×

நின் சேவடி சென்னி வைக்க

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-60

தீட்சையானது சமயதீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் என நான்காகும்.
இதை ‘‘சென்னியது உன் பொற் திருவடி தாமரை’’ - 6
‘‘அந்தரி பாதம் என் சென்னியதே’’ - 5
‘‘தலைமேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை’’ - 32

‘‘நின் சேவடி சென்னி வைக்க’’ - 89
- என்ற இப்பாடலின் வரிகள் நான்கு விதமான தீட்சையை குறிப்பதாகும். மீண்டும், மீண்டும் ஒரே கருத்தைச் சொல்ல வந்த வரிகள் அல்ல.

மேலும் தீட்சையானது செய்து வைக்கும் முறை சார்ந்து எட்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1    நயன தீட்சை    -    ஆச்சார்யன் தன் கண்களால் உற்று நோக்கி தீட்சை செய்வது.    
2    வாசித தீட்சை    -    சாஸ்திரங்களை பொருளுடன் கற்பிப்பதால் கொடுக்கப் படுவது.    
3    மிஸ்ர தீட்சை    -    வேள்வி தீ வளர்த்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்த நீரால் (கோமுகத்தில் வரும் நீர்)   நீராட்டி ஞானம் வழங்குவது.    
4    ஹௌத்ரி தீட்சை    -    வேள்வி தீ வளர்த்து நீராட்டி தீட்சை செய்வது.    
5    ஸ்பரிஷ தீட்சை    -    தலைமேல் கை வைத்து தழுவி தீட்சை செய்வது.    
6    ஞான தீட்சை    -    மனதினால் யாகம் வளர்த்து பூசை செய்து சீடனுக்கு முத்திரை காட்டுவதால் ஞானம் வழங்குதல்.    
7    சொப்பன தீட்சை    -    இறைவியே கனவில் வந்து தீட்சைக்குறிய மந்திரத்தை கூறுவது.    
8    பாத தீட்சை    -    தலைமேல் வலிய வைத்து தீட்சை செய்வது.    
இவை ஒன்றைவிட ஒன்று மேலானதும் ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதுமாகும்.

அந்த வகையிலே எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் உள்ள பாத தீட்சையை அபிராமி பட்டர் வேண்டுகிறார்.இறைவியே சிவபெருமானுடன் இணைந்து இத்தீட்சையை அருள்வதனால் சீடனுக்கு ஞானமும், உலகியல் வாழ்வில் போகமும், வாழ்வின் முடிவில் மோட்ஷமும், அளிப்பது அதனால்தான் அபிராமி பட்டர் முதலில் உமையம்மையைப் பற்றி நன்கு அறிய உதவும் ஞானத்தையும் அதன் வழி பெற்ற தருமத்தை பின்பற்றி பெற்ற செல்வத்தையும், செல்வத்தின் வழி அறச்செயல்களைச் செய்து தனது பாவத்தை நீக்கிக்கொண்டு தேவதையின் அருளினால் நல் நுகர்ச்சியைப் பெற்று அதன் முடிவில் வாழ்வில் உள்ள பற்று இயல்பாகவே விலகி தூக்கத்தில் கையில் பிடித்திருந்த பொருள் தானாக விடுபடுவதைப்போல, உலகப் பற்றுகளில் இருந்து நீங்கியவனாகி, அந்த நீக்கத்தினால் அறத்திற்கும், செல்வத்திற்கும், நல் நுகர்ச்சிக்கும் காரணமான இறைவியின் மீது இயல்பாகத் தோன்றும் அன்பு, அந்த அன்பே இறையினிடத்திலிருந்து நம்மை நழுவ விடாது காக்கும். மேலும் அருளும், அப்போது பெரும் அருளே நமக்கு ஆன்ம அனுபவ ஞானத்தையும், சிவஞானத்தையும் அறியும், உணரும், அனுபவிக்கும் பண்பையே பெற்றுத்தரும் பாத தீட்சையை பட்டர் வேண்டுகின்றார்.

‘‘நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே’’
- என்று கூறுகிறார்.
இனி பட்டர் எண்ணிய திருவடி தீட்சையை இறைவி அவருக்கு அளித்த அனுபவத்தை காண்போம்.
அபிராமி பட்டர் என்றும்போல் அதிகாலையில் எழுந்தார். இன்று என்ன செய்ய வேண்டும் என்று தன் கடமைகளை மனதிற்குள் அசை போட்டவாரே ஸ்நானம் செய்ய குளக்கரையை நோக்கி நடந்தார்.

குளித்து முடித்து அன்றைய பூசைக்குரிய மலர்களை பறிக்க ஆயத்தமானார். அப்போது தாத்தா, தாத்தா என ஒரு சிறிய பெண்ணின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார். அதிகாலை ஆதலால் சரியான வெளிச்சம் போதவில்லை. குழந்தையை உற்று நோக்குகின்றார். ‘‘யாருடி குழந்த, இந்த விடியகாத்தால நேரத்துல உனக்கு இங்கென்ன வேல’’ என்றார் பட்டர்.

‘‘பூ பறிக்க வந்தேன் தாத்தா. நா உங்காத்துக்கு பக்கத்துலதான் இருக்கேன். எம் பேறு அபிராமி’’ என்றாள்.
‘‘விடிஞ்சப்புறம் பூ பறிக்கலாம் வீட்டுக்கு போடீ குழந்த’’ என்றார் பட்டர்.அந்த குழந்தை அவர் கூறிய எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
‘‘அதோ தெரியுதே அந்தப் பூவை பறிக்க என்னை தூக்குங்க தாத்தா’’ என்றாள், அழகான மழலையில்.

‘‘ஏண்டி கைக்கு எட்ற தூரத்துல உள்ள பூவை பறிச்சுக்க  வேண்டியதுதானே’’ என்று முனுமுனுத்துக்கொண்டே குழந்தையை தன் தோள் மீது தூக்கினார்.குழந்தைக்கு பூவை பறிக்க அந்த உயரம் போதவில்லை. பட்டரின் தலை மீது கால் வைத்து ஏறினாள்.
‘‘தாத்தா என்ன விட்டுடாத இறுக்கி பிடிச்சிக்கே’’என்றாள், அக்குழந்தை.

பட்டரும் அக்குழந்தை கீழே விழுந்துவிடப் போகின்றாள் என எண்ணி இறுகப் பிடித்துக் கொண்டார்.அந்தக் குழந்தையின் கால் பட்டரின் தலை மீது பட்ட அந்த வினாடி அவருக்குள் ஓர் ஆனந்த அனுபவம் ஏற்பட்டது.இதுவரை தான் கண்டிராத ஓர் அமைதி, தெளிவு, மகிழ்ச்சி, நிம்மதி என்று விவரித்துச் சொல்ல முடியாத ஓர் ஆனந்தத்தை அடைந்தார்.

தன் தலைமேல் கால் வைத்து தீட்சை செய்தது அபிராமிதான் என உணர்ந்தார். இந்த நிகழ்வினால் இறைவி தனக்கு தீட்சை செய்தாள் என்கிறார், பட்டர்.அந்த தீட்சை வழிமுறையையே நமக்கு இந்த பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.வாருங்கள் நாமும் அதைப் பெற முயற்சிப்போம்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags : Chenny ,
× RELATED எந்த கோயில்? என்ன பிரசாதம்?