×

அடியார்க்கும் அடியேன்

சிவமணம் கமழும் புதிய பக்தி தொடர்-1

சமயம் வளர்த்த நாயன்மார்கள்

கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்தபடி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள். சூரியனின் கிரணங்கள் புவி முழுவதும் கண நேரத்தில் பரவி வியாபிப்பதை இமை கொட்டாது வியந்திருந்தார். மெல்ல கண்களை மூடினார். புறத்தினுள் தெறித்து பரவிய சூரியனுக்குள்ளும் பேரறிவாக ஒளிரும் சிவச் செம்பொற்சோதியே இதோ இங்கே என்னுள்ளும் ஒளிர்கின்றது.

அங்கு ஒளியை அளித்தவனே இங்கு என்னுள்ளும் இலகுகின்றான். உடல், பொறிகள், மனம் என்று எதையெல்லாம் நானென நினைத்து மயங்கியிருந்தேனோ அவை அனைத்தும் நானல்ல என கண நேரத்தில் வேதியனாக வந்து சிந்தையை சிவமாக்கித் தெளிய வைத்த ஈசனே… எனும் நன்றியுணர்ச்சி நெஞ்சு முழுதும் படிந்துப் பரவியது. ஒரு விம்மிதம் தொண்டையை அடைக்க, கண்களில் ஆனந்த நீர் கன்னம் வழிந்திறங்கியது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், அட... ஆரூரான் தியாகராஜரையும், வன்மீகநாதரையும் தரிசிக்க வேண்டுமே எனும் விழைவு உண்டாகியது.
 
சுந்தரர் எழுந்தார். திருவாரூரிலுள்ள தன் இல்லத்திற்குள் சென்றார். கண்ணாடியின் முன் நின்றார். தன்னையும் கண்டார். தன்னை காணும் கண்களை பார்த்தார். கண்ணுக்கு கண்ணாய் தன்னுள் காணுவது யாரெனவும் கண்டார். தன் அலங்காரத்தை தொடங்கியபடியே சிந்திக்கலானார்.

‘‘என்றும் இளமையாக புத்தம் புதியதாக என்னுள் இலகும் சிவத்தைப்போலவே அலங்காரம் செய்து கொள்வேன். அன்று திருவெண்ணெய்நல்லூரில் மணமகனாக நின்றேன். நீ எனக்கு அடிமை என இந்த மணமகனின் கோலத்தில்தான் என்னை ஆட்கொண்டாய். அப்படி என்னை ஆட்கொண்ட நாளின் கணத்திலேயே, எனக்கினி மூப்பு, பிணி என்பதெல்லாம் இல்லைஎன்னும் திடம் உறுதியாயிற்று. பிறவிகளாய் மாறிவரும் இந்த யாக்கை நானில்லை. மாறாத சிவமே யான் என்றுணர்ந்து நின்ற நாள் அது. அன்றிலிருந்து மணமகனாகவே இருந்துவிட வேண்டும் என்றொரு அருளெண்ணமும் என்னுள் முகிழ்த்தது. இது என் அகத்தை நான் அது என்று வேறொரு பார்வையில் கண்டுகொண்ட தருணத்தின் வெளிப்பாடு’’ என்று தன் ஒப்பனை
அறையினின்று வெளியே வந்தார்.

ஆழித்தேர் ஓடும் திருவாரூர் நகர வீதியில் இறங்கினார். எதிர்பட்டோர் ஐயனே என்று கைகூப்பினர். அழகுச் சுந்தரரே என விளித்து நிலம்பட தொழுதனர். சுந்தரம் எல்லோரையுமே அடியவர்களாக கண்டது. வணங்க முற்பட்டோரை கைதூக்கி இதென்ன... ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று எழுப்பியது. சுந்தரருக்குள் சத்தியம் சிவமாகி ஒளிர்கிறது. இதோ இந்த திருமுகம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது என்று அவரை காணுவதற்காகவே கூட்டம் தெருவில் காத்திருந்து தரிசித்தது. ‘‘ எந்தை இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்’’ என்று அடியார்களை நோக்கி வணங்கியபடியே அரூரன் தியாகேசனின் ஆலயத்திற்குள் பிரவேசித்தார்.

நெடுமரம் மெல்ல சாய்வதுபோல தன் மேனி முழுதும் நிலத்தில் படர தொழுதார். அழகிய நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அருகிலுள்ள தேவாசிரிய மண்டபத்தை நோக்கி வணங்கி விட்டு வன்மீக நாதர் எழுந்தருளியுள்ள கருவறையை நெருங்கினார். தன்வயமிழந்தார். அந்தச் சந்நதியின் பெருக்கெடுத்தோடும் அருள் வெள்ளம் சுந்தரரை ஊடறுத்து மனம் பொறிகளுக்கு அப்பால் கொண்டு சென்றது. மனம் இப்போது கவிழ்ந்த பாத்திரம்போல உதித்த இடத்திற்கு சென்று ஒடுங்கியது. ஆதி அந்தமில்லா வன்மீகம் லிங்க உருவில் இங்கு எழுந்தருளியிருப்பது புரிந்தது. மெல்ல அகத்தை சிவம் புறத்தே நகர்த்த கண்களில் கட்டிய நீரோடு கைகூப்பி தொழுது நின்றார், சுந்தரர்.

சட்டென்று ஒரு குரல் லிங்கத்தின் மையத்திலிருந்து ஒலித்தது. முதல்முறை இதென்ன மாயம் என்று நெற்றி சுருக்கிப் பார்க்க, இரண்டாவது முறை சுந்தரா… என தோழமையோடு விளித்தது. ‘‘எம்முடைய தோழனாக விளங்கும் தன்மையை உமக்கு வழங்கினோமல்வா’’ என்று அசரீரியாக ஒலித்தது லிங்கச் சிவம். சில வில்வ ரத்னங்கள் மேனியில் அதிர்ந்து சரிந்தன. சுந்தரர் இது ஏதோ ஈசனின் ஆணை வரப்போவதற்கான நிமித்தமென அறிந்தார்.
‘‘நாயைப் போன்ற அடியேனை ஒரு பொருளாக திருவுள்ளத்தில் வழங்கியது தங்களின் பெருங்கருணையல்லவா.

என்னை தோழனாக ஏற்றதனால்தானே எல்லோரும் தம்பிரான் தோழன் என்கின்றனர். ஆனாலும், நான் அந்த தேவாசிரியன் மண்டபத்திலுள்ள சிவனடியார்களை காணும்போது என்னை அடியேனுக்கும் அடியேனாக உணர்கின்றேன். இவர்களுக்கு அடியவர்களாக வாழும் நாள் எந்நாளோ என்று தாபமுற்றிருக்கின்றேன். தேவாசிரியன் மண்டபத்திலிருந்து பெருகும் அந்த திருநீற்று மணமும், அவர்களின் மேனி முழுதும் புரளும் ருத்ராட்சமும், அந்த சிவஜோதி பொங்கும் திருமுகத்தையும் கண்டுவிட்டு என்னை நான் என்னவென நினைப்பது. அவர்களின் முன்பு யான் எவன் என குறுகியிருக்கின்றேன்’’ என்று கூப்பிய கையை அகற்றாது பேசினார்.  

‘‘ஆம்.. சுந்தரா… உமக்கிருக்கும் பெருமைக்கு நிகரானது அவர்களது பெருமையும். இடையறாது இடையறாது எப்போதும் எனையன்றி துதிப்பதற்கு வேறெதுவும் நிலையை அடைந்து விட்டவர்கள். உலகம் என்றொன்று இருப்பதை அறிந்திலார்.  எம்மைத் தவிர வேறெவரையும் தலைவனென கருதாதவர்கள். அது, அவர், அவை என்று பிரித்துணரும் பாங்கு அவர்கள் நெஞ்சத்தில் எழாது.

அவையாவும் நானே என்று எம்மையே எங்கும் காணும் திருக்கண் வாய்த்தவர்கள். அதனாலேயே அவர்களை பார்க்க வரும் மக்களையும் சமதரிசனம் எனும் உயர்ந்த நிலையில் நின்று பார்க்கின்றனர். அவர்களுக்கு அன்னியமாக அதாவது சிவத்திற்கு வேறாக வேறு எதையும் காண முடியாது. ஆதலால், அகப்பற்று புறப்பற்று என்று எதுவும் அவர்களுள் இல்லை. இத்தகைய பெருநிலையில் திகழ்ந்து கொண்டிருக்கும் தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அடியார்களை கண்டு வணங்கி வா.

அடியவர்களுக்கு அடியவனாக இருத்தலே சிவபக்தி. அடியார்களை குறித்துச் சிந்திப்பதே சிவச் சிந்தனை. அடியார்க்கு அடியவனாக வாழ்தலே சமய வாழ்க்கை. போ… அடியார்களை குறித்து பதிகங்களாக பாடு’’ என்று ஈசனே, ‘‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அழகிய பதிகத்தின் முதல் வாக்கியத்தையும் எடுத்துக் கொடுத்தார்.

நெஞ்சு முழுதும் நிம்மதி பரவ பேரின்பத்தோடு தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார். பலமுறை அங்கிருக்கும் அடியார்கள் முன்பு தம் மேனி படர நெடுஞ்சாண் கிடையாக வணங்கினார். சிவனடியார்களின் சீரிய திருத்தொண்டர்கள் அனைவருக்கும் அடியார்க்கும் அடியேன் எனும் பணிவு கொண்டு திருத்தொண்டர்தொகை எனும் பதிகங்களை பக்தியோடு பாடினார்.

இந்த திருத்தொண்டர் தொகையில் இடம்பெற்ற அடியார்களான நாயன்மார்களின் திருப்பெயர்களை முதன்மையாகக் கொண்டு அந்த அடியார்களின் சிவபக்தியையும், ஞான நிலையையும். தத்துவச் செறிவையும் மையமாக்கி பெரிய புராணம் எனும் பெரும் நூலை தமிழில் இயற்றினார். தெய்வ தமிழின் அழகையும், இனிமையையும் கம்பீரத்தையும், ஆழத்தையும் பக்தி, ஞானம் யோகமென குழைத்துக் குழைத்து அளித்தார். சைவ சமயம் இன்று
ராஜகோபுரமாக நிமிர்ந்து நிற்பதற்கு பெரிய புராணம் முக்கிய காரணமாகும். எண்ணற்ற ஞானியரை பெரிய புராணம் சிவமாக்கியிருக்கிறது.

அப்பேற்பட்ட, பெரிய புராணத்தை சேக்கிழார் எவ்வாறு இயற்றினார். கர்ண பரம்பரையாக சொல்லப்பட்டு வரும் நாயன்மார்களின் சரிதத்தினை எப்படித் தொகுத்தார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்த்துவிட்டு நாயன்மார்களின் அருட்சரிதத்தினுள் நுழையலாம். அதற்கும் முன்பு திருத்தொண்டர் தொகை முழுவதையும் பாராயணம்போல் தெரிந்து வைத்திருப்பது முக்கியமாகும். ஏனெனில், சிவனார் முதல் வரி அளிக்க சுந்தரர் தொடர்ந்து பாடி தெய்வீகம் நுரைத்துப் பொங்கும் பதிகங்கள் இவை. படிக்கப் படிக்க சிவனருள் சொக்கப்பனையாக சிவந்தெழும் எனில் மிகையில்லை.
இதோ… திருத்தொண்டர் தொகை

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  1

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  2

 
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும்
அடியேன்செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.  3

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும்     அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  4

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
  நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  5

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
  மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
  செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
  கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  6
 
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  7

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  8


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடயேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  9


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
  பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும்     அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  10

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும்     அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே. 11

(சிவம் ஒளிரும்)

தொகுப்பு: கிருஷ்ணா

Tags :
× RELATED எந்த கோயில்? என்ன பிரசாதம்?