழுத்து மத்தியப்பகுதி - சந்திரசோபனா
வயிற்றின் வலதுபுறம் - விஷ்ணு பத்தினி
வலது தோள் - வைஷ்ணவி
வலது கழுத்து - வராரோஹா
இடது வயிறு - ஹரிவல்லபா
இடது தோள் - சார்ங்கிணி
இடது கழுத்து - தேவதேவிகா
கீழ்முதுகு - மகாலட்சுமி
கழுத்துக்கு பின்புறம் - லோகசுந்தரி

திருநாமம் அணிந்த பிறகு கை அலம்பக்கூடாது. திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தனது பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வதுதான் திருமாலுக்கு விருப்பமானது. அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார். தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப்பார்க்கிறார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Tirunam ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி