கிருஷ்ணர் காலின் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்?

ஆலிலையில் ஸ்ரீகிருஷ்ணர்

தாவரங்களில் ஆல மரம் சிறந்ததாக காணப்படுகிறது. இதனை வட விருட்சம் என்று அழைப்பார்கள். ஆலமரத்தின் கீழே தட்சிணா மூர்த்தி அமர்ந்து ஞானத்தை போதிக்கிறார். ஆல இலைக்கு ஜீவ சாரம் மிகவும் அதிகம். அதனால்தான் அது எத்தனை வாடினாலும் மற்ற இலைகள் மாதிரி வற்றிப்போய் நொறுங்குவதில்லை!  தண்ணீர் கொஞ்சம் தெளித்தால் போதும், மறுபடியும் பசுமை பெற்று விடும். ஸ்ரீகிருஷ்ணர் ஆலிலைமேல் பாலகிருஷ்ணனாக காட்சிதந்து, மார்க்கண்டேயருக்கு ஞானத்தை அளித்தார். சம்சார சாகரத்தில் அலையாய் அலைகின்ற நமக்கு ஆல் இலையை படகாகக்காட்டி நிலையான நித்திய தத்துவத்தை உணர்த்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர்!

கிருஷ்ணர் காலின் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்?

மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டிருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, “நான்கொடுக்கிறேன் மாந்தாதா'' என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின்போது வாயில் விரல் இட்டுக்கொள்கிறது.

ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை ‘அமிர்த வபு'  என்கிறது. இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில்போட்டு கொண்டிருக்கிறார்.

இடது கட்டை விரல்தான் அவர்வாயில் போட்டிருப்பது. நடராஜனது தூக்கிய திருவடியும் இடதுதான்! சந்திரன் அமிர்தத்தை பெருக்குகிறவன். யோக சாதனை செய்வதன்மூலம் உடலின் இடது பாகத்தில் உள்ள சந்திரநாடியில் அமிர்தம் பெருகும். அந்த சந்திர நாடியில் வெளிப்படும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் இடது கால்கட்டை விரலை ருசிக்கிறார்.

- சு.இளம் கலைமாறன்

Related Stories: