×

கண்ணா கருமை நிறக்கண்ணா..

புண்டலீகன் எனும் பக்தன் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தபோது பகவான் கண்ணன் வாசலில் வந்து புண்டலீகனை அழைத்தான். அப்போது புண்டலீகன் ஒரு செங்கல்லைப் புரட்டிப்போட்டு, ‘அதன் மீது நின்று கொண்டிரு. பெற்றோர் பணிவிடை முடித்து விட்டு வருகிறேன்’ என்று சொன்னானாம். பண்டரிபுரத்தில் செங்கல்லின் மீது நின்ற அந்தக் கண்ணனின் திருவுருவையே தென்னாங்கூர் ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயிலில் தரிசிக்கலாம்.ஞானானந்த சுவாமிகளின் பிரதான சீடராகக் கருதப்படும் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது தென்னாங்கூர் ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் கோயில்.

ஆலய முகப்பு, தென்னிந்திய முறைப்படி ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. மூலமூர்த்தி, பண்டரி புரத்தில் உள்ளது போலவே தோற்றமளிக்கிறார். இவர் கருவறை விமானம், பூரி ஜகன்னாதர் ஆலயத்தைப் போன்று வட இந்திய முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது. கருவறையில் பாண்டுரங்கன் 10 1/2 அடி உயரத்துடனும், ருக்மாயி 8 1/2 அடி உயரத்துடனும் கம்பீரமாக அதியற்புத வடிவத்துடன் அருள்கின்றனர். விட்டலனின் நினைப்பில் குடும்பத்தை மறந்தார் நாமதேவர். ருக்மாயியிடம் இது குறித்து புகார் செய்ய நாமதேவரின் மனைவி கிளம்பினாள். அதற்குள் ருக்மாயியே வீட்டிற்கு வந்து என் விட்டலன் நாமதேவரின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் புத்தி மதி கூறக்கூடாதா என்று கேட்டாளாம். அந்த அளவு தாசனுக்கும் தாசனாகி விளங்குகிறார்கள் இந்த பாண்டுரங்கனும், ருக்மாயியும். வியாழக்கிழமை நிஜ பாத தரிசனம், வெள்ளிக்கிழமை வெள்ளிக்கவசம், ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானிய உடையலங்காரத்திலும் தரிசனம் தருகின்றனர்.

உற்சவர், வரதராஜப் பெருமாள் எனும் திருநாமம் கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியான உபயநாச்சிமார்களோடு அருள்கிறார்.
வட்டிக்கடை வைத்திருந்த சீணப்பநாயக்கரை ஆட்கொண்டு புரந்தரதாசராக மாற்றினான் இந்த பாண்டுரங்க விட்டலன்.மதுரை மீனாட்சியின் பிறந்த இடமாக தென்னாங்கூர் என நம்பப்படுவதால் இத்தலத்தை தட்சிணஹாலாஸ்யம் என்றும் அழைக்கின்றனர். தமிழ்ப் புத்தாண்டு அன்று குருவாயூரப் பனின் திருக்கோலத்தில் பாண்டுரங்கன் தரிசனமளிக்கிறார்.

சனிக்கிழமைகளில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் வெங்கடாஜலபதி - அலர்மேல் மங்கையுமாக திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்கள். ஆலயக் கதவுகள் அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டவை. கருவறையில் இருக்கும் வெள்ளிக் கதவு மட்டும் பிற கோயிலைவிட பெரிதானது. பாண்டுரங்கனின் சந்நதியில் அர்ச்சனை செய்யும் பட்டர், கார்ட்லெஸ் மைக் மூலமாக ஆலயத்தைப் பற்றி விவரிப்பது இனிமையாகவும், புதுமையாகவும் உள்ளது.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ளது இத்தலம். காஞ்சிபுரத்திலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் உத்திரமேரூரிலிருந்து 22 கி.மீ.தொலைவிலும் உள்ளது.
- கிருஷ்ணஜா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?