நேர்மறைத் தீர்வே நிம்மதி தரும்

உலகில் யாருக்குத்தான் கவலையும் துன்பமும் இல்லை? கவலை இல்லாத மனிதன் என்று உலகில் யாருமே இல்லை. மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் அவருக்கும் கவலைகள் இருக்கும். லட்ச ரூபாய் கொடுத்து மெத்தையை வாங்கிவிடலாம். ஆனால் தூக்கத்தை எங்கிருந்து வாங்குவது? வாழ்வில் கவலைகளும் துன்பங்களும் நம்மை எதிர்கொள்ளும்போது அவற்றுக்கான தீர்வைத்தான் தேட வேண்டுமே தவிர வாழ்வையே தீர்த்துக்கொள்வது அறிவுடைமை அல்ல.

புத்த பெருமான் ஒருமுறை கூறினார். “பிரச்னை அல்லது கவலை என்பது ஒரு சிறிய கல் மாதிரி. அதை உன் கண்களுக்கு அருகே வைத்துக்கொண்டு பார்த்தால் அந்தக் கல்தான் பெரிதாகத் தெரியும். சற்று தொலைவில் வைத்துப் பார்த்தால் அந்தக் கல் சிறிதாகிவிடும்.”நாம் சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட பூதாகரமாகக் கற்பனை செய்துகொண்டு கவலைப்படுகிறோம்.

எனக்குத் தெரிந்த மாணவர் ஒருவர் ஒரு நாள் கல்லூரிக்குப் போகாமல் கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏன் என்று கேட்டதற்கு ‘‘இன்று ஆங்கிலத் தேர்வு இருக்கிறது. நான் சரியாகப் படிக்கவில்லை. போதிய மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர் திட்டுவார். ஆகவே தேர்வு எழுதப் போகவில்லை” என்றார். இது தேவையில்லாத கவலை. மறுநாள் அதே மாணவன் என்னிடம்,“நான் நேற்று தவறுசெய்துவிட்டேன். தேர்வு மிக எளிமையாக இருந்ததாம். சக மாணவர்களிடம் வினாத்தாள் வாங்கிப் பார்த்தேன். பெரும்பாலும் எனக்குத் தெரிந்த விடைகள்தாம்” என்றார். தான் படிக்காத பாடத்திலிருந்துதான் கேள்விகள் வரும் என்று அவரே கற்பனை செய்து, அந்தக் கற்பனையைப் பூதாகரமாக்கிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நம்மால் ஆன முயற்சிகளைக் குறைவின்றிச் செய்துவிட வேண்டும்.

பிறகு பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும். பசி, வியாபாரத்தில் இழப்பு என்று சில சமயம் இறைவன் சோதிக்கத்தான் செய்வான். இறுதி வேதம் குர்ஆன் கூறுகிறது: “சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.”(குர்ஆன் 2:155) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்: “இறை நம்பிக்கையாளர்களின் நிலை எத்தனை வியப்புக்குரியது...! தங்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் இறைவனைப் புகழ்கிறார்கள். இது அவர்களுக்கு நன்மையையே தருகிறது. தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அப்போதும் இறைவனையே சார்ந்திருந்து பொறுமையை மேற்கொள்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு நன்மையையே தருகிறது.”

துன்ப, துயரங்கள் ஏற்படும்போது எத்தகைய வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் இறுதி வேதம் கற்றுத்தருகிறது. “அவர்கள் எத்தகையோர் என்றால் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்போது நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம் என்று சொல்வார்கள்.”(குர்ஆன் 2:156) இப்படிச் சொல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா? அதையும் வேதம் கூறுகிறது.

“அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும். அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்.” (குர்ஆன் 2:157)

ஆகவே கவலைகள், துயரங்கள் ஏற்படும்போது “ஐயோ....இத்தனை துன்பங்களா” என்று அழுது புலம்பாமல் இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும். அவனிடமே நம் துன்பங்களை முறையிட்டு உதவி தேட வேண்டும். தொழுகைகளிலும் இறைதியானங்களிலும் அதிகம் ஈடுபட வேண்டும். அவனுடைய உதவியை எதிர்பார்த்து அவனையே சார்ந்திருக்க வேண்டும். இதுதான் சரியான வழிமுறையே தவிர, கவலைகள் தீர மதுவில் மூழ்குவதோ தற்கொலை செய்துகொள்வதோ ஒருபோதும் தீர்வாகாது.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Related Stories: