×

இப்படி ஓர் ஆட்சியாளர்..!

உமய்யா வம்ச ஆட்சியாளர்களில் ஏழாவது ஆட்சியாளராகப் பதவிக்கு வந்தவர் உமர் இப்னு அப்துல் அஸீஸ். இவர் முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டு எளிமையாகவும் நேர்மையாகவும் ஆட்சி செலுத்தினார்.தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளில் ஈடுபாடும் இறையச்சமும் நிறைந்தவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே ஆடம்பரமும் சொகுசுகளும் நிறைந்த ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றை அவர் அடியோடு தவிர்த்தார்.

தம்மிடமிருந்த அனைத்துச் சொத்துகளையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய மனைவி பாத்திமாவும் ஓர் இளவரசிதான். அவருடைய தந்தை அவருக்கு விலைமதிக்க முடியாத ஒரு முத்தை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.உமர் இப்னு அப்துல் அஸீஸ் தம் மனைவியிடம், “இந்த முத்து உன் தந்தை தந்த அன்பளிப்புதான் என்றாலும் இது மக்களின் பணத்திலிருந்து பெறப்பட்டது. ஆகவே இந்த முத்தை உடனே அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிடு. அதைச்செய்ய உனக்கு விருப்பம் இல்லையெனில் நாம் இப்போதே பிரிந்து
விடுவோம்” என்றார்.

பாத்திமாவும் கணவனுக்கு இணையாக மார்க்கப் பற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடும் நிறைந்தவர். ஆகவே, தயக்கமின்றிக் கூறினார். “உங்களுடைய அன்புக்காக இதைப்போல் எத்தனை விலை உயர்ந்த முத்துக்களையும் இழக்க நான் தயாராக இருக்கிறேன்” அந்த முத்து அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இதர உறவினர்களுக்கு உமரின் இந்த எளிமையும், நேர்மையும் எரிச்சலைத் தந்தன. அவர்கள் வழக்கம்போல் தங்கள் ஆடம்பர வாழ்வில்தான் மூழ்கியிருந்தனர். அவர்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தரவேண்டும் என்று நினைத்தார், உமர் அவர்கள்.

ஒருநாள் தம் ராஜகுடும்பத்து உறவினர்களை எல்லாம் விருந்துக்கு அழைத்தார். எல்லோரும் விருந்துண்ண வந்தனர். விருந்தினர்களிடம் உமர் பேசிக்கொண்டிருந்தாரே தவிர விருந்து ஏற்பாடு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. விருந்தினர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சிலர் பசியால் துவண்டனர்.உமர் பணியாளை அழைத்து உணவு பரிமாறும்படிச் சொன்னார். எளிமையான சில ரொட்டித்துண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட அந்த ரொட்டித் துண்டுகளையே அமுதமாக நினைத்துச் சாப்பிட்டனர். அனைவரும் உண்டு முடித்ததும் உமர் மீண்டும் பணியாளரை அழைத்து ஏதோ கூறினார்.

என்ன வியப்பு! பளபளக்கும் விரிப்பு விரிக்கப்பட்டு, இப்போது விதவிதமான உணவுகளும் பழங்களும் இனிப்புகளும் பானங்களும் பரிமாறப்பட்டன. ஆனால் எல்லாருக்கும் பசி அடங்கிவிட்டதால் அந்த ஆடம்பர விருந்தை யாரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
உமர் இப்னு அப்துல் அஸீஸ், “பசியைப் போக்க எளிமையான உணவே போதும் என்றிருக்க, ஏன் மக்களின் பணத்திலிருந்து ஆடம்பர உணவுகளைச் சாப்பிட்டு நரகத்திற்குச் செல்கிறீர்கள்?” என்று தம் உறவினர்களுக்கு உணர்த்தினார். இறைவனையும் மறுமையையும் முன்வைத்து இவர் நடத்திய நல்லாட்சியில் இறைச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜகாத் எனும் பொருளாதாரத் திட்டம் குறைவறச் செயல்படுத்தப்பட்டதால் தான-தர்மம் வாங்க ஏழைகளே இல்லை எனும் நிலை உருவாயிற்று.அரசு அதிகாரிகள் கையில் தங்கத்தையும் வெள்ளியையும் வைத்துக் கொண்டு ஏழைகளைத் தேடி அலைந்ததாக வரலாறு பதிவு செய்துள்ளது.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஜகாத் வழங்குவார்கள். மேலும் நன்மை புரியுமாறு ஏவுவார்கள்; தீமையிலிருந்து தடுப்பார்கள். எல்லா விவகாரங்களின் முடிவும் இறைவனின் கையில்உள்ளது.”(திருக்குர்ஆன் 22:41)

Tags :
× RELATED காமதகனமூர்த்தி