கண்ணன் புகழ் பாடும் சிலப்பதிகாரம்

பிழைப்பைத் தேடி கோவலனும் கண்ணகியும் பூம்புகாரை விட்டு மதுரைக்கு வருகிறார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்ற சமண துறவியின் நட்பு ஏற்படுகிறது. மூவரும் சேர்ந்து மதுரையை அடை கிறார்கள். மதுரையை அடைந்த பின்பு, கவுந்தி அடிகள் அவர்களை “மாதிரி” என்ற ஆயர் குல முதுமகளின் அரவணைப்பில் இருக்க பணிக்கிறார். கோவலனும் கண்ணகியும் ஆயர் சேரிக்கு செல்கிறார்கள். கோவலன் கண்ணகியின் ஒற்றைக் கால் சிலம்பை எடுத்துக் கொண்டு, விற்று வர கடை வீதிக்குச் செல்கிறான்.

கண்ணகி ஆயர் சேரியில் அவனுக்காக காத்திருக்கிறாள். அந்த சமயம் பல துர் சகுனங்கள் ஆயர் சேரியில் ஏற்படுகிறது.  அதை எல்லாம் கண்ட ஆயர் முது மகளான,  மாதிரி கலக்கம் அடைகிறாள். என்ன செய்வது என்று யோசித்த அவள், ஆயர்குல தெய்வமான கண்ணனை சரணடைய முடிவு செய்கிறாள். எப்படி சரணடைவது என்று யோசித்த அவளுக்கு, அன்று வடமதுரையில் கோபிகைகள் கண்ணனை எண்ணி ஆடிய “ குரவை கூத்து” நினைவுக்கு வருகிறது.

தனித்த கானகத்தில் கோபிகைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். திடீரென்று கோபிகைகளின் மனதில் கண்ணன் தன்னோடு விளையாடுவதை எண்ணி கர்வம் ஏற்படவே,  சட்டென்று அங்கிருந்து மறைந்து போகிறான். கண்ணனை எண்ணி பிரிவாற்றாமையால் கோபிகைகள் வருந்துகிறார்கள். வருத்தம் தாங்காமல்,  தங்களுள் ஒருத்தியையே கண்ணனாக பாவித்து அவன் செய்த லீலைகளை எல்லாம் நடித்துக் காட்டி ஒரு நடனம் ஆடினார்கள். இப்படி பக்திப் பெருக்கால் கண்ணனை நினைத்து நினைத்து கண்ணனாகவே மாறிவிட்ட கோபிகைகளை விட சிறந்த கிருஷ்ண பக்தர் இல்லை என்று பாகவதம் சொன்ன சுக பிரம்ம மகரிஷியே சொக்கிப் போகிறார்.

இவை எல்லாம்  அந்த மாதிரிக்கு நினைவுக்கு வருகிறது. உடன் வட மதுரையில் கோபிகைகள் ஆடிய குரவை கூத்தை இங்கே தென் மதுரையில் தமிழகத்து கோபிகைகளை கொண்டு நடத்த தீர்மானித்தாள். வட மதுரைக்கும் தென் மதுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வட மதுரையில் அந்த மாயவன் லீலை புரிந்தான் என்றால் இங்கே தென் மதுரையில் அவனது தங்கை எங்கள் அங்கையற்கண்ணி மீனாக்ஷி திருவிளையாடல் புரிந்திருக்கிறாள். அதுமட்டுமில்லை, மாலவனின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் தோன்றியதும் மதுரை கூடல் அழகர் கோயிலில்தானே. எப்படிப் பார்த்தாலும் அதனால் வட மதுரையை விட தென் மதுரையே சிறந்தது என்று அவளுக்குத் தோன்றியது.

ஆகவே நொடி கூட தாமதிக்காமல் தமிழகத்து கோபிகைகளை ( ஆயர் குல பெண்களை) ஒன்று திரட்டினாள். கூடிய தமிழகத்து கோபிகைகள் எல்லாம் வட்டம் கட்டி நின்று கொண்டார்கள். ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டார்கள். அமுதென்று பெயர் கொண்ட தமிழில் இசை என்ற அமுதையும் சேர்த்திழைத்து, தேன் சிந்தும் தங்கள் இதழ்களால் அமுத கானம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அவர்களது அமுத கானத்தின் கருத்தாய் அமைத்தது கிருஷ்ண லீலை என்ற அமுதமே என்பதை சொல்லவும் வேண்டுமா? தங்கள் குல தெய்வமான ஜெகன்மோகன கோபாலனை எண்ணிய படி பக்தியில் உருகிக் கொண்டே பாடினார்கள் தமிழகத்து ஆய்ச்சிமார்கள். அவர்களது ஞான தமிழார்த்த பாடலுக்கு அவர்களது பொன்னார்த்த கால் சிலம்போசையும் கை வளையோசையும் சுருதி சேர்த்தது. ஆநிரைகளின் கழுத்து மணி ஓசை தாளம் போட்டது...... இனி நாமும் அவர்களது தேன் அமுத கானத்தை ரசிப்போமா?

“பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்

ஈங்கு நம் ஆனுள் வரு மேல் அவன் வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி”

(சிலம்பு - ஆச்சி குரவை படலம்)

பாற்கடலை முன்பு கடைந்த இறைவன், பசுக்கூட்டமுள்ள இந்த இடத்திற்கு வந்தால், அவனை அந்த புல்லாங்குழலின் மோகன கானத்தை இசைக்கச் சொல்லி கேட்போம் என்று தமிழகத்து ஆயர்குல பெண்கள் பாடுகிறார்கள்.தாமோதரனின் வாய் அமுதை பருக அந்த புல்லாங்குழல் என்ன தவம் செய்ததோ என்று எண்ணி கோபிகைகள் பொறாமை கொண்டதாக பாவதம் கூறும் (கிம் அசரத் அயம் குசலம் ஸ்ம வேனுர் தாமோதர அதர சுதாம் அபி) அப்படிப் பட்ட அந்த புல்லாங்குழலின் இசையை தமிழக கோபிகைகள் முதலில் கேட்க ஆசை கொள்வதில் என்ன வியப்பு.

அந்த மோகன இசையில் மான் மயில் குயில் போன்ற விலங்கினமே மயங்கும் போது, ஆறறிவு கொண்ட மனித இனமான தமிழகத்து ஆய்ச்சிகள் அதன் ஓங்கார இசையை கேட்க ஆசை கொள்வதில் ஒரு வியப்பும் இல்லை.“தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபாலசுதற்கு நேச மாறாத ...... மருகோனே” என்று முருக பக்தரான அருணகிரி நாதர் கூட அந்த இசைக்கு மயங்கும் போது நாம் எல்லாம் எம்மாத்திரம்.

“வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி

கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே

கலக்கியகை யசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.”

(சிலம்பு - ஆச்சி குரவை படலம்)

“முன்பொருநாள் வாசுகியை கயிறாகக் கொண்டு பாற்கடலை கடைந்தாய். ஆனால் கண்ணனாக அவதரித்த போது யசோதை உரலோடு உன்னை இணைத்துக் கட்டிய போது ஒன்றுமே சொல்லாமல் அவள் பக்திக்கு கட்டுப்பட்டாய். உன்னுடைய இந்த செயல் எங்களை மயக்குகிறது” என்று தமிழகத்து கோபிகைகள் நொந்துகொள்கிறார்கள்.

நம்மாழ்வார், திருவாய்மொழி மூன்றாம் பத்து முதல் பாசுரத்தை பாடும் போதும் கண்ணனின் இதே லீலையை தான் நினைத்தார். நினைத்தவர் உடன் மயங்கி விட்டாராம். பிறகு ஆறு மாதங்களுக்கு பின்பு தான் அவருக்கு சுய நினைவு வந்ததாம். சுய நினைவு வந்ததும் ஆழ்வாரை அனைவரும் “ ஏன் மயங்கினீர்கள்?” என்று வினவ அவர் பின்வரும் பதிலை பகர்ந்தார்.

“வெண்ணெய் களவினில் உரலிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைத்து இருந்து ஏங்கிய எளிவே”

அதாவது, உலகிற்கே தலைவனானாலும் வெண்ணெய் திருட்டுக்காக தாயிடம் அகப் பட்டவனாய், அவளுடைய பக்திக்கு உட்பட்டு, உரலோடு உரலாய் கயிறோடு கயிறாய் ஏங்கி நின்ற அவனுடைய எளிமை, அதாவது நீர்மை என்னை மயக்கி விட்டது என்றார். ஆழ்வாரின் உயர்ந்த பக்தி ரசம் சமண துறவியான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் மணப்பது வியப்பு தான் இல்லையா?

அது மாத்திரமல்ல, பாற்கடலை அவன் கடைந்த திறம் ஆழ்வார்களை மயக்கியது போல முருக பக்தரான அருணகிரிநாதரையும் மயக்கியிருக்கிறது.

“பனகந்துயில் கின்றதி றம்புனை

கடல்முன்புக டைந்தப ரம்பரர்

படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே”

அதாவது, பாற்கடலை முன்பு (கூர்மாவ

தாரத்தில்) தாமே கடைந்த பெருமானும், வானில்படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே என்று அவர் திருமாலை முன்னிட்டு கொண்டு முருகனை அழைக்கிறார்.இதில் கடல் முன்பு கடைந்த பரம்பரர் என்ற திருப்புகழ் வாக்கையும், “கடல் வயிறு கலக்கினையே” என்ற சிலம்பின் வாக்கும் ஒன்றே போல் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

“அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழு தேத்த

உறு பசி ஒன்று இன்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினால் உறி வெண்ணெய் உண்டாவாய்

வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே”

(சிலம்பு - ஆச்சி குரவை படலம்)

“கண்ணா! நீ தான் உயர்ந்த தெய்வம் என்று உன்னை தேவர்கள் போற்றுகிறார்கள். நீயோ ஊழிக் காலத்தில் உலகையே விழுங்கிவிடும் முதல்வன். ஆனால் நீ ஒரு பாலகனைப் போல, எங்கள் ஆயர் சேரியில் வெண்ணெய் திருடி ஆடிய நாடகம் எங்களை மயக்குகிறது” என்று ஆய்ச்சியர்கள் மயங்குகிறார்கள்.

முன்பு ஒரு நாள் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆலமுண்ட நீல கண்டனிடம், சனகாதி முனிவர்கள் வேதத்தின் பொருள் என்ன என்று வினவினார்கள். உடன் ஈசன் தக்ஷிணாமூர்த்தியாக அவர்களுக்கு மவுன உபதேசம் செய்தார். அவர் செய்த உபதேசம் “ நாராயணன் திருவடியைப் பற்று “ என்பது தான் என்று பொய்கை ஆழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் சொல்கிறார்கள்.

“ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வருக்கு...... ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு” என்ற நான்முகன் திருவந்தாதியின் வரிகள், தேவாதி தேவனான மகாதேவனே போற்றும், இயல்பை உடையவன் திருமால் என்று சொல்கிறது.இந்த கருத்து “அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழு தேத்த” என்ற சிலம்பின் வரியோடு ஒத்துப் போவதை கவனிக்க வேண்டும்.

அது போலவே “மூவுலகும் உண்டு உமிழ்ந்த முதல்வா! நின் நாமம் கற்ற ஆவலில் புலமை கண்டாய் அரங்க மா நகருளானே” என்ற

தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் திருமாலை வரிகள்'' உலகடைய உண்டனையேஉண்டவாய் களவினால்” என்ற சிலம்பின் வரியொடு ஒத்து இருக்கிறது.

“வண் துழாய் மாலையாய்” என்ற சிலம்பின் வரிகளை படிக்கும் போது தேர்ந்த விஷ்ணு பக்தர்களுக்கு “ நாற்றத் துழாய் முடி நாராயணன்” என்ற ஆண்டாளின் வரிகள் தான் நினைவுக்கு வரும்.

“திரண்ட அமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல

இரண்டடியால் மூவுலகும் இருள் தீர நடந்தனை

நடந்த அடி பஞ்சவர்க்கு தூதாக நடந்த

அடி மடங்கலாய்! மரட்டாய்! மாயமோ?

மருட்கைத்தே!”

ஓங்கி உலகளந்த உத்தமனை, அம்பர மூடர்த்து ஓங்கி உலகளந்தானை,

“அன்று இவ்வுலகம் அழந்தாய் அடி போற்றி!”

என்று ஆச்சியர்கள் எவ்வளவு அழகாக வணங்குகிறார்கள் பாருங்கள்.

ஆடி, அகம் கரைந்து, இசை பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நரசிங்கா! என்று அற்புதமாக நம்மாழ்வாரைப் போலவே நரசிம்மனை விளிக்கிறார்கள் (மடங்கலாய் என்றால் நரசிம்மா! என்று பொருள்)

இன்னும் கண்ணனின் பல லீலைகளை

பாடுகிறார்கள் தமிழகத்து கோபிகைகள்.  

அவர்கள் கண்ணனைப் பாடிப் பரவியதை இளங்கோவடிகள் சொல்லும் அழகே அழகு. அழகின் உச்சமாக விளங்கும் இரண்டு வரிகளை பார்ப்போமா?

“திருமால் சீர் கேளாத செவி என்ன செவியோ!”(சிலம்பு - ஆய்ச்சியர் கூத்து படலம்) என்னும் இந்த தென் மதுரை கோபிகைகளின் கூற்றைக் கேட்கும் போது, பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்ற அப்பர் சுவாமிகளின் பாடல் நினைவுக்கு வருகிறது இல்லையா? கூடவே

“கண்ணன் முகம் மறந்து போனால் இனி

கண்கள் இருந்து பயன் என்ன!” என்ற பாரதியின்,

வரிகளும் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.

“பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே! நாராயணா! என்னாத  நா என்ன நாவே!”

(சிலம்பு - ஆய்ச்சியர் கூத்து படலம்)

என்ற வரிகளை படிக்கும் போது “கண்ணன் கழலை நண்ணும் மணமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற நம்மாழ்வாரின் மெய்யடிகள் நினைவுக்கு வருகிறது.சிலப்பதிகாரத்தை படிக்கும் போது, கிருஷ்ண பக்தர்களுக்கு இன்னும் பல மெய் சிலிர்க்கும் இடங்கள் இருக்கிறது. உதாரணத்திற்கு அரங்கநாதனைப் பற்றியும், வட வெங்கட மலையில் நின்றானையும் இளங்கோவடிகள் பாடியதை கேட்டால் கல்லும் உருகி விடும்.

“ செங்கண் நெடியோன், வேங்கடத்தில் நின்ற வண்ணத்தை” இளங்கோவடிகள் தொழுததை போல் நாமும் தொழுவோம்.

Related Stories:

>