×

துளியும் ஐயமற்ற இறைப்பற்று!

ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவள் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வந்தாள். அந்த மாடுகளிடமிருந்து கறக்கும் பாலை தான் வசிக்கும் பகுதிகளிலும், அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் நடந்து சென்று விற்று வருவாள். தினமும் நடந்து சென்று பால் விற்பதை, அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்துவந்தாள். அவள் பெயர் லட்சுமி, அந்த ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சந்நியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினமும் பால் கொடுத்து வந்தாள். ஒரு நாள் வழக்கம் போல, சந்நியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் லட்சுமி தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், லட்சுமியிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்துகொண்டார்.

அப்போது “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமாத்தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”“என்னது ஆற்றை கடந்து இக்கரைக்கு வருவதற்கு படகுக்காக காத்திருக்கிறியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிக்கிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆற்றை கடந்து வருவதை ஒரு பெரிய விஷயமா சொல்லிக்கிட்டிருக்கியே…. என்னடா லட்சுமி இப்படி சொல்றா’’ என தனது சீடர்களிடம் நகைப்புடன் கூறினார். அவ்வாறு கூறிவிட்டு லட்சுமியைப் பார்த்து ‘‘சரிம்மா..... இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று சினம் கொண்டு கூறுவது போல கறாராக கூறிவிட்டு ஆஸ்ரமத்துக்குள் சென்றுவிடுகிறார்.

சென்றதும், அந்தப் பால்கார லட்சுமி ஒரு பெண்ணாயிருந்தும் நல்ல சாமர்த்தியசாலி என பெருமைப்பட கூறுகிறார். அப்போது. சீடர் ஒருவர் ‘‘சுவாமி, அப்போ... ‘‘நீங்கள் சினம் கொள்ளவில்லையா...’’ என்று கேட்க,‘‘பால் தாமதமாகிறது என்பது உண்மைதான். அதற்காக கடிந்து கொள்ளலாம். அதைப் பெரிதுபடுத்தி அவள் பிழைப்பை நாம் கெடுக்கலாமா...’’ என்று பால்காரப்பெண் லட்சுமி மீது அனுதாபம் கொண்டார். ஆனால், பால் விற்கும் லட்சுமியோ, தினமும் இரண்டு பக்கா வாங்குற சாமி, இனி நாம தாமதமா வந்தா நம்மகிட்ட பால் வாங்குறத நிறுத்திடுவாரேன்னு கவலைப்பட்டுக்கொண்டே சென்றாள். அன்றிரவு அவள் தூங்கும்போது நாமும் ‘‘கிருஷ்ணா, கிருஷ்ணான்னு சொன்னா ஆத்தைக் கடந்திடலாமோ’’ என்று அவள் மனதில் தோன்றியது.

காலையில் வழக்கம்போல் பாலுடன் புறப்பட்ட லட்சுமி, எப்போதும் போல் வீட்டிலிருக்கும் பழைய சாதத்தை சாப்பிட முற்பட்டாள். பின்னர் சுத்தபத்தமா போனாதான் கிருஷ்ணரு பெயரச் சொல்லி ஆத்தை கடக்கமுடியும் என்று எண்ணி, நீராடிவிட்டு வந்து எதுவும் சாப்பிடாம செல்லுவோம். வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என மனதிற்கு உறுதி எடுத்துக் கொண்டு பாலுடன் செல்கிறாள். ஆற்றின் கரையில் நின்றுகொண்டு ‘‘கிருஷ்ணா, கிருஷ்ணா’’ என்று கூறியபடி ஆற்றில் இறங்க ஆற்று தண்ணீர் ஒருபுறம் குறைந்து மறுபுறம் பெருகியது. லட்சுமியின் பாதம் வரை மட்டுமே வெள்ளம் வர ஆற்றைக் கடந்தாள் லட்சுமி.
ஆஸ்ரமத்திற்கு சென்று பாலை ஊற்றினாள். அங்கிருந்த சீடர் ஒருவர் கேட்டார். ‘‘இன்னைக்கு எப்படிம்மா இவ்வளவு சீக்கிரமா வரமுடிஞ்சுது'' அதுன்னு தொடங்கும்போது சந்நியாசி வந்தார்.

“இப்போ மட்டும் எப்படி வரமுடிஞ்சுது? சீக்கிரமா வரணுமுங்கிற எண்ணம் இருக்கணும். அதுபோல தொழில்மீது பயம் இருக்கணும். குறித்த நேரத்துக்கு முன்னாடியே புறப்படணும்'' என்று முடிக்கும் முன்னே... ‘‘சாமி, நான் வழக்கமான நேரத்துக்குத்தான் புறப்பட்டேன்.”அப்போ.. எப்படி வரமுடிஞ்சது'' என்றார்.
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் சாமி…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிட்டேன். படகுக்காக இன்னைக்கு காத்திருக்கல” என்றாள் லட்சுமி. “என்னது நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை'' தாண்டி டுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறிய
சந்நியாசி....

‘‘வா... நீ ஆத்தைத் தாண்டுறது நான் பார்க்கணும்'' என்று கூறியபடி லட்சுமியை பின் தொடர்ந்து சென்றார் சந்நியாசி. அவருடன் ஐந்து சீடர்களும் சென்றனர்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே ஆற்றை கடந்து போ பார்க்கலாம்” என்கிறார். பால்காரப் பெண் லட்சுமி, ஒரு கையால் சேலையை தூக்கி இடுப்பில் சொருகியவாறு, மற்றொரு கையில் பால் கேனையும் பிடித்தப்படி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டே தண்ணீரில் நடக்க ஆரம்பித்து
விடுகிறாள். ஆற்று வெள்ளம் முன்பு போல் முன்னே குறைந்து பின்னே பெருகியது. நடந்ததை பார்த்த சந்நியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி! மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம் என்று தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று பலவாறாக யோசித்தபடியே, ஒரு சில விநாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சந்நியாசி திடுக்கிடுகிறார்.

“லட்சுமி அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “சாமி…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க வேட்டி நனையக் கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பார்த்தும், கிருஷ்ணன் கைகொடுப்பாரா என்கிற ஐயமும், ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடுமோ என்கிற அச்சமும், அந்த கிருஷ்ணனையே சோதிக்கிறது போலல்லா இருக்கு!” என்றாள். சந்நியாசி பகவானை எண்ணி வியக்கிறார். நாளெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருக்கும் நமக்கு உதவாமல், ஒரு நாழிகையில் மட்டும் அவனை நினைத்து நாமம் கூறிய பெண்ணுக்கு உதவுகிறானே. அவனது விளையாட்டா இது. இல்லையேல் எனக்கு புத்தி புகட்டுகிறானா பரந்தாமன் என்று மெய்யுருகினார். இறைவன் நம்பிக்கைகொண்டு அதில் ஒருபோதும் ஐயம் கொள்ளாமல் உறுதியோடு இருந்தால் நிச்சயம் கூப்பிட்ட குரலுக்கு பரந்தாமன் ஓடோடி வருவான். எந்தக் கோணத்திலாவது வந்து உதவுவான்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி