×

ஆவியின் கனி -7 விசுவாசம்

தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்
களுக்குப் ்பலன் அளிக்கிறவரென்றும்
விசுவாசிக்க வேண்டும்.  - (எபிரெயர் 11: 6)

ஜாண்வெஸ்லி என்ற இறைமனிதர் இங்கிலாந்து தேசத்தில் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அவ்விடுதியில் தங்கியிருந்த குழந்தைகளுக்கு ஒருநாள் மதிய உணவு வழங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. ஜாண்வெஸ்லி ஒரு சிறந்த ஜெப வீரர், பக்தி நிறைந்தவரும்கூட. எனவே அவ்விடுதி பிள்ளைகளை ஒருங்கிணைத்து விசுவாசத்தோடு ஜெபித்தார். ஜெபத்தைக் கேட்ட ஆண்டவர் அற்புதம் செய்தார். எப்படியென்றால், பக்கத்து ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்சென்ற வாகனம் பழுதடைந்து விடுதி முன்பு நின்றுவிட்டது. வாகனத்தை பழுதுபார்த்துச் செல்வதற்குள் உணவுப்பொருள் கெட்டுப்போகும். எனவே, உணவுப்பொருளை பக்கத்திலிருக்கின்ற ஏதேனும் விடுதிக்குக் கொடுத்துவிடலாம் என்று, உணவு கொண்டுவந்தவர்கள் முடிவெடுத்தனர். அருகில் ஏதேனும் விடுதி இருக்கின்றதா? என்று விசாரித்தார்கள்.

ஜாண்வெஸ்லி நடத்தி வந்த விடுதி இருப்பதைக் கேள்விப்பட்டு உணவுப் பொருட்களையெல்லாம் அவ்விடுதிக்கே கொடுத்துவிட்டார்கள். அவ்விடுதியில் இருந்த குழந்தைகள் அனைவரும்  வயிராற உணவு உட்கொண்டு தங்களது தேவைகளைச் சந்தித்த ஆண்டவரைத் துதித்தார்கள். விசுவாசம் என்றால், உறுதியான நம்பிக்கை எனப்பொருளாகும். இறைவன் மீது நாம் உறுதியான நம்பிக்கைக் கொண்டு வேண்டுதல் செய்தால், அவர் நிச்சயம் நமக்குப் பதிலளிப்பார்.திருமறையில் அன்னாள் என்ற ஒரு பெண்ணைப்பற்றி கூறப்பட்டுள்ளது. குழந்தைச் செல்வம் இல்லாத காரணத்தினால் மிகவும் மனம் சோர்ந்து போயிருந்த அப்பெண், ஒருநாள் தேவாலயத்திற்குச்சென்று மிகுந்த பாரத்தோடும், விசுவாசத்தோடும் ஆண்டவரிடத்தில் பிரார்த்தனை செய்தாள். அவளது உறுதியான நம்பிக்கையைக் கண்ட ஆண்டவர் மனமிரங்கி அவளை ஆசீர்வதித்தார். அவள் குழந்தைப்பேறு அடைந்து சாமுவேல் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

ஆண்டவர் இயேசுவும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த நாட்களில், பல்வேறு பிரச்னைகளோடு தம்மிடத்தில் வந்த அநேகரை விடுதலையாக்கினார். அவ்வேளைகளிலெல்லாம், அவர் தம்மிடத்தில் விடுதலை வேண்டி வந்தவர்களிடத்தில் கேட்ட முக்கியமான கேள்வி, இந்த அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்பதே அக்கேள்வியாகும். அவ்வாறு விசுவாசத்துடன் தம்மிடத்தில் வந்த அனைவரையும் சுகப்படுத்தினார். மேலும், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது - (மாற்கு 5: 34) எனக்கூறி அற்புதம் பெற்றுக்கொண்டவர்களை ஊக்குவிக்கவும் செய்தார்.அன்புக்குரியவர்களே! நீங்களும் உங்களது வாழ்வில் பல்வேறு பிரச்னைகளோடும், தேவைகளோடும் வாழ்ந்து வருகிறீர்களா? கவலைப்படாதிருங்கள், ஆண்டவர் மீது உறுதியான நம்பிக்கை வைத்து அவரிடத்தில் வேண்டுதல் செய்யுங்கள்.

நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவை களையெல்லாம் பெறுவீர்கள்.-(மத்தேயு 21:22) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். ஆகவே உங்களது வாழ்வில், கடன் பிரச்னையோ? வியாதியோ? எந்தவொரு பிரச்னைகள் இருந்தாலும், அவைகளுக்காக விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். நிச்சயமாக அவர் உங்கள் வேண்டுதலைக் கேட்டு பதில் தருவார். உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பார்.
- Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம், பேராயர்,
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம்.

Tags :
× RELATED 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை: இளைஞர் கைது