×

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

254. ஸித்தஸங்கல்பாய நமஹ: (Siddhasankalpaaya namaha)

ஆதி சங்கரர் சிருங்கேரியில் முகாமிட்டிருந்த போது, கிரி என்ற இளைஞன் அவருக்குச் சீடராக வந்து இணைந்தான். குரு பக்தியில் தலைசிறந்தவனாகத் திகழ்ந்த கிரியின் மேல் சங்கரருக்குப் பிரீதி உண்டானது. அவனைத் தன்னோடு காசிக்கு அழைத்துச் சென்றார் சங்கரர்.காசியில் தினமும் சங்கரர் தமது சீடர்களுக்கு வேதாந்த பாடங்கள் நடத்தி வந்தார். அந்த வகுப்புகளில் எல்லாம் தவறாமல் பங்கு கொண்ட போதும், கிரிக்கு வேதாந்த ஞானம் துளி கூட வரவில்லை. இந்நிலையில் ஒருநாள் சங்கரரின் பூஜைக்காகப் பூப்பறிக்கச் சென்றிருந்தான் கிரி. மற்ற சீடர்கள் எல்லோரும் வேதாந்த பாடத்துக்குத் தயாராக வந்து அமர்ந்து கொண்டார்கள். கிரி மட்டும் வரவில்லை.

அப்போது ஹஸ்தாமலகர் என்னும் சீடர், “சுவாமி! பாடத்தை ஆரம்பிக்கலாமா?” என்று சங்கரரிடம் பணிவோடு கேட்டார். ஆனால் சங்கரரோ, “கிரி இன்னும் வரவில்லை. அவன் வந்தபின் பாடத்தைத் தொடங்கலாம்!” என்று கூறினார். அப்போது பத்மபாதர் என்னும் சீடர், “எதிரில் உள்ள ஒரு சுவரைச் சுட்டிக் காட்டிவிட்டு, இதற்கும் கிரிக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை! அவன் பாடத்துக்கு வந்தாலும் ஒன்று தான், வராவிட்டாலும் ஒன்று தான்!” என்று சொல்ல, அனைத்துச் சீடர்களும் கிரியைக் கேலி செய்து சிரித்தார்கள்.அச்சமயம் கிரியின் குரல் கேட்டது.

“விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்”
(சாஸ்திரங்களாகிற சமுத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவரும், உபநிஷத்துக்கள் கூறும் தத்துவங்களின் இருப்பிடமாகத் திகழ்பவருமான ஆதி சங்கரரின் பாத கமலங்களை என் இதயத்தில் வைத்துப் போற்றுகிறேன். மஹாஞானியான என் குரு சங்கரர் தான் எனக்கு அடைக்கலம் தந்தருள வேண்டும்) என்று தொடங்கி, சங்கரரின் மேன்மைகளைக் குறித்து எட்டு ஸ்லோகங்களைப் பாடிக் கொண்டு, கைகளைத் தட்டித் தாளம் போட்டுக் கொண்டு, துள்ளித் துள்ளி ஓடி வரும் கிரியைச் சீடர்கள் கண்டார்கள்.

வடமொழியில் உள்ள பாவகைகளுள் தோடகம் என்னும் பா வகையில் இந்த எட்டு ஸ்லோகங்களையும் கிரி இயற்றியிருந்தான். தோடகம் என்னும் பாவில் கவிதை எழுதுவது பெரும் கவிஞர்களுக்கே கடினமான செயலாயிருக்க, அறிவிலியான கிரியால் எப்படி எட்டு ஸ்லோகங்கள் எழுதிப் பாட முடிந்தது என்று சீடர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அப்போது அவர்களைப் பார்த்து, “சீடர்களே! கிரிக்கு ஞானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அளவு கடந்த குரு பக்தியை உடையவனாக அவன் இருக்கிறான். அத்தகைய குரு பக்தி உள்ளவர்களைத் தான் இறைவனும் விரும்புவான். மிகச்சிறந்த குரு பக்தனான கிரியின் அறிவை நீங்கள் கேலி செய்தீர்களல்லவா? அது இறைவனுக்கே பொறுக்கவில்லை! அதனால் ஒரே நொடியில் அவனுக்கு மிகச்சிறந்த பாண்டித்தியமும் ஞானமும் ஏற்படும்படி இறைவன் அருள்புரிந்து விட்டார்!” என்று கூறினார் சங்கரர்.

சங்கரர் குறித்து கிரி இயற்றிய அந்த எட்டு ஸ்லோகங்கள் ‘தோடகாஷ்டகம்’ என்று பெயர் பெற்றன. இந்த தோடகாஷ்டகத்தை எழுதியபடியால், ‘தோடகாச்சாரியார்’ என்றே கிரிக்குப் பெயர் ஏற்பட்டது. தாம் நிறுவிய மடங்களுள் ஒன்றான ஜோதிர்மட பீடத்துக்குப் பீடாதிபதியாகத் தோடகாச்சாரியாரை நியமித்தார் சங்கரர்.

கல்வி அறிவில் மந்தமாக இருந்த கிரி, தோடகாச்சாரியாராக மாறியதற்கு எது காரணம்? அவரது குருபக்தியே! அந்த குருபக்திக்கு உகந்த இறைவன், கிரிக்கு ஞானம் உண்டாகட்டும் என்று மனதில் நினைத்தார். அடுத்த நொடியே கிரிக்கு ஞானம் உண்டாகி விட்டது.

நமக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் அதை மனத்தால் நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான பிரயத்தனத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இறைவனுக்கோ, பிரயத்தனப்படத் தேவையில்லை. அவர் மனத்தால் நினைத்தாலேயே அந்தச் செயல் நிறைவேறி விடும்.

‘ஸங்கல்பம்’ என்பது நமது எண்ணத்தைக் குறிக்கும். ‘ஸித்த:’ என்றால் ஈடேறுதல் என்று பொருள். திருமாலின் எண்ணங்கள் யாவும் நினைத்த மாத்திரத்தில் ஈடேறிவிடுவதால், அவர் ‘ஸித்தஸங்கல்ப:’ (அனைத்து எண்ணங்களும் ஈடேறப்பெற்றவர்) என்றழைக்கப்
படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 254-வது திருநாமம்.

“எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!”
என்று பாரதியார் பாடியதற்கேற்ப, “ஸித்தஸங்கல்பாய நமஹ:”
 என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல எண்ணங்கள் விரைவில் நிறைவேறத் திருமால் அருள்புரிவார்.

255. ஸித்திதாய நமஹ: (Siddhidhaaya namaha)

சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்தபின், ஒருநாள் அரண்மனையிலுள்ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! இலங்கையில் நீ செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான்.அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும் தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்திருக்கிறதல்லவா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. அதன் அரங்கேற்றத்தின் போது தான் இலங்கையில் அனுமன் செய்த சாகசங்களை நீங்கள் கேட்டறிய இயலும்!” என்றாள் சீதை.

“அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க இயலாதே!” என்றான் ராமன். “சுவாமி! அனுமனின் வீர தீரச் சாகசங்களை அசோக வனத்திலிருந்த எனது தோழிகளான சரமாவும், திரிஜடையும் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் சிலவற்றைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் பட்டியலிட்டு நானே உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் இங்கு அயோத்தி அரண்மனையில் அவற்றைச் சொல்வது சரியாக இருக்காது. காவிரிக் கரையிலுள்ள ஏகாந்தமான ஸ்தலமாகிய வடுவூருக்குச் சென்று விடுவோம். அங்கே நான் அனுமனின் மேன்மையைச் சொல்ல, நீங்கள் புன்னகையோடு அவற்றைக் கேளுங்கள்!” என்றாள் சீதை.

அதனால் சீதையையும் லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வடுவூருக்கு எழுந்தருளினான் ராமன். அனுமனும் அங்கு வந்து ராமன் முன்னே கைகூப்பியபடி நின்று கொண்டான். அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம் ஆகிய எட்டு மகா சித்திகளையும் பயன்படுத்தி அரக்கர்களை அனுமன் எதிர்கொண்ட விதத்தைப் பற்றிச் சீதை கூற, அதை அனுமனும் கேட்டான். அப்போது லக்ஷ்மணன், “அனுமனே! தற்பெருமை பேசுவது உனக்குப் பிடிக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இப்போது உன் பெருமைகளைக் கேட்க நீயே வந்து விட்டாயே!” என்று கேட்டான்.

 “இலங்கையில் நான் எட்டு மகா சித்திகளைப் பயன்படுத்திப் பல சாகசங்களை நிகழ்த்தியதாக அன்னை சீதா தேவி சொல்கிறார். ஆனால் அந்த எட்டு சித்திகளையும் அடியேனுக்குத் தந்தது ராமனின் அருளும் ராம நாமமுமே ஆகும். எனவே, அந்த சித்திகளைப் பயன்படுத்தி நான் நிகழ்த்திய சாகசங்களில் எதுவுமே எனது பெருமையைப் பறைசாற்றாது. அந்த சித்திகளை எனக்கு அருளிய ராமனின் பெருமையையே பறைசாற்றும். என் பிரபுவின் பெருமைகள் பேசப்படும் இடத்தில் நான் இல்லாமல் இருப்பேனா? அதனால் தான் இங்கே ஓடி வந்து விட்டேன்!” என்று சொல்லின் செல்வனான அனுமன் விடையளித்தான். இன்றும் வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் நால்வரும் முகத்தில் முறுவலோடு தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

(எட்டு விதமான அமானுஷ்ய திறமைகளை அஷ்ட மஹா ஸித்திகள் என்று சொல்வார்கள்.

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை கரிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.
1. அணிமா - அணுவைப் போல் சிறிய தேகத்தை அடைதல்
2. மஹிமா - மலையைப் போல் பெரிதாகுதல்
3. லகிமா - காற்றைப் போல் லேசாக இருத்தல்
4. கரிமா - எடையை மலையளவு அதிகரித்தல்
5.  ப்ராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப்படுத்துதல்
6. ப்ராகாம்யம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்
7. ஈசித்வம் - அனைத்துலகிலும் ஆணையைச் செலுத்துதல்
8. வசித்வம்  அனைத்தையும் வசப்படுத்துதல்)

அனுமன் கூறியபடி அந்த எட்டு சித்திகளையும் அடியார்களுக்கு அருள்வதால், திருமால் ‘ஸித்தித:’ என்றழைக்கப்படுகிறார். ‘த’ என்றால் கொடுப்பவர் என்று பொருள். ஸித்தியைக் கொடுப்பவர் ‘ஸித்தித:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 255-வது திருநாமம்.“ஸித்திதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து
வெற்றிகளையும் திருமால் தந்தருள்வார்.

256. ஸித்திஸாதனாய நமஹ: (Siddhisaadhanaaya namaha)

திருவரங்கத்தில் வாழ்ந்த அழகிய மணவாள தாசர் என்னும் மகான், தமது சீடர்களை அழைத்துக் கொண்டு திருமலை யாத்திரை சென்றார். அடியார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் “கோவிந்தா! கோவிந்தா!” என்று கோஷமிட்டபடி, ஏழு மலைகளையும் ஏறிச் சென்று மலையப்பனைத் தரிசித்து விட்டுத் திருவரங்கத்துக்குத் திரும்பினார்கள்.

அப்போது அழகிய மணவாள தாசரின் நண்பர் ஒருவர் அவரிடம், “சுவாமி! திருமலைக்குத் தாங்கள் சென்றிருந்ததாகத் தங்கள் சீடர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அதிகமான கூட்டம் இருந்தபடியால், ‘ஜருகண்டி’ என்று சொல்லி உங்களை எல்லாம் விரைவாக அனுப்பி விட்டார்களாமே! உங்களால் மலையப்ப சுவாமிக்கு முன் ஒரு நிமிடம் கூட நின்று தரிசிக்க முடியவில்லையாமே! இவ்வளவு தூரம் நீங்கள் நடந்து சென்றது
பயனில்லாமல் போய்விட்டதே!” என்று சொன்னார்.

அழகிய மணவாள தாசரோ, “நண்பரே! மலையப்பனைத் தரிசிக்கும் நேரத்தில் உயர்ந்த ஆன்மிக ஆனந்தத்தை நாம் பெறுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவனைத் தரிசிக்கச் செல்லும் போது, அடியார்கள் அனைவரும் ஒன்று கூடி “கோவிந்தா! கோவிந்தா!” என்று அவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு, ஏழு மலைகளையும் நடந்தே ஏறிச் செல்கிறோமல்லவா? அப்போது உண்டாகிற ஆனந்தத்துக்கு மலையப்பனைத் தரிசிக்கும் ஆனந்தம் கூட நிகராகாது என்றே சொல்லலாம். தன்னை நோக்கி வரும் அடியார்களுக்குத் துன்பம் நேரக் கூடாது என்று கருதும் இறைவன், அவர்களின் பயணத்தை இனிமையானதாக ஆக்கி அருளிவிடுகிறார். எங்கள் இலக்கை விடவும், எங்கள் பயணமே இனிதாக இருந்தபடியால், எங்கள் யாத்திரையின் பயன் நிறைவேறிவிட்டது!” என்றார்.

மேலும், “ஒவ்வொரு ஜீவாத்மாவும் மோட்சம் அடைகையில், வைகுண்டத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் அவர் பெறுகின்ற ஆனந்தமானது, வைகுண்டத்தில் இறைவனை அனுபவித்துப் பெறுகின்ற ஆனந்தத்தை விடவும் அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதை மணவாள மாமுனிகள் மிக அழகாக,

“போம்வழியைத் தருமென்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழிபோய் அமுத விரசை ஆற்றில்
நாம்மூழ்கி மலம் அற்றுத் தெளிவிசும்பை
நண்ணி நலந்திகழ் மேனிதன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர்கொண்டு அலங்கரித்து
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலரோள்கோன் மடியில் வைத்து
உகக்கும் வாழ்வு…”

என்கிறார். வைகுண்டத்துக்குச் செல்லும் பாதையிலுள்ள பதினான்கு உலகங்களில் உள்ள தேவர்கள் முக்தியெய்தும் ஜீவாத்மாவின் மேல் பூமாரி பொழிந்து மரியாதை செலுத்த, அவற்றைக் கடந்து வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியில் நீராடிய பின், திவ்யமான உடலைப் பெற்று, நித்தியசூரிகளால் அலங்கரிக்கப்பட்டு, வைகுண்டத்திலுள்ள திருமாமணி மண்டபத்துக்குள் நுழைந்து, அத்திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷன் மேல் வீற்றிருக்கும் திருமால் மடியில் ஜீவாத்மா அமர்கிறார்.

இந்தப் பயணத்தை நினைத்துப் பார்க்கும் போதே, முக்தியில் பெறும் ஆனந்தத்தை விட உயர்ந்த ஆனந்தத்தைப் பெற முடிகிறதல்லவா? உலகியல் விஷயங்களில் பயணம் கடினமானதாக இருக்கும், ஆனால் இலக்கு இனிதாய் இருக்கும். ஆனால் ஆன்மிகத்தில் மட்டும், இலக்கைப் போலவே பயணமும் இனிதாயிருக்கும்!” என்று சொன்னார் அழகிய மணவாள தாசர்.

இறைவனை அடைவதற்காக நாம் பக்தியோகம் செய்கிறோமல்லவா? அந்த பக்தியோகத்தில் இறைவனைத் தியானிக்கும் போது நாம் பெறக் கூடிய ஆனந்தமானது, அந்த தியானத்தின் பலனான இறையனுபவத்தைப் போலவே இனிமையானதாக இருக்கும். எனவே இறை தியானத்தைப் பொறுத்த வரையில், அந்த தியானமும் இனியது, அதன் பலனும் இனியது.

‘ஸித்தி:’ என்பது இறைவனை அடைதலாகிய இலக்கைக் குறிக்கும். ‘ஸாதன:’ என்பது அதை நோக்கிய பயணமாகிய பக்தியோகத்தைக் குறிக்கும். தன்னை நோக்கி வரும் அடியார்களுக்குக் களைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, ஸாதனமாகிய பக்தியோகமும் ஸித்தியாகிய இறையனுபவம் போல் இனிமையாக இருக்கும்படி அருள்புரிவதால் திருமால் ‘ஸித்திஸாதன:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸித்திஸாதன:’ என்றால் தன்னை நோக்கிய பயணத்தையும் இலக்கைப் போலவே இனிமையாய் ஆக்கி அருள்பவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 256-வது திருநாமம்.

“ஸித்திஸாதனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களும் இனிதாக அமையும்படித் திருமால் அருள்புரிவார்.

257. வ்ருஷாஹிணே நமஹ: (Vrushaahiney namaha)

கண்ணனை அழிப்பதற்காகப் பற்பல அசுரர்களை ஆயர்பாடிக்கு ஏவிய கம்சன், இறுதியாகக் கேசி என்னும் அசுரனை அனுப்பி வைத்தான். மாவாய் பிளந்தானை என்று ஆண்டாள் பாடியபடி, குதிரை வடிவம் கொண்ட கேசியின் வாயைப் பிளந்து அவனை வதம் செய்தான் கேசவன்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற கம்சன், “இனியும் கண்ணனை நோக்கி ஆயர்பாடிக்கு அசுரர்களை அனுப்பிப் பயனில்லை. விளக்கில் விழுந்து மாளும் விட்டில் பூச்சிகளைப் போல், நான் அனுப்பி வைத்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தாசுரன், அகாசுரன், பகாசுரன், பிரலம்பாசுரன், வத்சாசுரன், கபித்சாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், ரிஷபாசுரன், கேசி ஆகிய அனைவரும் மாண்டு விட்டார்கள். இனி கண்ணனை எனது ஊரான மதுராவுக்கு வரவழைத்து அழித்து விடுவதே சரி!” என்று தீர்மானித்தான்.

தனது மந்திரியும் கண்ணனின் உறவினருமான அக்ரூரரை அழைத்த கம்சன், “நீ உடனடியாக ஆயர்பாடிக்குச் செல்! அங்கிருக்கும் பலராமன், கண்ணன் ஆகிய இருவரையும் சந்தித்து, அவர்கள் வசுதேவர்-தேவகியின் ஏழாவது மற்றும் எட்டாவது மகன்கள் என்ற ரகசியத்தை அவர்களிடம் சொல்! அவர்களின் தாய்மாமனான நான், மருமகன்களைப் பார்க்க விரும்புவதாகவும், எனது வில் விழாவுக்கு அவர்களை விருந்தினர்களாக அழைப்பதாகவும் சொல்லி, அவ்விருவரையும் மதுராவுக்கு அழைத்து வா!” என்று சொன்னான்.

அந்த ஆணையை ஏற்று, அடுத்த நாள் தேரில் ஏறி ஆயர்பாடியை நோக்கிப் புறப்பட்ட அக்ரூரர், “கண்ணனைத் தரிசிப்பதற்காக நான் தவம் செய்தேனோ, தானம் செய்தேனோ, புண்ணியம் செய்தேனோ, பூஜைகள் செய்தேனோ தெரியவில்லையே! தேவர்களாலும், மகாலட்சுமியாலும் போற்றப்படும் கண்ணனின் திருவடித் தாமரைகளை இன்று நான் காணப் போகிறேன்! பிருந்தாவனக் காடுகளில் மாடுகளின் பின்னே நடந்த அம்மலர்ப் பாதங்களை என் கரங்களால் பிடிக்கப் போகிறேன்! நான் கம்சனின் மந்திரியான போதும், கண்ணன் என்னை விரோதி என்று கருதாமல் வரவேற்பான். தனது கருணை நிறைந்த குளிர்ந்த கடாட்சங்களை என்மீது பொழிவான்.

என்னை ஆரத் தழுவுவான். ‘அக்ரூரரே!’ என்று ஆசையுடன் என்னை அழைப்பான்!” என்றெல்லாம் கனவு கண்டு கொண்டே பயணிக்க, அன்று மாலை அவரது தேர் ஆயர்பாடியை அடைந்தது.அங்கே வெள்ளி மலை போல் பலராமனும், மரகத மலை போல் கண்ணனும் தன் தேரின் எதிரே நின்று கொண்டிருப்பதைக் கண்ட அக்ரூரர், உடனடியாகத் தேரில் இருந்து இறங்கி அவர்களை வணங்கினார்.

கண்ணனும் பலராமனும் அவரை வரவேற்றுத் தம் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமான அன்பை அவர் மேல் கண்ணனும் பலராமனும் பொழிந்தார்கள். மதுராவில் கம்சன் நடத்தி வரும் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றியும், கண்ணனையும் பலராமனையும் அழிப்பதற்காக அவன் தீட்டியுள்ள திட்டங்களைப் பற்றியும் கண்ணனிடம் எடுத்துக் கூறினார் அக்ரூரர். “திருமால் மற்றும் ஆதிசேஷனின் அவதாரங்களான உங்கள் இருவரையும் அந்தக் கம்சனால் எதுவுமே செய்ய முடியாது என்பதை நான் நன்கு அறிவேன்!” என்றும் சொன்னார் அக்ரூரர்.

அக்ரூரர் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனும் பலராமனும், நந்தகோபரிடம் சென்று, மன்னர் கம்சன் தங்கள் இருவரையும் விருந்தினர்களாக அழைத்துள்ளதாகவும், அதற்காக அக்ரூரருடன் செல்ல தங்களை அனுமதிக்குமாறும் வேண்டி, அவரது அனுமதியைப் பெற்றார்கள். கண்ணனை விட்டுப் பிரிந்து ஒரு நொடியும் வாழ முடியாதவர்களான கோபிகைகளிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, அக்ரூரருடன் புறப்பட்டான் கண்ணன்.

பலராமனையும் கண்ணனையும் தனது தேரில் ஏற்றிக் கொண்டு மதுராவை நோக்கிப் பயணித்த அக்ரூரர், “கம்சனுக்கு நன்றி! கம்சனுக்கு நன்றி!” என்று உரத்த குரலில் சொன்னார். “கம்சனுக்கு ஏன் இப்போது நன்றி தெரிவிக்கிறீர்கள்?” என்று கண்ணன் கேட்டான்.

அதற்கு அக்ரூரர், “கண்ணா! என்னுடைய பிறவிப் பயனை நான் இன்று தான் அடைந்தேன்.  இத்தனை நாட்களும் பாவியாகிய கம்சனின் முகத்தில் விழித்த நான், இன்று தங்களின் முகத்தில் விழித்தேனே! நான் எப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு வந்தேனோ, அதைவிடவும் அதிக அன்பை என்மீது தாங்கள் இருவரும் பொழிந்தீர்களே! உங்களது தரிசனம் கிடைக்கும் நாள் தானே வாழ்விலேயே மிகச்சிறந்த நாள்? அவர் நல்லெண்ணத்தில் செய்தாரோ, தீய எண்ணத்தில் செய்தாரோ, இத்தகைய தரிசனம் கிடைப்பதற்குக் கம்சன் தானே வழிவகுத்தார்? அதனால் தான் கம்சனுக்கு நன்றி சொன்னேன்!” என்று விடையளித்தார்.

இதிலிருந்து, இறைவனின் தரிசனம் நமது நாளை நன்னாளாக ஆக்குகிறது என்பதை அறிய முடிகிறதல்லவா? ‘அஹ:’ என்றால் நாள் என்று பொருள். ‘வ்ருஷ:’ என்ற பெயரடைக்கு நல்ல என்று பொருள். அடியார்களின் நாளை (அஹ:), நன்னாளாகத் (வ்ருஷ:) திருமால் ஆக்குவதால், அவர் ‘வ்ருஷாஹீ’ (அடியார்களின் நாளை நன்னாளாக்குபவர்) என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 257-வது திருநாமம்.
“வ்ருஷாஹிணே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்நாளில் அனைத்து நாட்களும் பொன் நாட்களாக அமையும் படித் திருமால் அருள்புரிவார்.

258. வ்ருஷபாய நமஹ: (Vrushabhaaya namaha)

காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளை ‘அத்தி வரதர்’ என்று அழைப்பார்கள். வடமொழியில் ஹஸ்தி என்றால் யானை, கிரி என்றால் மலை. மகாசாந்தன் எனும் யானையே மலையாக மாறி அப்பெருமாளைத் தாங்குவதால், ஹஸ்திகிரி என்று அந்த க்ஷேத்ரம் அழைக்கப்பட்டது. ஹஸ்திகிரி என்ற வடமொழிச் சொல் தமிழில் அத்திகிரி என்று வழங்கப்படுகிறது. அத்திகிரி வரதராக அப்பெருமாள் திகழ்வதால் ‘அத்தி வரதர்’ எனப்படுகிறார் என்றொரு விளக்கம் சொல்லப்படுகிறது. அல்லது, அத்தி மரத்தால் ஆன விக்கிரகத்தைக் கொண்டமையால், ‘அத்தி வரதர்’ என்றும் சொல்கிறார்கள்.

கிருத யுகத்தில் பிரம்மாவாலும், திரேதா யுகத்தில் கஜேந்திரனாலும், துவாபர யுகத்தில் பிருகஸ்பதியாலும், கலியுகத்தில் ஆதிசேஷனாலும் பூஜிக்கப்பட்டு வந்த அத்திவரதர், ஒரு நாள் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றி, “நான் பிரம்மாவின் வேள்வித் தீயில் தோன்றியவனல்லவா? அந்தத் தீயின் வெப்பம் இன்றளவும் என்மேல் வீசிக்கொண்டிருக்கிறது! அதனால் இக்கோவிலில் உள்ள அனந்த சரஸ் என்னும் பொய்கைக்குள் இருக்கும் நாலுகால் மண்டபத்துக்குள் என்னைப் பத்திரப்படுத்தி வைத்துவிடுங்கள்! யாகத்தீயால் ஏற்பட்ட சூட்டைத் தணித்துக்கொள்ள அந்தப் பொய்கைக்குள்ளே இருந்தபடி நான் இளைப்பாறப் போகிறேன்!” என்று சொன்னார்.

“அப்படியானால், இந்தக் கோவிலில் வழிபட எங்களுக்குத் தெய்வமொன்று வேண்டாமா?” என்று அர்ச்சகர் கேட்க, “பழைய சீவரத்தில் உள்ள தேவராஜப் பெருமாளை இத்திருக்கோவிலுக்கு எழுந்தருளச் செய்து அவரை வழிபடுங்கள்!” என்றார் அத்தி வரதர். அத்தி வரதருக்குக் கைங்கரியம் செய்யும் அனைத்து அர்ச்சகர்களுக்கும் இதே கனவு வந்தமையால், அது பெருமாளின் ஆணை என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அத்தி வரதரின் ஆணைப்படி அவரை ஒரு வெள்ளிப்பேழையில் வைத்து, அனந்த சரஸ் பொய்கையிலுள்ள நாலுகால் மண்டபத்துக்குள்ளே எழுந்தருளப் பண்ணினார்கள். காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள பழைய சீவரம் என்னும் ஊரிலிருந்த தேவராஜப் பெருமாள், வரதராஜப் பெருமாள் கோவில் கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளப் பண்ணப்பட்டார்.

அத்தி வரதரை அனந்த சரஸ்ஸுக்குள் எழுந்தருளப் பண்ணுகையில், “இறைவா! இனி நாங்கள் உன்னைத் தரிசிக்கவே முடியாதா? உலக வாழ்விலுள்ள வெப்பத்திலிருந்து எங்களை இனி யார் குளிர்விப்பார்கள்?” என்று ஊர்மக்கள் புலம்பினார்கள். அவ்வூரில் வாழ்ந்த ஒரு பண்டிதர் அத்தி வரதரைப் பார்த்து, “இறைவா! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் தன் சொந்த ஊரில் இல்லை என்றால், அவர் இறந்தவராகக் கருதப்படுவார் என்று ஒரு மரபுள்ளது. (கைகேயி அதனால் தான் பதினான்கு ஆண்டுகள் ராமனை வனவாசம் செல்லச் சொன்னாள்.) அதனால், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நீ வெளியே வந்து எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும்!” என்று வேண்டினார்.

அப்போது அசரீரியாக விடையளித்த அத்தி வரதர், “வெளியூர் சென்றவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுள் வராவிடினும், நாற்பது ஆண்டுகளுக்குள்ளாவது திரும்ப வரவேண்டும் என்றொரு நியதி உள்ளது. [ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வில் மொத்தம் நாற்பது சம்ஸ்காரங்கள் (தூய்மைப் படுத்தும் சடங்குகள்) செய்யப்படுவதால், நாற்பது ஆண்டுகள் என்பது பூரண வாழ்வைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.] அந்த வகையில், நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பேன்!

யாகத்தீயால் உண்டான வெப்பத்திலிருந்து என்னைக் குளிர்வித்துக்கொள்ளப் பொய்கைக்குள் புகும் நான், உலக வாழ்க்கை என்னும் வெப்பத்தால் தவிக்கும் அடியார்கள் மேல் எனது கருணை மழையைப் பொழிந்து அவர்களைக் குளிர்விப்பேன்!” என்று வாக்களித்தார். அதன்படி இன்றளவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்தி வரதர், 48 நாட்களுக்கு வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்திலே எழுந்தருளியிருந்து, அதன் பின் மீண்டும் அனந்த சரஸ்ஸுக்குள் சென்றுவிடுவார்.

இவ்வாறு தன் கருணை மழையை அடியார்கள் மேல் பொழிந்து அவர்களை குளிர்விப்பதற்காகவே அத்தி வரதர் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வருகிறார். அதனால் தான் வேதாந்த தேசிகனும், “முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்!” என்று அத்தி வரதரின் வருகையைக் குறித்துப் பாடுகிறார். அத்தி வரதரைக் குளிர்விக்க அவருக்கு நித்தியமும் விசிறி வீசுதலாகிய ஆலவட்டக் கைங்கரியம் செய்த திருக்கச்சி நம்பிகள், தம் தேவராஜ அஷ்டகத்தில்,

“த்வதீக்ஷண: ஸுதா ஸிந்து வீசி விக்ஷேப சீகரை:|
காருண்ய மாருதானீதை: சீதலை: அபிஷிஞ்ச மாம்||”

என்ற சுலோகத்தில், “வரதா! பலவிதமான துன்பங்களால் இன்னல் படுகின்ற அடியேனை, கருணை என்னும் காற்றோடு இணைந்து வருகின்ற உனது குளிர்ந்த கடாட்சமாகிய நதியினால் நனைத்துக் குளிர்விக்க வேண்டும்!” என்று பிரார்த்திக்கிறார். ‘வ்ருஷப:’ என்றால் பொழிபவர் என்று பொருள். கருணை மழையை அடியார்கள் மேல் பொழிந்து குளிர்விப்பதால் திருமால் ‘வ்ருஷப:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 258-வது திருநாமம்.“வ்ருஷபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மேல் திருமால் தனது கருணை மழையைப் பொழிந்து அவர்களைக் குளிர்வித்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!