×

விடாமுயற்சி – திரைவிமர்சனம்

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் , ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடா முயற்சி. அஜர்பைஜானில் நல்ல வருமானம், வீடு என செட்டிலான பிஸினஸ் மேனாக அர்ஜுன் (அஜித் குமார் ) . அவருக்கு மனைவியாக கயல் ( த்ரிஷா) . ஊருக்கே எடுத்துக்காட்டாக வாழும் கணவன் மனைவி. ஆனால் யானைக்கும் அடி சறுக்குமே. 12 வருடங்கள் திருமண வாழ்வில் திடீர் விரிசல். விவாகரத்து வரை செல்லும் இருவரும், கடைசியாக ஒரு டிரிப் என கயலை ஜியார்ஜியாவில் இருக்கும் அவரது அப்பா, அம்மா வீட்டில் விட்டுவிட சேர்ந்து பயணிக்கிறார்கள். பயணம் அவ்வளவு சுமூகமாக இல்லாமல், இடையில் ஒரு கேங் மோதல், தொடர்ந்து கடத்தப்படும் கயல் என அர்ஜுன் முற்றிலும் நிலைகுலைந்து நிற்கிறார்.

எங்கே தனது மனைவி, யார் கடத்தினார்கள், இவர்கள் திருமண பந்தம் என்ன ஆனது போன்ற பல கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷன் ஸ்டைலில் க்ளைமாக்ஸில் பதில். ‘ எதையும் சரி செய்து பயன்படுத்தத் தெரிஞ்ச தலமுறை நாங்க, அவ்வளவு சுலபமா தூக்கிப் போட மாட்டோம்’ இதை அழுத்தமாகவே அஜித் சொல்லும் இடத்தில் படத்தின் நாயகனாகவும் ரியல் லைஃப் ஹீரோவாகவும் தெரிகிறார். படம் முழுக்க விதவிதமான லுக் நிறைய எமோஷனல் காட்சிகள் என தனக்கான பங்கை சரியாக புரிந்து கொண்டு எப்போதுமான மாஸ் கிளாஸ் நடிப்பை கொடுத்திருக்கிறார். வழக்கம் போலவே அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார் சேஸிங், ரேசிங் என கார் சார்ந்த நிகழ்வுகளும் ஒருசேர இந்த படம் நிச்சயம் இரண்டு வருடங்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான்.

த்ரிஷா நடிக்க வந்து 20 வருடங்களைக் கடந்து விட்டது என்பது மற்ற மொழிக்காரர்களுக்கு சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு இன்னமும் அவருடைய அழகும் இளமையும் மாறவே இல்லை. காதல் காட்சிகளிலும் அவருடைய என்றும் மாறா அழகு கை கொடுக்கிறது. ஆனால் எமோஷனல் காட்சிகள் ஏன் தடுமாற்றம் தெரியவில்லை. அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்கான வில்லன் நிச்சயம் இன்னொரு ஹீரோவாகத்தானே இருக்க வேண்டும். அதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அர்ஜுன். ஆனால் அவ்வளவு பெரிய நடிகர் தேவைப்படாத கேரக்டர்தான். அஜர்பைஜான் நாட்டுக்காரர் ஒருவரை கொஞ்சம் ஆஜானபாகுவாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கலாம். ஆரவ் மற்றும் ரெஜினா இந்த கதைக்கே செதுக்கி வைத்தார் போல பக்கா ஆக்சன் படங்களுக்கு நிச்சயம் இருவருமே பொருத்தமானவர்கள்.

இனி தொடர்ந்து ஒரு ஸ்மார்ட் வில்லன், வில்லன் கூட்டத்தில் ஒரு டெக்னாலஜி தெரிஞ்ச வில்லி போன்ற கேரக்டர்களுக்கு ரெஜினா என இருவரும் மிகக் கச்சிதமாக இருப்பார்கள். மற்ற நடிகர்கள் அவரவர் பங்கை கொடுக்கப்பட்ட மீட்டரில் செய்திருக்கிறார்கள். ரவிசந்திரன் ஐரோப்பாவில் கோட் போட்டுக்கொண்டு தமிழ் பேசுகிறார். எதற்கு. மகிழ்திருமேனியன் திரைக்கதையில் எப்போதுமே சோடை சொல்ல முடியாது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘பிரேக் டவுன்‘ படத்தின் கதைதான் என்பது ஏற்கனவே சொல்லிவிட்ட நிலையில் முடிந்தவரை திரைக்கதையில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். அதே சமயம் கதை சொல்ல வேகம் சில இடங்களில் அவசரமாகவும் தெரிகிறது. அஜித் – த்ரிஷா இருவருக்குமான குடும்ப பிளாஷ்பேக் காட்சிகள் இவற்றில் இன்னும் தெளிவான கதை சொல்லலை கையாண்டிருக்கலாம். ஆனால் ஆக் ஷன் அதிரடி பேக்கேஜ் வழக்கமான மகிழ்திருமேனி சிறப்பாக ஸ்டைலிஷ்.

படத்தின் அடுத்த ஹைலைட் அனிருத். சவடிக்கா… பாடல் துவங்கிய இடத்திலிருந்து அனிருத் கிடைக்கும் கேப்பில் எல்லாம் நிறைகிறார். ஹீரோயிசம் இல்லாத படம் என இயக்குனர், ஏன் அஜித்தே சொன்னாலும் நான் என் வேலையை சரியாக செய்வேன் என தெறிக்க விட்டிருக்கிறார். ‘ முயற்சி விக்டோரி…‘ பிஜிஎம் ரசிகர்கள் ஸ்பெஷல் ரகம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இதுவரை நாம் கண்டிராத கிழக்கு ஐரோப்பாவை இன்னும் அற்புதமாக காட்சிபடுத்தியிருக்கிறது. நிச்சயம் இங்கே எல்லாம் நாம் தொலைதொடர்பின்றி காணாமல் போனால் என்ன ஆகும் என்னும் பயத்தையும் கொடுக்க தவறவில்லை.

பாலைவன பார், டிரக் குடோன்கள், தனியான வீடுகள், என கலர் டோனே தமிழ் சினிமாவுக்கு மிகப் புதிது. என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் படு ஷார்ப். ஆனால் குடும்ப காட்சிகளில் சில இடங்கள் அரைகுறையாக கடந்து செல்கின்றன இவர்கள் சொல்லும் நகரங்கள், நாடுகள், ஏன் மொழி கூட அவ்வளவு அந்நியமாக இருக்க ஆனால் கடந்து செல்லும் அத்தனை பேருமே தமிழர்களாக இருப்பது சினிமா கிளிஷே. இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்த நிலையில் எங்கேயும் நெட்வொர்க்கை பயன்படுத்தாத போலீஸ், அவர்களின் அலட்சியமான பேச்சு, இப்படி நிறைய லாஜிக் பிரச்னைகள் தெரிகின்றன. மொத்தத்தில் விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு மாஸ் கிளாஸ் விருந்து , மற்றவர்களுக்கு இதுவும் ஒரு சினிமாவாகக் கடந்து போகும் .

 

Tags : Ajit Kumar ,Arjun ,Trisha ,Regina ,Arao ,Ramya ,Laika ,Makhtarumeni ,
× RELATED கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை...