×

ஆதிமூலமே

‘‘வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து தெளியேனே ’’
போருக்குத் தயாராக வேல் போன்ற கண்களையுடைய பொது மாதர்களின் மாயம் என்னைப் பிடிக்காமல் விலகி நான் தெளிவான அறிவு பெற்றேனில்லையே
‘‘மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து பணியேனே’’

சிறந்த புஷ்பங்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளைக் கட்டி அவற்றை உனது சிறந்த திருவடிகளில் சமர்ப்பணம் செய்து தொழுதேனில்லையே!
‘‘ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே’’
ஆரம்பம் முதல் முடிவு வரை திகழும் நன்மைகள் எல்லாம் உனது ஆறுமுகங்களில் அடக்கம் எனும் உண்மையை உணராமல் இருக்கிறேனே! (மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களே முருகனின் ஆறு முகங்கள் என்றும் கூறுவர்)
‘‘ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
தாடுமயி லென்ப தறியேனே’’

மயில் மிகுந்த அறிந்திலேனே! (சக்தி பேதங்களில் ஒன்றான குடிலை சக்தி மயிலாக ஆடுகிறது; அதன் நடுவில் முருகன் தரிசனம் தருவதை ‘‘ஓங்காரத்து உள் ஒளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு. . . .’’ என்று பாடுகிறார் அருணகிரியார்.
‘‘நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து திரிவேனே ’’
ஒரு பெண்ணின் சுரோணிதமும் ஆணின் சுக்கிலமும் கலந்ததால் விளைந்த இந்த உடலைச் சுமந்து கொண்டு பூமியில் உழல்கின்றேனே!
‘‘நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே ’’

சூலமென ஓடு சர்ப்பவாயு ஓடி அடைகின்ற ஆறாவது ஆதாரமான ஆக்ஞா ஸ்தானத்தில் ஒளி வீசுகின்ற ஞானசதாசிவ நிலையைத் தரிசித்து அங்கேயே நின்று கொண்டு அடுத்தபடியாக சஹஸ்ராரத்திற்குப் போவதற்கு உனது திருவருளை இறைஞ்சவில்லையே! (ந+ அஹம் என்பது தமிழில் நாகம் என்று எழுதப்படுகிறது. ‘நானல்ல, நானல்ல’ என்று கூறி அகங்காரத்தை முருகன் திருவடிகளில் சமர்ப்பித்து ஜீவபோதத்தைச் சிவ போதமாக மாற்றுவார்கள் அடியார்கள்)

‘‘சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற...’’ மேற் கூறியபடி ஜீவ போதம் இழந்த சிவபோதம் எய்தியவுடன் அருட்ஜோதி தரிசனம் உண்டாகும். மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும்.

‘‘சோகமது தந்து எனையாள்வாய்’’
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றெனப் பாவிக்கும் நிலையைத் தந்தருள்வாயாக ! (ஸ + அஹம் = சோஹம் என்பது ‘சோகம் ’ எனத் தமிழிலில் எழுதப்படுகிறது. ‘சிவோகம்’ என்பது சுருங்கி சோஹம் என்றாகிறது. எனவும் கூறலாம்) (சிவோகம் = நான் சிவனோடு ஒன்றி விட்டேன்)
ந+அஹம் பாவனையைக் கடைப்
பிடித்து ஆறாவது ஆதார வீடாகிய ஆக்ஞா ஸ்தலமெனும் சோலைமலையில் ஸ+அஹம் பாவனையைத் தந்தருள்வாயாக.
‘‘சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே ’’

சூரபத்மாதியரை அழித்து வெற்றிமாலை சூடி பழமுதிர் சோலை எனும் திருமலை மீது எழுந்தருளிய பெருமாளே!
அருணகிரிநாதரை ‘ஓசை முநிவர்’ என்று கூறுவதுண்டு. இதற்கு ஆதாரமாக விளங்கும் ஒரு சோலைமலைப் பாடலைப் பதம் பிரித்துப் பொருளுணர்வோம்.

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே

(வியாசர் பாரதக் கதையைச் சொல்ல சொல்ல ஸ்லோகங்களின் பொருளுணர்ந்து அதிவேகமாக மேரு மலை மீது விநாயகர் தன் தந்தத்தால் எழுதிய வரலாறு இங்கே குறிப்பிடப்படுகிறது)பரத வம்சத்தினரின் சரித்திரத்தைக் கூறும் பாரதம் எனும் பெருங்காவியத்தை விளங்கும்படி தனது தந்தத்தையே ஒடித்து அந்நாளில் மேரு மலையின் சாரலில் எழுதியவரும், உதிக்கும் சூரியனை ஒத்த பவள நிறமானவரும், சிறுமையான பெருச்சாளியை (கு) வாகனமாகக் கொண்டவரும் ஆகிய விநாயகருக்கு இளையவனே! (மேரு மலையை ஏடாகவும் தன் தந்தமே எழுத்தாணியாகவும் கொண்டு விநாயகர் பாரதம் எழுதினார் என்று வில்லிபாரதம் குறிப்பிடுகிறது)

பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
(மாது = அழகு)

பாடல்கள் மிகவும் சிறந்தும் அழகுடனும் விளங்குகின்ற தமிழ் மொழியின் நுணுக்கங்களை தமிழ்க்கடவுளாய் விளங்கி அகத்தியருடைய செவியில் ஞான உணர்ச்சியை தெளிவாய் உணர்த்தி விட்ட குமரேசனே! இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய குருவே! ஆசார்ய
மூர்த்தியாக விளங்குபவனே!
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
போயறுத்த போது குபீர் குபீ ரென ......     வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வானைதொள்
பூணியிச்சை யாறு புயா புயா றுள ......     பெருமாளே.

போர் புரிவதில் வல்லவனான சூரபத்மன் ‘உன்னை விட்டேனா பார்’ என்று நேராக வந்து எதிர்க்க, வேலாயுதம் படீர் படீர் எனும் ஒலியுடன் சென்று அவுணர்களைத் துண்டாக்கிய பொழுது நிரம்ப ரத்தம் குபீர் குபீரெனப் பெருகி, பூமியில் சிந்த அந்த வேலைச் செலுத்திய குகனே
குகைகள் கொண்ட சோலைமலைத் தெய்வமே! தெய்வயானை தோளை அணைத்து தன் காதலைத் தணித்துக் கொண்ட
பன்னிரு புயங்களை உடையவனே!

‘வாடை பற்றுவேனை அடா அடா என
நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என
வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே ’’
என்பது பாடலில் வரும் வேண்டுதல்,

காமப்பித்து என்னைப் பற்றுகின்ற வேளையில் என்னை ‘அடா அடா’ என்றழைத்து ‘‘என் அடியவனான உனக்கு ஏன் இந்த மயக்கம் வந்தது சொல் சொல்’ என்று எனை ஆட்கொண்டருளி
‘‘அன்பு கூடிய என் திருவடி இதோ இதோ ’’
என்று கூறி அவற்றை நல்கி அருள்புரிவாயக.

கதிர்காமத்தை வைப்புத் தலமாகக் கொண்டு ‘அகரமுமாகி’ எனத் துவங்கும் பாடலை அருணகிரியார் சோலைமலையில் பாடுகிறார்.
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

அனைத்து எழுத்துக்களுக்கும் முதலாவதாய் நிற்கும் ‘அக்ரம் போல அனைத்திற்கும் முதற்பொருளாகி, எவற்றிற்கும் தலைவனாகி நிற்பவன் குமரன் ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை, சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’’ என்று கூறுவது போல் அனைத்திற்கும் மேம்பட்டவனாகவும், முத்தி வீட்டிற்குத் தலைவனாகவும், முத்தி வீடாக விளங்குபவனும் குமரனே

அயன், அரி, ருத்ரன் இம்மூவரது தொழிலையும் இயற்றுபவன் முருகனே தான். (‘‘படைத்தளித்தழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே’’  திருத்தணித் திருப்புகழ்)தன்னைப் போற்றுபவர்க்கு அதிசமீபத்தில் இருப்பவனும், எப்பொருளுமாகவும், இனியவனாகவும் விளங்குபவனும் முருகனே! ‘‘சிவ சக்திகளுமாகி அச்சக்திகளின் கூட்டத்தால் எப்பொருட்களும் தோன்ற அவற்றில் இரண்டறக் கலந்து இன்ப முழுமையும் தானே ஆகின்ற தலைவனே ’’
 என்றும் பொருள் கூறலாம்.

இப்பெரிய பூமியில் நானும், என் போன்ற அடியவர்களும் வாழ்வாங்கு வாழ, இரக்கம் கொண்டு என் முன் ஓடி வரவேண்டும்!
பாடலின் பிற்பகுதி :-

மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செகசுண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே!

மகபதி  நூறு அச்வமேத யாகங்களை நடத்துபவன், மறுமையில் விண்ணுலகத் தலைவனான ‘இந்திரன்’ எனும் பதவியைப் பெறுவான். (மகம் = யாகம்) அவனை மகபதி என்பர்.வலாரி  வலன் எனும் அசுரனை அழித்த இந்திரன், வலாரி எனும் பெயர் பெற்றான். (அவனது வீடாகிய விண்ணுலகை அழித்த சூரபத்மன், ‘வலாரி தலாரி’ என்று கந்தர் அநுபூதியில் குறிக்கப்பட்டுள்ளான்)‘‘வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே’’ எனும் வரிகளில் ஒரு புராணக் குறிப்பை வைத்துள்ளார். முருகப் பெருமான் தன் வேலாயுதத்தின் மகிமையைக் கூறிய போது, இந்த வேலுக்குப் பெருமை என்னுள் வந்தது என்றான் பிரம்மன். கோபமுற்ற முருகன் பிரம்மனைச் சபிக்க அவன் அந்திமான் எனும்
வேடனாகப் பிறந்தான். பசி மிகுதியில் களைத்துப் போன போது எதிரில் வந்த பிப்பிலாத முனிவரை வழிமறித்தான். முனிவரோ முருகனின் பெருமையை எடுத்துரைக்கும் கானங்களைப் பாடினார்.

வேடனுக்குத் தன் முற்பிறப்பின் நினைவு திரும்பவே, முனிவரின் அறிவுரைப்படி கதிர்காம முருகனை வணங்கிக் கிருத்திகை விரதமிருந்து இடை வள்ளல்களுள் ஒருவன் ஆனான். மேலும் தவமிருந்து பிரம்ம பதவி பெற்றான்.

‘இலவிதழ்’ எனத்துவங்கும் சோலை
மலைப் பாடலில், சூரனைச் சம்ஹரிக்க முருகனுக்கு வேல்
 கொடுத்த அம்பிகையின் பல விதப் பெருமைகளைப் பேசுகிறார்.
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
குலிசகு டாரி யாயி ...... மகமாயி
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
குணவதி யால வூணி ...... யபிராமி
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக
பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே
பொருள் :
கொலை புரி காளி  மகஷாசுரனைச் சங்கரித்த காளியும்.

சூலி - முத்தலைச் சூலத்தை உடையவளும்.
வயிரவி  பைரவி எனும் திருநாமத்தை உடையாளும்
நீலி - நீல நிறத்தவளும்.
மோடி - வனத்தில் வாழும் துர்கையும்
குலிச குடாரி  வஜ்ராயுதத்தையும் கோடாரியையும் உடையவளும்.
ஆயிமகமாயி - அண்டசராசரங்களுக்குத் தாயாய் இருப்பவளும்.
குமரி - இளமையானவளும்.

வாராகி - வாராகியும்
மோகிபகவதி - மோகியும், ஐஸ்வர்யம் முதலான ஆறு குணங்களை உடையவளும்.
ஆதிசோதி - எல்லாவற்றிற்கும் முதன்மையானவளும், ஜோதிட ஒளியாக
விளங்குபவளும்.
குணவதி - சிறந்தகுணங்களைப்
பெற்றிருப்பவளும்.
ஆல ஊணி  நஞ்சை உண்டவளும் (இறைவி இறைவனின் பங்கில் இருப்பவளாதலாலும், இறைவற்கு சக்தியாய் விளங்குபவளாதலாலும், இறைவனுக்குரிய குணம், குறி, நாமங்களை இறைவிக்கும் கூறுவது மரபு)
அபிராமி - பேரழகியும்.

பலிகொள்கபாலிட - பிச்சைவாங்கும் பிரம்ம கபாலம் ஏந்தியவளும்.
யோகி பரம கல்யாணி - யோக நிலையில் நிற்பவளும், உயர்ந்த கல்யாண குணங்களை உடையவளும்.
லோகபதிவ்ரதை - உலகிலேயே பதிவ்ரதை எனும் திருநாமத்திற்குத் தனியுரிமை பெற்றவளும்
வேதஞானிபுதல்வோனே - வேதத்தை அறிந்தவளும் ஆகிய பார்வதிக்குப்
புதல்வோனே !

(ஒரு பாடலில் ‘‘முழுகும் அருமறை முகத்துப்பாட்டி கொழுநர் குடுமியை அறுத்துப் போட்ட முதல்வனே’’ என்று கூறுவதை இங்கு நினைவு கூறலாம். அரிய வேதங்களில் வல்லவளும் ஆழ்ந்து ஓதும் அரிய மறையின் வடிவினளும் ஆன வேதக்கிழவி யாகி கலை மகளை ‘பாட்டி’ என்று அழைத்துள்ளார்!)
கந்தர் அந்தாதிச் செய்யுளொன்றில் ‘‘சமுத்திரத்தில் சூரனை வென்ற வேலாயுதப் பெருமான் நீங்காமல் உறைகின்றதும், தினைக் காடுகளையும் யானைகளின் கூட்டங்களையும் மூங்கில் மரங்களையும் தன்னுடன் பொருந்தி இருக்கின்றதுமான குளிர்ந்த மேகங்கள் தவழும் பழமுதிர் சோலையை இடைவிடாது தியானிப்பவர்கள், தேவர்களனைவரும் அழிந்து போகும். யுகமுடிவிலும் கூட அழஇவற்று விளங்குவார்கள்’’ என்று கூறுகிறார் அருணகிரி நாதர்.மதுரை நகரை அடுத்து அமைந்துள்ள திருப்புகழ்த் தலங்களைத் தரிசித்து அங்கிருந்து கிளம்புகிறோம்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி