×

நினைந்தவர் புலம்பல்!

*குறளின் குரல் 125

நீதிநூலான திருக்குறள் என்னும் முப்பாலை இலக்கியமாக மாற்றுவது அதன் மூன்றாம் பாலான காமத்துப் பால் தான். திருக்குறளின் காமத்துப்பாலில்  தான் எத்தனை எத்தனை அழகான கற்பனைகள்! இரண்டே அடிகளில் ஏழே சீர்களில் காதல் காவியமே படைக்கிறார் வள்ளுவர். தமிழில் எந்தக்  காப்பியத்தில் உள்ள காதல் காட்சிகளுக்கும் சற்றும் குறைந்ததல்ல வள்ளுவர் தீட்டிக் காட்டும் காதல் சித்திரங்கள். வள்ளுவரின் காதல் சித்திரிப்பில்  எங்கும் ஒரு சிறு ஆபாசமும் இல்லை. வார்த்தைகளில் விரசம் கடுகளவும் இல்லை. ஊடல் வருவதோடு கூடச் சில இடங்களில் கூடலும் வருகிறது.  ஆனால் விரசமே இல்லாத கூடல் அது. இலக்கியத்தில் வெளிப்படைப் பாலியல் என்பது தமிழ் மரபு அல்ல என்பதைப் பல நூற்றாண்டுகளாக  உணர்த்திக் கொண்டிருக்கிறது தமிழரின் பண்பாட்டுப் பெருமை பேசும் திருக்குறள். இதை இன்றைய கவிஞர்கள் உணரவேண்டும்.  

காமத்துப் பாலில் நூற்று இருபத்தைந்தாம் அதிகாரம் `நினைந்தவர் புலம்பல்’ என்பது. காதலனைப் பிரிந்த பிரிவாற்றாமையைப் பொறுக்கமாட்டாத  தலைவி, அவனோடிருந்த காலங்களை எண்ணி எண்ணிப் புலம்புகிறாள். இந்த அதிகாரத்தில் வள்ளுவர் வழங்கும் பத்துக் குறள்களும் உயர்ந்த  காதலின் உன்னத மகத்துவத்தை உரத்துப் பேசுகின்றன. காதல் வயப்பட்ட இளைய தலைமுறை இந்த அதிகாரத்தைப் படித்தால், எப்படி வள்ளுவர்  தங்களின் ஆழ்மன உணர்வுகளை இவ்வளவு தெளிவாகச் சித்திரித்தார் என வியப்படையும். முதிய தலைமுறை படித்தாலோ தங்களின் வாலிப கால  வசந்த நாட்களை மறுபடி நினைத்து மகிழும்.

`உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது!’ (குறள் எண் 1201)


கள் தன் நினைவை மறந்து களித்திருக்குமாறு செய்யும். ஆனால் காமமோ நினைக்கும்தோறும் இனித்திருக்கும். எனவே கள்ளைக் காட்டிலும் காமம்  இனியது.

`எனைத்தொன் றினிதேகாண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்.’ (குறள் எண் 1202)


தான் விரும்பியவரை நினைத்தவுடன் காமம் இனிக்கிறது. இப்படி நினைத்தவுடனே இனிமையைத் தருவது வேறு எதுவும் இல்லை.

`நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.’ (குறள் எண் 1203)

தன்னைப் பிறர் நினைக்கும்போது தனக்குத் தும்மல் வரும் என்பது ஒரு நம்பிக்கை. தலைவி சொல்கிறாள்: `எனக்குத் தும்மல் வருவதுபோல் தோன்றி  நின்றுவிடுகிறதே? என்னை நினைப்பதுபோல் அவர் நினையாமல் இருக்கிறார் போலிருக்கிறது.’

`யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்!’ (குறள் எண் 1204)

`எம்முடைய நெஞ்சில் எம்முடைய காதலர் எப்போதும் நீங்காமல் தங்குகின்றாரே, அதைப் போல அவருடைய நெஞ்சில் நாமும் நீங்காது  இருப்போமா?’ என எண்ணி ஏங்குகிறாள் தலைவி.

`தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்!’ (குறள் எண் 1205)

தம் நெஞ்சில் நம்மை வரவொட்டாமல் காவல் காக்கும் காதலர், எம் நெஞ்சில்ஓயாமல் வருவதற்கு வெட்கப்பட மாட்டாரோ?

`மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.’ (குறள் எண் 1206)

நான் அவரோடு சேர்ந்திருந்த காலத்தை எண்ணியெண்ணி உயிர் வாழ்கிறேன். மற்றபடி அந்த நினைப்பு மட்டும் இல்லாவிட்டால் நான் வேறு எதைக்  கொண்டு உயிர்வாழ்வேன்?

`மறப்பின் எவன் அவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.’ (குறள் எண் 1207)


 என் காதலரை நான் மறந்தறியேன். அவரை நினைக்கும்போது என் மனம் பிரிவுத் துயரால் வாடுகிறது. நினைக்காமலே இருந்துவிட்டால் பின் நான்  என்ன ஆவேனோ?

`எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ காதலர் செய்யும் சிறப்பு!’ (குறள் எண் 1208)

பிரிவுக் காலத்தில் என் காதலரை நான் எத்தனை நினைத்தாலும் அவர் அதன்பொருட்டுச் சீற்றம் கொள்ள மாட்டார். காதலர் எனக்குக் காட்டும்  கருணை அவ்வளவு மேலானது!

`விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.’ (குறள் எண் 1209)


பிரிவுக்குமுன் நமக்குள் வேறுபாடு இல்லை, நாம் இருவரும் ஒருவரே என்று சொன்ன தலைவர், இப்போது அன்பில்லாமல் இருக்கிறாரே, அதை  நினைத்து அழிகிறது என் இனிய உயிர்.

`விடாஅது சென்றாரை கண்ணினால் காண்ப
படாஅதி வாழி மதி.’ (குறள் எண் 1210)

`பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்றுவிட்டார் என் காதலர். அவரை மீண்டும் என் கண்ணால் காணும்வரை நீ மறையாமல் இருப்பாயாக!’ என  நிலவை வேண்டுகிறாள் இரவில் தலைவன் நினைவு வந்து கண்விழித்திருக்கும் ஒரு தலைவி....

கம்ப ராமாயணம் சீதையும் ராமனும் ஒருவரையொருவர் பிரிந்திருந்த நேரத்தில், சீதையை நினைத்து ராமன் புலம்புவதையும் ராமனை நினைத்து சீதை  புலம்புவதையும் இலக்கிய நயத்தோடு சித்திரிக்கிறது. `நினைந்தவர் புலம்பல்’ என்ற திருக்குறள் அதிகாரத்தின் விளக்கம்போல் அமைந்தவை அந்தப்  பகுதிகள். ஆரண்ய காண்டத்தில் ராமன் சீதையைப் பிரிந்த பிரிவாற்றாமை காரணமாக, பார்க்கும் பொருள்களிலெல்லாம் சீதையைக் கண்டு  புலம்புகிறான். மயிலின் தோகை ராமனுக்கு சீதையின் அடர்ந்த கருங்கூந்தலை நினைவு படுத்துகிறது. மானின் அகன்ற கண்கள் சீதையின் கரிய  பெரிய விழிகளை ஞாபகப் படுத்துகின்றன. பார்க்கும் பொருட்களிலெல்லாம் தன் பிரியத்துக்குரியவரைக் காணும் நிலை பிரிவாற்றாமையால் வருந்தும்  காதலரிடத்துத் தோன்றும் என மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் பேசுகிறது. காதல் உணர்வுகளுக்கும் கூட இலக்கணம் வகுத்த  பெருமை நம் தொல்காப்பியருக்கு உரியது.

`வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்றிச்
சிறப்புடை மரபின் களவென மொழிப!’


களவென்றும் கற்பென்றும் காதல் வாழ்வை இரண்டாக வகுத்தனர் தமிழர். களவென்பது திருமணத்திற்கு முற்பட்டது. கற்பென்பது திருமணத்திற்குப்  பிற்பட்டது. களவுக் காலத்தில் ஒருவரையொருவர் நேசிப்பவர்கள், சந்திக்க முடியாமல் பிரிந்திருக்கும் போது பார்க்கும் பொருள்களெல்லாம் தம்  அன்புக்குரியவரையே நினைவு படுத்தும் என்பதையே தொல்காப்பியர் `நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்ற அடியால் தெரிவிக்கிறார்.ராமன் மட்டுமா? ஆண் மனமே பிரிவாற்றாமையால் பெருந்துயரம் கொண்டு புலம்பும்போது மென்மையான பெண்மனம் பேதலிக்காதா? சோகமே  வடிவாக அசோக வனத்தில் அமர்ந்திருக்கும் சீதையும் ராமனைப் பிரிந்த பிரிவைத் தாங்காமல் புலம்புகிறாள்.

`மானைப் பின்தொடர்ந்த என் மணாளனுக்கு ஆபத்து. அவரைத் தேடிச் செல்!’என்று திட்டி அல்லவா லட்சுமணனை அவள் அடர்ந்த கானகத்திற்குள்  அனுப்பினாள்! அதனால் அல்லவா தனித்திருந்த அவளை ராவணன் சிறையெடுத்தான்! லட்சுமணனை வைத எண்ணம் வைதேகியை வாட்டி  வதைக்கிறது. `என் மைத்துனனைச் சினந்தேனே, நான் இன்னும் உயிரோடிருப்பதை இந்த உலகம் ஒப்புமா?’ எனத் துடிதுடிக்கிறது அவள் மனம்.  கம்பனின் கவிநயம் செறிந்த பாடல் இதோ:

`வஞ்சனை மானின்பின் மன்னைப் போக்கிஎன்
மஞ்சனை வைதுபின் வழிக்கொள் வாயெனா
நஞ்சனை யானகம் புகுந்த நங்கையேன்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் ஒப்புமோ?’


தன்னைக் காவல் காத்துக் கொண்டிருந்த அரக்கியர் உறங்கிய நிலையில் இருக்க, சீதை வானத்தில் நிலவைப் பார்க்கிறாள். நிலவு அவளுக்குத் துயரம்  தருகிறது. இந்த நிலவு என் மணாளனுக்குத் தொல்லை தராதா என அவள் சலித்துக் கொள்கிறாள்.

`கல்லா மதியே! கதிர்வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர், நினையா
வில்லாளனை ஏதும் விளித்திலிரோ?’ ....


மகாகவி பாரதியார் தாம் எழுதிய முப்பெரும் பாடல்களில் ஒன்றான கண்ணன் பாட்டில், தலைவி தலைவனை நினைத்துப் புலம்புவதாக எழுதியுள்ளார்.
`கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் நீ கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்’ என்ற பாடலின் பல அடிகள் பிரிவாற்றாமைத் துயரத்தை  வெளிப்படுத்துபவை.
 
`மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
 மறைந்து திரிபவர்க்கு மானமும் உண்டோ?
பொய்யை உருவமெனக் கொண்டவன் என்றே - கிழப்
 பொன்னி உரைத்ததுண்டு தங்கமே தங்கம்!
நேர முழுதிலுமப் பாவி தன்னையே - நெஞ்சம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்!
தீர ஒருசொல்லின்று கேட்டு வந்திட்டால் - பின்னர்
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!’ ....


தமிழ்த் திரைப்படங்களிலும் நினைந்தவர் புலம்பலாக அமைந்த பாடல்கள் பல உண்டு. கர்ணன் படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன்  ராமமூர்த்தி இசையமைப்பில் பி.சுசீலா பாடிய பாடல் அப்படிப்பட்டது.

`என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி...
அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தப் புரமொன்று இருப்பதை அறியான்!
வருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்...
இன்றேனும் அவன் எனை நினைவானோ?
இளமையைக் காக்கத் துணைவருவானோ? ...


ஆனந்த ஜோதி திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி. சுசீலா பாடும் கண்ணதாசன் பாடலும் தலைவி தலைவனை  நினைத்துப் புலம்பும் பாடல் தான். நிலவையும் தென்றல் காற்றையும் அழைத்துத் தன் பிரிவாற்றாமையைச் சொல்லிப் புலம்புகிறாள் தலைவி.

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?...
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா?..
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா? ...


பொற்சிலை திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி ஆர். கோவர்த்தனம் இசையில் பி.சுசீலா பாடும் பாடல் முழுவதும் தமிழ் மரபில் தலைவி  தலைவனை நினைத்துப் புலம்புவதாக அமைந்துள்ளது.

`அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க
அக்கறையில்லாததென்ன கடலலையே- அன்று
சென்றுவிட்ட என்தலைவன் வரவில்லையே?
கட்டிஒரு முத்தமிட்டு கற்பனையில் கவிபடித்து
தொட்டணைத்துக் காதலுக்கு கடலலையே - என்
தோளிரண்டும் வாடுதடி கடலலையே!`
கையிலே வளையலில்லை, கண்ணிரண்டில் தூக்கமில்லை!
கட்டியுள்ள ஆடைகளும் கடலலையே - என்
சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே!...
மீனாகப் பிறந்திருந்தால் வேண்டியே தவமிருப்பேன்
நானாகப் போயிருப்பேன் கடலலையே - நான்
மானாகப் பிறந்துவிட்டேன் கடலலையே!’ .....


பாத காணிக்கை திரைப்படத்தில் பி.சுசீலா பாடியுள்ள கண்ணதாசன் பாடல் தலைவி தலைவனை நினைத்துப் புலம்புவதை அழகிய வரிகளில்  விவரிக்கிறது.

`எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த
என்தலைவன்
விட்டுவிட்டுச் சென்றானடி இன்று வேறுபட்டு
நின்றானடி...
தேரோடும் வாழ்விலென்று ஓடோடி வந்த என்னைப்
போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி!
கையளவு உள்ளம் வைத்து கடல்போல் ஆசைவைத்து
விளையாடச் சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி!
காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்குமிந்தக்
காதல்வர வேண்டாமடி எந்தன் கோலம்வர
வேண்டாமடி!’


நினைந்தவர் புலம்பல் என்பது நம் தமிழிலக்கிய மரபு. தூய காதலால் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் பிரிவைத் தாங்காது புலம்புவதாக  அமைந்த கவிதைகள் இலக்கியத்திலும் திரைப்படத்திலும் இன்னும் பல உண்டு. வள்ளுவரின் `நினைந்தவர் புலம்பல்’ என்னும் அதிகாரம் உள்ளிட்டு  இந்தப் பாணியில் எழுதப்பட்டுள்ள எல்லாத் தமிழ்ப் பாடல்களையும் நாம் நினைந்து நினைந்து மகிழலாம்.
 
(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Tags :
× RELATED பலாத்கார காட்சி இணையதளத்தில் வைரல்...