சென்னை: பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் வரும் 21ம் தேதி ரிலீசாகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியது: எல்லா கல்லூரியிலும் படு பில்டப் மாணவர் ஒருவர் கெத்துடன் இருப்பார். அவருக்கு நண்பராக இருந்தால் கவனிக்கப்படுவோம் என அவருடனே ஒரு கும்பல் சுற்றும். கல்லூரி வாழ்க்கை வரைதான் அந்த நபருக்கு கெத்து. கல்லூரி காலம் முடிந்ததும், அவனது வாழ்க்கை என்ன ஆனது என்று கூட யாருக்கும் கவலை இருக்காது. அதுபோன்ற ஒரு மாணவன்தான் படத்தின் ஹீரோ. கல்லூரியில் அவனுக்கு தரப்பட்ட பட்டப் பெயர்தான் டிராகன். இந்த கேரக்டரில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
இதில் எனது கல்லூரி அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்காக இது முழுக்க எனது வாழ்க்கை கதை என சொல்ல மாட்டேன். பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாகவே எனக்கு அதிகம் பிடிக்கும். எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வருவாயை படத்துக்கு ஈட்டித் தருவது பெரிய விஷயம். அதை எனது நண்பன் பிரதீப் செய்ததில் எனக்கு தனி மகிழ்ச்சி. இந்த படத்தில் ஹீரோவுக்கு 2 சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதை பிரதீப்பிற்கான இமேஜுக்கு ஏற்றபடி இருக்கும். அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்கள். அனுபமாவை இதில் டப்பிங் பேச வைத்துள்ளேன்.