ஸ்ரீகிருஷ்ணன் : தெரிந்த கண்ணன் தெரியாத தகவல்கள்

*யயாதி மன்னரின் மகனான யது மிகச்சிறந்த தானப்பிரபு. அவரிடம் ஒருமுறை ஒருவன் தானம் பெற்றால், அதன்பின் அவன் பலருக்குத் தானம் செய்யும் அளவு செல்வந்தன் ஆகிவிடுவான். யது செய்த இத்தகைய தானத்தைக் கண்டு உகந்த திருமால், அந்த யதுவின் குலத்தில் யாதவனாக - கண்ணனாக - அவதரித்தார்.

*பூமியின் பாரத்தைப் போக்க வேண்டும் என்று திருமாலிடம் தேவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுடன் பூமிதேவி ஒரு பசுவின் வடிவில் சென்று தன்னைக் காக்குமாறு திருமாலிடம் வேண்டினாள். பசுவடிவில் வந்து தன்னை வணங்கிய பூமியைக் காப்பதற்காகவே தனது அவதாரம் என்று உணர்த்தவே, ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்தான் கண்ணன்.

*தேவர்களும் பூமிதேவியும் இவ்வாறு பிரார்த்தித்த போது, திருமால் தன் திருமேனியில் இருந்து வெள்ளை நிற ஒளியையும், கறுப்பு நிற ஒளியையும் பூமிக்கு அனுப்பினார். வெண்ணிற ஒளி பலராமனாகவும், கருநிற ஒளி கண்ணனாகவும் உருவானது.

*தேவகி கம்சனுக்கு உடன்பிறந்த சகோதரி அல்லள். தேவகியின் தந்தை தேவசேனரும், கம்சனின் தந்தை உக்ரசேனரும் சகோதரர்கள் ஆவர்.

*வசுதேவருக்குத் தேவகி எட்டாவது மனைவி ஆவாள்.

* இரணியனுக்குக் காலநேமி என்றொரு சகோதரன் இருந்தான். அந்தக் காலநேமி தான் கம்சனாகப் பிறந்தான். இரணியன் சிசுபாலனாகவும், இரணியாட்சன் தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள் என்பதும் வரலாறு.

*காலநேமியின் ஆறு மகன்களும் பிரகலாதனோடு சேர்ந்து நாராயண நாமத்தைப் பாடி வந்தார்கள். “உங்கள் தந்தை கையாலேயே நீங்கள் இறப்பீர்களாக!” என்று அந்த அறுவரையும் சபித்தான் இரணியன். ஆனால் காலநேமி அவர்களைக் கொல்லவில்லை. அந்த அறுவரும் தமது அடுத்த பிறவியில், வசுதேவர்-தேவகியின் முதல் ஆறு குழந்தைகளாக வந்து பிறந்தார்கள். காலநேமியின் மறுபிறப்பான கம்சன் தன் கையால் அவர்களைக் கொன்றான். அதனால் அவர்களுக்கு மீதமிருந்த காலநேமி கையால் இறக்க வேண்டும் என்ற கர்மா தீர்ந்து அந்த ஆறு பிள்ளைகளும் முக்தி அடைந்தார்கள்.

*தேவகியின் கருவில் ஏழாவது கருவாக இருந்த பலராமனுக்கு ஏழு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், திருமாலின் ஆலோசனைப்படி துர்க்கா தேவி, ஆயர்பாடியில் இருந்த வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணியின் கருவுக்கு அக்குழந்தையை இழுத்துச் சென்று மாற்றினாள். கருவிலேயே இழுத்துச் செல்லப்பட்டதால், பலராமனுக்கு சங்கர்ஷணன் என்ற பெயர் உண்டானது. கரு சிதைந்துவிட்டதாகக் கம்சனிடம் செய்தி சொல்லப்பட்டது.

*ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில் மதுராவில் கண்ணன் அவதரித்தான். அதே நேரத்தில் ஆயர்பாடியில் யசோதையின் மகளாகத் துர்க்கா தேவி தோன்றினாள். அந்த துர்க்கை அனைவரையும் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டாள். எனவே அந்த இரவில் மொத்தம் நால்வர் மட்டுமே விழித்திருந்தார்கள் - கண்ணன், துர்க்கை, வசுதேவர், தேவகி. யசோதைக்குப் பிரசவம் பார்த்த செவிலி கூட ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று அறிவதற்கு முன் தூங்கி விட்டாள்.

*அவதாரம் செய்யும் போது நான்கு கரங்களோடு, சங்கு சக்கரங்களோடு தோன்றினான் கண்ணன். ஆனால் இத்தகைய கோலத்தில் கண்ணன் இருந்தால், தன்னைக் கொல்லவந்த நாராயணனே கண்ணன் என்று கம்சன் அறிந்து கொள்வான் என்று தேவகி அஞ்சினாள். அதனால் தாயின் சொல்லுக்கு மதிப்பளித்து, தனது இரண்டு கூடுதல் கரங்களையும், சங்கு சக்கரங்களையும் உடனே கண்ணன் மறைத்துக்

கொண்டான்.

*கண்ணனை அழிப்பதற்காகக் கம்சனால் அனுப்பப்பட்ட பேய்ச்சி பூதனை. அவள் தான் கம்சனின் வளர்ப்புத்தாய் ஆவாள்.

*பூதனை விஷப்பாலைக் கண்ணனுக்குக் கொடுத்தாலும், அதைக் கண்ணனுக்கென்றே முழு மனதோடு அர்ப்பணித்து விட்டாளல்லவா எனவே அதையும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதமாக எண்ணிப் பூதனைக்கு முக்தி அளித்தான் கண்ணன்.

*சகடாசுரன் என்ற அசுரன் கண்ணனை அழிப்பதற்காக மாட்டு வண்டிச் சக்கர வடிவில் வந்தான். தொட்டிலில் கிடந்த படி மாட்டு வண்டிச் சக்கரத்தைக் கண்ணன் உதைத்தான். கண்ணனின் திருவடி பட்டதால், சகடாசுரன் அக்கணமே முக்தியடைந்து வைகுண்டத்தைச் சென்றடைந்தான்.

*யசோதை கண்ணனை உரலோடு கட்டினாள் என்பதை நாம் அறிவோம். தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு. வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணனுக்கு தாமோதரன் என்று பெயர்.

*கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்ததைக் கண்ட ஆயர்கள், “நீ தேவனா, யட்சனா, கந்தருவனா, சித்தனா, சாரணனா, கிம்புருஷனா, வித்யாதரனா, அசுரனா, ராட்சசனா?” என்றெல்லாம் அவனைப் பார்த்துக் கேட்டார்கள். “ஏன் எனது தரத்தைக் கீழே இறக்கி விட்டீர்கள்? நான் தேவாதி தேவனான திருமால்!” என்று இங்கே கண்ணன் பதில் சொல்லி இருக்கலாம். ஆனால் எளிமையோடு, “என்னை அப்படியெல்லாம் உயர்த்திப் பேசாதீர்கள்! நான் உங்களில் ஒருவன்!” என்று விடையளித்தான் கண்ணன்.

*கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்துப் பசுக்களைக் காத்தபடியால், கண்ணனுக்குக்

கோவிந்தன் - பசுக்களைக் காத்தவன் என்ற திருப்பெயர் உண்டானது.

*யசோதையின் அண்ணன் கும்பனின் மகளான நப்பின்னையை மணப்பதற்காக ஏழு காளைகளை அடக்கினான் கண்ணன்.

*ராதையும் கண்ணனும் இறுதி வரை காதலர்களாகவே இருந்தார்கள். திரு மணம் நடைபெறவில்லை. இறைவன் மீது கொண்ட அன்பின் உச்சமாக, தெய் வீகக் காதலின் வடிவமாகவே இன்றும் ராதை பார்க்கப்படுகிறாள்.

*பலராமனோடு மதுராவில் நடந்த வில் விழாவுக்கு வந்த கண்ணன், அங்கே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த கம்சனைப் பிடித்து இழுத்தான். இத்தனை நாட்களும் எந்தக் கண்ணனை எண்ணிக் கம்சன் அஞ்சிக் கொண்டி ருந்தானோ, அந்தக் கண்ணனே இப்போது நேரில் வந்துவிட்டான் அல்லவா? எனவே கண்ணனைக் கண்ட அதிர்ச்சியில் கம்சன் அப்படியே மாண்டு விட்டான். கண்ணன் தனியாகக் கம்சனைத் தாக்கவில்லை.

* கம்ச வதம் ஆனபின், தன் தாய் தேவகியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மறைத்து வைத்திருந்த தனது இரண்டு கூடுதல் கைகளையும் சங்கு சக்கரங்களையும் வெளிக்கொணர்ந்தான் கண்ணன். அதன்பின் கிருஷ்ணாவதாரம் முழுவதும் நான்கு கைகளோடும் சங்கு சக்கரங்களோடும் தான் கண்ணன் திகழ்ந்தான். இதைக் கீதா பாஷ்யத்தில் ராமாநுஜரும், யாதவாப்யுதயத்தில் வேதாந்த தேசிகனும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

*தாய் தந்தையரான தேவகி வசுதேவரைச் சிறையில் இருந்து விடுவித்த கண்ணன், “ஒரு பிறவியில் பெற்றோர்கள் செய்த உதவிக்கு நூறு பிறவிகள் உழைத்தாலும் கைம்மாறு செய்ய முடியாது! இவ்வாறிருக்க நான் உங்களைப் பிரிந்து பத்து வருடங்கள் இருக்க நேர்ந்ததே!” என வருந்தினான்.

*கண்ணன் யசோதைக்குச் செய்து காட்டிய பால லீலைகளைத் தேவகி காண நினைத்தாள். எனவே தேவகிக்காக மீண்டும் ஒருமுறை அவளது மனத்திரையில் அத்தனை லீலைகளையும் காட்டினான் கண்ணன்.

*கம்ச வதம் ஆனபின் கம்சனின் தந்தையான உக்கிரசேனருக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டு, அவரது பிரதிநிதியாக இருந்து கண்ணன் ஆட்சி செய்தான். கண்ணன் தனக்கென்று பட்டாபிஷேகம் செய்துகொள்ளவில்லை.

*சாந்தீபனி என்ற குருவிடம் பாடம் பயின்ற பலராமனும் கண்ணனும் 64 நாட்களில் 64 கலைகளையும் கற்றார்கள். அவருக்குக் குரு தட்சிணையாக இறந்து போன அவரது மகனை மீட்டுத் தந்தான் கண்ணன்.

*கிருஷ்ணன் - ருக்மிணியின் மகனாக

மன்மதன் வந்து பிறந்தான். அவனுக்குப் பிரத்யும்நன் என்று பெயர் சூட்டப்பட்டது.

*பூமிதேவியின் மகனான நரகாசுரன், தனது தாயின் அனுமதியின்றித் தன்னை யாரும் கொல்லக் கூடாது என வரம் வாங்கி இருந்தான். அதனால் தான் கண்ணன் அவனை அழிக்கச் செல்லும் போது, பூமிதேவியின் அம்சமான சத்யபாமாவோடு சென்று, அவளது அனுமதியுடன் நரகாசுரனை வதைத்தான்.

*நரகாசுரனால் சிறைவைக்கப்பட்ட பதினாறாயிரத்து நூறு இளவரசிகளையும் கண்ணன் மணந்தான். மொத்தம் கண்ணனுக்குப்

பதினாறாயிரத்து நூற்றெட்டு மனைவியர்.

*வாலியின் மனைவியான தாரையின் சகோதரன் துவிவிதன். ராம பக்தனாக இருந்த அவன், ராமனுக்கு நிறைய தொண்டுகள் செய்தான். இருப்பினும் பின்னாளில் நரகாசுரனோடு ஏற்பட்ட நட்பினாலே, துவிவிதனும் அசுரனாக மாறினான். நரகாசுரன் கண்ணனால் வதைக்கப்பட்டதை அறிந்த துவிவிதன், பலராமனைத் தாக்க வந்தான். அவனைப் பலராமன் வதம் செய்தார்.

*ராமாவதாரத்தில் ராமனுக்குப் பல தொண்டுகள் செய்த கரடியான ஜாம்பவான், கிருஷ்ணாவதாரத்தில் தனது மகளான ஜாம்பவதியைக் கண்ணனுக்கு மணம்முடித்துத் தந்தார்.

*மிகச்சிறந்த கிருஷ்ண பக்தரான அக்ரூரர் தனது அடுத்த பிறவியில் சூர்தாஸ் என்ற பக்தராகப் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.

*குசேலர் தந்த அவலில் ஒரு பிடியைத் தன் வாயில் போட்டுக் கொண்ட கண்ணன், அடுத்த பிடியைப் போட்டுக்கொள்ள முற்பட்ட போது, கண்ணனைத் தடுத்தாள் ருக்மிணி. “நீங்கள் அவனுக்கு விரைவாகப் பொன்மழை பொழிவதற்கு ஏற்கனவே உண்ட ஒரு பிடி அவல் போதாதா? இன்னொரு பிடியும் வேண்டுமோ?” என்பது ருக்மிணியின் கேள்வியாம்.

*கிருஷ்ணன் என்றால் கருநிறம் கொண்டவன், அனைவரையும் ஈர்ப்பவன், பூமிக்கு மகிழ்ச்சியைத் தருபவன் போன்ற பல பொருட்கள் உண்டு.

* கண்ணனில் என்றும் நிலைத்திருப்பதால் அவன் கண்ணன் என்றழைக்கப்படுகிறான்.

*வசுதேவனின் மகனாக அவதரித்தபடியால், வாசுதேவன் என்ற திருப்பெயரும் கண்ணனுக்கு உண்டு. கேசியை வதம் செய்ததால் கேசவன். மாடுகளை மேய்த்துப் பராமரித்ததால் கோபாலன். கோபாலன் என்பதே தமிழில் கோவலன் என்றானது.

*கண்ணனின் மகன்களுள் ஒருவனான சாம்பனைத் துரியோதனின் மகளான லட்சுமணாவுக்கு மணம்முடித்துத் தந்தான் கண்ணன். எனவே கண்ணனும் துரியோதனனும் சம்பந்திகள்.

*125 வருடங்கள் இந்த நிலவுலகில் கண்ணன் எழுந்தருளியிருந்தான்.

*பதினாறாயிரத்து நூற்றெட்டு மனைவிகளை மணந்த கண்ணன், பதினாறாயிரத்து நூற்றெட்டு வடிவங்கள் எடுத்துக் கொண்டு, பதினாறாயிரத்து நூற்றெட்டு மாளிகைகளில் அந்தந்த மனைவியருடன் வாழ்ந்தான். அத்தனை மாளிகைகளிலும் தினந்தோறும் அக்னிஹோத்ரம் உள்ளிட்ட வைதிக கர்மாக்களைச் சரியாக அநுஷ்டித்து வந்தான்.

*குழலூதும் கண்ணனின் உருவத்தை வீட்டில் வைப்பது நல்லதல்ல என்று சிலர் கருது கிறார்கள். அது தவறு. குழலூதும் கண்ணன், நம் வீட்டில் உள்ள துன்பங்கள், கவலைகள், ஏழ்மை உள்ளிட்டவற்றை ஊதி அனைத்து மங்களங்களும் நிறையும்படி அருள்புரிவான்.

*கண்ணன் அவதரித்த ஆவணி ரோகிணி தேய்பிறை அஷ்டமி நாளுக்கு ஜயந்தி என்று பெயர். கண்ணன் அவதரித்ததால் அந்த ஜயந்தி எனும் நாள் சீர்மை பெற்று ஸ்ரீஜயந்தி என்றானது. மற்றவர்களின் பிறந்த நாளையும் நாம் இன்று ஜயந்தி என்று குறிப்பிட்டாலும், உண்மையில் ஆவணி ரோகிணி தேய்பிறை அஷ்டமி திருநாள் மட்டும் தான் ஜயந்தி என்று பெயர் பெற்ற நாளாகும்.

Related Stories: