×

விளைச்சல் தரும் விவசாய தேவதை

எல்லம்மா கண் பார்த்தா
மண்கூட எருவாகும்
செல்லியம்மா மனசுவச்சா
பயிரெல்லாம் வரவாகும்
பசுமை தொட்டில் கட்டி
கன்றுகளை தாலாட்டும்
காலில் கொலுசு கட்டிய
கோமாதா நடை நடனமாகும்
குழந்தை மனம் போல
பால் கறக்கும்!

குறுமிளகு நீ தந்தா உன்
குறையாவும் தீர்த்திடுவாள்
உப்பு காணிக்கை வாங்கி
தப்பெல்லாம் கரைத்திடுவாள்
வெக்காளியம்மன் அருளாலே
வெட்டுக்கிளிகள் திசைமாறும்
வேண்டியதை அவள் கொடுப்பா
மாவிளக்கு நீ போடு!

பச்சையம்மா பந்திபோட்டா
பாம்பு எலி உறவாகும்
மயிலும் குயிலும் சேர்ந்து
மடியில் வந்து நலம் கேட்கும்!

கன்னியம்மா கண்மணி
நிலக்கடலை விதையாகும்
பனித்துளி நெல்மணியாகும்
மழைத்துளி மண்ணில் வந்து
மக்காச்சோளமாக மாறும்
மண்புழுவும் தோழனாகும்!

கவலையின்னா என்ன
கடலில் வாழும் மிருகமா
எங்க மனசுல அது
குடியேற நாங்க விடுவமா!

கடலம்மா அனுமதியோடு
கரையோரம் பயிர் செய்வோம்!

அலைநீரை அணைபோட்டு
வயலுக்கு பாய்ச்சுவோம்
வெள்ளையம்மா வீரத்தால்
வெள்ளநீர் வெல்லமாகும்
உள்ளங்கள் கொண்டாடும்
சொர்க்கமடா எங்க பூமி
பள்ளத்தில் பாடுபட்டு நாங்க
பாருக்கு படி அளப்போம்!

பராசக்தி தலைமை வகிக்கும்
பட்டிக்காடு பல்கலைக்கூடம்
விவசாய தேவதைக்கு படையல் போட்டா
விளைச்சலும் வாழ்வும் அமோகம்!

தொகுப்பு: விஷ்ணுதாசன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி