×

ஆவணியாபுரத்து அழகன்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-30

ஆவணி நாராயணபுரம், ஆரணி

பக்தன் பிரகலாதனின் அபயக்குரலுக்கு நொடிப்பொழுதில் அவதரித்து இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார் நரசிம்மர். இரண்யகசிபுவை வதம் செய்தபின்னும் உக்கிரம் தணியாத நரசிம்மரை கண்டு அஞ்சிய பிரகலாதன், நரசிம்மரை நோக்கி பாடல் பாடி, லட்சுமி தேவியுடன் சாந்த சொரூபத்தில் காட்சியருள வேண்டி  தரிசனம் பெற்றார். பிரகலாதனுக்கு கிட்டிய லட்சுமி நரசிம்மர் தரிசனத்தை தங்களுக்கும் கிட்டவேண்டுமென  திருமாலிடம் தேவாதிதேவர்கள்  வேண்டி நின்றனர்.  திருமால், ஆவணி நாராயணபுரம் என்னும் சிம்மாசல மலையில் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்யும்படியும், பிருகு மகரிஷியோடு  சேர்த்து தேவாதி தேவர்களுக்கும் தரிசனம் தருவதாகக் கூறியருளினார்.

பிருகு  மகரிஷியோடு தேவாதிதேவர்களின் தவத்துக்கு மனமிரங்கி, சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’என வேண்டி நின்றார். அதன்பின்னர், அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி அளித்ததன் மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது. மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கிணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’. இது சேயாற்றோடு கலக்குது. இத்திருக்கோயில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆரணியில் இருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கிறது இக்கோயில். இம்மலை  வடக்கு தெற்காக சிங்கம் ஒன்று படுத்திருப்பது மாதிரி காட்சியளிக்கும்.  கிழக்கு நோக்கி இருக்கும் இந்த ஆலயம் சுமார் 110 படிகளை கொண்டது சுத்தமான சிறிய கருவறை.  அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர். கருவறையின் எதிரினில் இரண்டு கருடாழ்வார்கள் உள்ளனர். இருவரில் ஒருவர் சிம்ம முகத்துடன் இருக்கின்றார். இடப்புறம் லட்சுமி தேவியும் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறாள்.   அழகான பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்வாங்க. ஆனா, அந்த மகாலட்சுமியே இங்க சிங்க முகம் கொண்டு இருக்கிறாள்.

பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மகாலட்சுமி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்றாங்க. அதன்படி அறுபது வருடங்களுக்கு ஒரு முறை சர்வதாரி வருடத்தைய  ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

தெற்கு நோக்கிய பஞ்ச நரசிம்மர்..

இக்கோயிலில் மொத்தம் 9 நரசிம்மரை தரிசிக்கலாம், மூலவரான லட்சுமி நரசிம்மர், உற்சவர், மற்றொரு சிறிய உற்சவர், பஞ்ச நரசிம்மர், மலைமீதிருக்கும் யோக நரசிம்மர் என மொத்தம் 9 நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். இது தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படுகின்றனர்.  இங்கு வழிபடுவதன்மூலம் இரண்யவதம் நடந்த அகோபில மடத்தை வழிப்பட்டதன் பலன் கிடைக்கும்.

திருப்பதி அமைப்புப்படியே மலைமேல்  சீனிவாசப்பெருமாள் இருக்க, கீழ்ப்புற கோயிலில்  அமர்ந்த கோலத்தில் அலர்மேலுமங்கைத் தாயார் வீற்றிருக்கிறார்.பிருகு முனிவரின் தவக்கோலமே இந்த பாறைவடிவம் என்று  கூறுகிறார்கள். சீனிவாசப்பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு பிராகாரத்தை வலம் வருகையில் பாறையைக் குடைந்து குடவறை கோயில் இருக்கு. அதுக்குள் போனால், ஸ்ரீரங்கத்து ரங்கனையும், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளையும்,  சோளிங்கபுரத்து யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.

எல்லா கோயில்களிலும் தல தீர்த்தம் கோயில் அருகிலேயே இருக்கும். ஆனால் இத்தலத்து புண்ணிய தீர்த்தமான பாகூ நதி, இக்கோயிலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கிறது.  வயல்வெளிகள் சூழ்ந்த இடமென்பதால் இயற்கை பேரழகு கொட்டிக்கிடக்கும். வைகானச ஆகம விதிப்படி அமைந்த வடகலை கோயில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றத்தோடு  தொடங்கி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.  

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  இந்த ஆலயம் இருக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  இக்கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில்  காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பரணிகுமார்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?