கணநாதனை நினைத்தால் மனநிலையில் மாற்றம் வரும்

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?என் மகள் பி.காம், எம்.பி.ஏ படித்துவிட்டு வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலையில் இருந்தார். தற்போது அதனை விடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்கிறார். திருமணத்திற்காகவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மூன்று முறை நிச்சயம் நடப்பது வரை நெருங்கி வந்து நடைபெறவில்லை. அவரது திருமணம் எப்போது நடைபெறும்? வேலைக்குச் செல்வாரா?

- உமா, சென்னை.

உங்கள் மகளின் ஜாதகப்படி அவர் நிச்சயமாக வேலைக்குச் செல்லக்கூடியவர் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. வெகு விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும்.ஏற்கெனவே கிடைத்த வேலையும் நல்ல வேலைதான் என்றாலும் இவரது எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் அமையவில்லை என்பதால் அதனை விடுத்து வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் பாவகத்திற்கு அதிபதியே சூரியன் என்பதாலும் சூரியன் வெற்றியைத் தரும் 11ல் அமர்ந்து தசையை நடத்துவதாலும் தற்போது நடந்து வரும் புக்திக்கு அதிபதியாகிய சந்திரன் ஜீவன ஸ்தானத்திலேயே அமர்ந்திருப்பதாலும் தற்போது நடந்து வருகின்ற நேரமே உத்யோக ரீதியாக மிகவும் வலிமையான நிலையைத் தருகிறது.

வெகு விரைவில் தனியார் நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்துவிடும். இதுவும் அந்நிய தேசம் சார்ந்த நிறுவனம் ஆக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். கிடைக்கின்ற வேலையை முழுமையான ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு பணியாற்றச் சொல்லி வலியுறுத்துங்கள். லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்களின் இணைவு உயரிய சம்பாத்யத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

திருமணத்தைப் பொறுத்தவரை ஏழாம் பாவகம் என்பது சுத்தமாக உள்ளது. ஏழாம் பாவக அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதால் திருமணத்தில் தாமதம் என்பது உண்டாகிறது. என்றாலும் நீசபங்க ராஜ யோகம் உள்ளதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. லைஃப் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் எதிர்பார்ப்புகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. அவரது ஜாதக பலத்தின்படி நிச்சயமாக நல்ல மாப்பிள்ளை அமைவார். 27.05.2022 வாக்கில் அவரது திருமணம் நல்லபடியாக அமையும் என்பதை அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?எனது மகளுக்கு கடந்த ஐந்து வருடங்களாக மாப்பிள்ளை தேடி வருகிறேன். ஆனால் இதுவரை எந்த வரனும் அமையவில்லை. திருமணத் தடை நீங்கி, விவாகம் எப்பொழுது நடைபெறும் என்பதைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

- ஜலகண்டாபுரம் வாசகர்.

நீங்கள் அனுப்பியுள்ள விபரங்களின் அடிப்படையில் ஜாதகத்தை கணித்து ஆராய்ந்து பார்த்ததில் தற்போது நடந்து வருகின்ற நேரமே திருமணத்திற்கு உகந்த நேரம் தான் என்பது தெளிவாகிறது. குருவின் ஏழாம் இடத்து அமர்வு நல்ல குணவான் ஆன மணாளனை அமைத்துத் தரும். அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதி ஆகிய குருவே களத்ர ஸ்தானத்தில் அமர்ந்து தசையை நடத்துகிறார்.

அதோடு களத்ர காரகன் ஆகியசுக்கிரனின் புக்தியும் நடந்து வருகிறது. சுக்கிரன் நான்காம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். ஆக இந்த நேரத்தில் எந்த வரன் அமைந்தாலும் அது நல்லபடியாகவே அமையும். வசதி வாய்ப்புகளுக்கு குறைவு இருக்காது. இரண்டில் ராகு, எட்டில் கேது என்று எதையாவது எண்ணிக் கொண்டு அதேபோல கிரக அமைப்பு உள்ள மாப்பிள்ளைதான் தேவை என்பது போல தேடாதீர்கள். ராகு- கேதுக்களினால் எந்த விதமான தோஷமும் உங்கள் மகளின் ஜாதகத்தில் உண்டாகவில்லை. உண்மையில் உங்கள் மகளின் ஜாதகம் தோஷம் ஏதும் இல்லாத சுத்த ஜாதகமே. இதனை மனதில் நிலை நிறுத்தி வரன் தேடுங்கள். வலிய வரும் சம்பந்தத்தினை தவிர்க்காதீர்கள். இந்த வருட இறுதிக்குள் உங்கள் மகளின் திருமணம் நிச்சயமாகிவிடும் என்பதையே அவரது ஜாதகம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

?என் மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்த பின்பு தினமும் என்னுடனும், எங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்குமா? அப்பெண்ணை திருமணம் செய்தால் அவன் வாழ்வு நிலைபெறுமா?

- முருகேசன், திருநெல்வேலி.

தோஷம் என்பது அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இல்லை. நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. உங்கள் மகன் சண்டை போடுவதற்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் செய்ததில் இருந்து தான் மகன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது உங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். மகனின் குணம் நன்றாகத் தெரிந்திருந்தும் குடும்பத்திற்கு விளக்கேற்ற வரும் பெண்ணின்

ஜாதகத்தின் மீது குறை காண்பது தவறு.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகன் இயற்கையிலேயே சற்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். கோபம் என்பது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர்வ சாதாரணமான விஷயம். நீங்கள் நிச்சயம் செய்திருக்கும் பெண் சதயம் நட்சத்திரம் கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்தவர். உங்கள் மகனின் குணத்தினைப் புரிந்து கொண்டு அவரை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் வலிமை பெற்றவராக அந்தப் பெண் இருக்கிறார். மனைவியின் வழி நடத்துதலின்படி உங்கள் மகன் நடந்து கொண்டால் வாழ்வினில் வளர்ச்சி என்பது நன்றாகவே இருக்கும்.

ஏழில் சுக்கிரன், எட்டில் சூரியன் என்று ஒரு சில கிரக அமைப்புகள் இருவரின் ஜாதகங்களிலும் ஒத்துப் போகின்றன. உங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவி எவ்வாறு அமைய வேண்டும் என்ற விதி எழுதப்பட்டிருக்கிறதோ, அந்த விதிமுறைகளின் படியே அந்தப் பெண்ணின் ஜாதகமும் அமைந்திருக்கிறது. அநாவசியமான சந்தேகங்களுக்கு மனதில் இடமளிக்காமல் திருமணத்தை முழு மனதுடன் நடத்துங்கள். பெற்றோரின் ஆசிர்வாதமும் பெரியவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக துணையிருப்பதும் தம்பதியரை நல்லபடியாக வாழ வைக்கும்.

?எங்களது பேரன் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவன் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்புவதாக கேள்விப்பட்டோம். மன வருத்தமாக உள்ளது. அவன் திருமண வாழ்க்கை, வேலைவாய்ப்பு, எதிர்காலம் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.

- தஞ்சை மாவட்ட வாசகி.

உங்கள் பேரனின் ஜாதகத்தில் தற்போது நடந்து வரும் நேரம் என்பதும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பும் அவரை இவ்வாறு நடந்து கொள்ள வைக்கிறது. உங்கள் பேரனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் அவர் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்தவர் என்பதையும் தற்போது சூரிய தசையில் சந்திர புக்தியின் காலம் நடந்து வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.

திருமணத்தைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் பாவகத்தில் சூரியனின் அமர்வும் அவரை வழி நடத்துகிறது. அதிலும் தற்போது சூரிய தசை நடப்பதாலும், சூரியனின் சாரம் என்பது செவ்வாய் சார்ந்து அமைந்திருப்பதாலும் மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்ள வைத்திருக்கிறது.

பலவந்தமாகவோ அல்லது கண்டிப்புடன் நடந்து கொள்வதன் மூலமாகவோ அவரது மனதினை மாற்ற இயலாது. மிகவும் பிடிவாத குணம் கொண்டவர் என்பதும், நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்டவர் என்பதும், தனது சுயகௌரவத்திற்காக எதையும் செய்யத் துணிபவர் என்பதும் அவரது ஜாதகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

அவரது போக்கிலேயே அமைதியாக விட்டு விடுவது நல்லது. கண்டிக்கும் விதமாக பேசாமல் “நல்லது கெட்டது என்பதை நன்றாக உணர்ந்தவன் நீ, எப்பொழுதும் குடும்ப கௌரவத்திற்கும், நமது தர்மத்திற்கும் விரோதமாக நடந்து கொள்ளமாட்டாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்பது போல அவரிடம் அவ்வப்போது பேசி வாருங்கள். அன்பினால் மட்டுமே உங்கள் பேரனை மாற்ற இயலுமே தவிர அடக்கு முறையால் அவரது மனதினை மாற்ற இயலாது. மேலும் தற்போது நடந்து வரும் நேரம் என்பது அவரது உத்யோகத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.

வெளிநாடு சார்ந்த வேலைக்கு அவர் முயற்சித்துக் கொண்டிருப்பாரேயானால் இந்த நேரத்தில் நிச்சயமாக வெற்றி கிடைத்துவிடும். உத்யோக முறையில் தொலைதூரப் பயணம் என்பதை அவரது ஜாதகம் உணர்த்துகிறது. தொலைதூரப் பிரயாணம் என்பதும், உத்யோக ரீதியினால் ஆன பணிச் சுமையும் அவரது மனநிலையை மாற்றலாம்.

29வது வயது வரை திருமணம் பற்றிய பேச்சினை எடுக்காமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது. 29வது வயதில் நடக்கும் திருமணமே அவரது வாழ்வினில் நல்லதொரு முன்னேற்றத்தைத் தரும். அந்நிய தேசப் பணியும், உங்கள் பேரனின் தன்னம்பிக்கையுடன் கூடிய சுய முயற்சியும், அவரது தன்னம்பிக்கை நிறைந்த செயல்பாடுகளும் சிறப்பான எதிர்காலத்தை அவருக்கு அமைத்துத் தரும் என்பதையே அவரது ஜாதகம் உறுதியாக உணர்த்துகிறது.

?என் சகோதரியின் மகள் எம்பிஏ முடித்துவிட்டு எந்தப் பணிக்கும் செல்லவில்லை. புளூகிராஸ் மெம்பர். வீட்டினில் ஏழு நாய்களை வளர்க்கிறாள். அதுவே உலகம் என்றும் வாழ்கிறாள். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்து திருமணம் எப்போது நடைபெறும். அவளுக்கு வரவுள்ள கணவன்

நல்லபடியாக பார்த்துக் கொள்வானா? என் சகோதரி மிகவும் மனக்கவலையில் உள்ளார்.

- லதா, திருவொற்றியூர்.

உங்கள் சகோதரி மகளின் ஜாதகத்தில் களத்ர தோஷம் என்பது காணப்படுகிறது. நீங்கள் அனுப்பியிருக்கும் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் ஆர்வம் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் இந்தப்பெண் மிகவும் பிடிவாத குணத்தினை உடையவர். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் இடமாகிய களத்ர ஸ்தான அதிபதி சனி மூன்றில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் என்பது உண்டாகியிருக்கிறது.

இந்த அமைப்பு திருமண வாழ்வினில் ஈடுபாட்டினைத் தராது. மேலும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றிச் சொல்லும் நான்காம் பாவகத்தில் செவ்வாயின் ஆட்சி பலமும், உடன் மனோகாரகன் சந்திரன் நீசம் பெற்றிருப்பதும், அத்துடன் உச்ச பலம் பெற்ற கேதுவின் இணைவும் நாய்கள் வளர்ப்பினில் அளவுக்கதிகமான ஆர்வத்தினைத் தோற்றுவித்திருக்கிறது.

ஒரே பாவகத்தில் அதுவும் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் ஒரு கிரஹம் ஆட்சி, ஒரு கிரஹம் உச்சம், ஒரு கிரகம் நீசம் என்ற இணைவில் இருப்பது இதுபோன்ற அம்சத்தினைத் தந்திருக்கிறது. வளர்ப்புப் பிராணிகளை பேணுவதில் அதிலும் குறிப்பாக நாய்களின் மீதான அவரது பரிவும் அன்புமே அவரது சுகமான வாழ்விற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்திருக்கிறது.

களத்ரகாரகன் சுக்கிரனும் நீசம் பெற்றிருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ளவற்புறுத்தாதீர்கள். 36 வயதினைக் கடந்த அவர் உங்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொண்டாலும் திருமண வாழ்வினில் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டார். அநாவசியமாக மற்றொரு ஆண்மகனின் வாழ்வினை நாமாக தடை செய்தது போல் ஆகிவிடும்.

அவரைப் பற்றிய கவலை உங்கள் சகோதரிக்குத் தேவையில்லை. உடன் பிறந்த சகோதரனின் ஆதரவு என்பது அவருக்கு இருக்கும் என்றாலும் இந்தப் பெண் யாருடைய உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர் அல்ல என்பதும், இறுதிவரை அவருடைய சுகமான வாழ்விற்கு எந்தவிதமான குறையும் உண்டாகாது என்பதும் தெளிவாகவே தெரிகிறது. வீண் கவலையை விடுத்து அந்தப் பெண்ணை அவரது போக்கிலேயே விட்டுவிடுங்கள்.

புளூகிராஸ் அமைப்பின் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் வாயில்லா ஜீவன்களுக்கு அவர் இந்த ஜென்மத்தில் செய்து வரும் சேவை என்பது பூர்வ ஜென்ம கர்மாக்களுக்கான பரிகாரம் ஆக அமைவதோடு அளப்பறிய புண்ணியத்தையும் தேடித் தரும். எந்த விதமான சிரமமும் இன்றி இறுதி வரை தனது வாழ்வினை சேவைப் பணிகளுக்கு அர்ப்பணித்து நல்ல பெயரோடும் புகழோடும் வாழ்வார் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,

மயிலாப்பூர், சென்னை - 600 004

தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

Related Stories: