மும்பை: நடிகை நோரா ஃபதேஹி இறந்ததாக வீடியோ ஒன்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘தோழா’, ‘பாகுபலி’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர் பாலிவுட் நடிகை நோரா பதேஹி. இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரிஹர வீரமல்லு’ தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். சுஃபியான் கான் என்ற நெட்டிசன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் நடிகை நோரா ஃபதேஹி, சாசக விளையாட்டில் ஈடுபட்டபோது சறுக்கி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து இறந்ததாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் இருக்கும் இளம்பெண், ஸ்கேட்டிங் விளையாட்டில் பலவிதமாக சாகசம் செய்கிறார்.
ஒரு காலால் மட்டும் அதி விரைவாக செல்கிறார். அப்போது தடுக்கி விழும் அவர், தலையில் படுகாயம் அடைகிறார். அந்த ஸ்பாட்டிலேயே அவர் இறக்கிறார். பார்ப்பதற்கு நோரா ஃபதேஹியின் முகச்சாயலில் இருக்கிறார். இந்த வீடியோவைதான் அந்த நெட்டிசன் பரப்பிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோரா ஃபதேஹியின் மேனேஜர், ‘அந்த வீடியோவில் இருப்பது நோரா கிடையாது. நோரா இதுபோல் எந்த விளையாட்டிலும் பங்கேற்கவும் இல்லை. இந்த வீடியோவே ஏஐ மூலம் மாற்றியமைத்து விபத்து நடந்துள்ளதாக காட்டப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.