ஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்

நற்குணம் ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் விளங்கும் (எபே.5.9)எந்தவொரு மனிதர் மீதும் பொறாமையோ, கோபமோ கொள்ளாமல், அனைவரையும் சமமாக நேசித்து, துன்புறுவோருக்கு உதவி செய்து, வாழ்வில் உயர்வு பெறுவோரை மனதார பாராட்டி, அன்போடும் பண்போடும் வாழ்வதே நற்குணமாகும்.19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த அமைச்சர் சர். ரொனால்ப் சர்ச்சில் என்பவர் ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்குபெறும்படி ஸ்காட்லாண்டு தேசத்திற்கு பயணமானார். ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது, ரயில் வண்டிய விட்டு இறங்கி ஒரு குதிரை வண்டியில் பயணித்தார். மழைக்காலமாக இருந்தபடியால் குதிரை வண்டி சகதியில் சிக்கிக் கொண்டது. அவ்வேளையில், பக்கத்துப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த வாலிபன் ஒருவன், தனது குதிரை வண்டியைக் கொண்டுவந்து, இரண்டு குதிரைகளின்  உதவியுடன் அவரை சகதியில் இருந்து வெளியில் கொண்டு வந்தான். அதற்கு நன்றி கூறும் விதமாக அமைச்சர் அவனுக்கு சில வெகுமதிகளைக் கொடுத்தார்.

ஆனால், அவ்வாலிபன் அவரிடமிருந்து எந்த சன்மானமும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். எனினும், அவர் அவ்வாலிபனைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவன் தன்னுடைய படிப்பிற்காக அந்தப் பண்ணையில் வேலை செய்து வருவதாகவும், மீண்டும் தன்னுடைய படிப்பைத் தொடர விரும்புவதாகவும் கூறினான். அப்பொழுது அந்த அமைச்சர், தான் யார் என்பதை அவ்வாலிபனுக்கு எடுத்துக்கூறி,  அவனை ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து, அவன் படிப்பிற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அந்த வாலிபன்தான் பெனிசிலின்  என்ற  மருந்தைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் பிளெமிங் என்பவர் ஆவார். சர். ரொனால்ப் சர்ச்சிலின் நற்குணச்  செயல்கள் நிமித்தமாக ஆண்டவர் அவரது சந்ததியை ஆசீர்வதித்தார்.

ஆம்! அவரது மகன்தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சர். வின்ஸ்டன் சர்ச்சில் ஆவார்.மேற்கண்ட சம்பவத்தில் தங்களது நற்குணத்தை  வெளிப்படுத்திய இரண்டு நபர்களைப் பற்றியும், தங்கள் நற்குணங்களுக்கு தக்கதாக அவர்கள் பெற்றுக்கொண்ட பலன்களைக் குறித்தும் காண்கிறோம்.துன்புறுவோருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, பிறர் தங்கள் வாழ்வில் உயர்வடையும்போது, அவர்களை மனதார பாராட்டுவதும் நற்குணமாகும். இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக யோனத்தான் என்ற இறைமனிதரைக் குறிப்பிடலாம். அவரது தந்தை சவுல் அரசர் இஸ்ரவேல் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார். தந்தைக்குப்பின் அவர்தான் அரசராகப் பொறுப்பேற்க வேண்டும். எனினும், ஈசாயின் குமாரனாகிய தாவீதுதான்  அரசராக வேண்டும் என்பதே இறை விருப்பம் என்பதை அறிந்த அவர் இறை விருப்பத்தை மனதில் ஏற்றுக் கொண்டார். மேலும், தாவீதை நோக்கி, நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர். அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன் (1 சாமுவேல் 23: 17) என்று வாழ்த்தி தனது நல்ல குணத்தை வெளிப்படுத்தினார்.

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? (நீதி. 31.10) என்ற திருமறை வசனத்திற்கேற்ப ஒவ்வொரு பெண்களும் நற்குணசாலிகளாகவும், ஆண்கள் அனைவரும் நற்குணாளர்களாகவும் வாழ அழைக்கப்படுகிறோம்.ஆண்டவர் இயேசுவும், வியாதியஸ்தர்கள், உடல் ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியோரின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு மறுவாழ்வு தந்தார். நாத்தான்வேல் எனும் இறைமனிதரின் சிறந்த குணங்களை கண்ட அவர், இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்( யோவான் 1:47) என்று மனதாரப் பாராட்டினார்.

அன்புக்குரியவர்களே ! நாமும், இறைமகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, துன்புறுவோரின் துயர் துடைத்து, உயர்வு அடைவோரை உளமாற வாழ்த்தி நற்குணங்களை வெளிப்படுத்துவோமாக.

Rt. Rev.Dr.S.E.C.

தேவசகாயம் பேராயர், தூத்துக்குடி

நாசரேத் திருமண்டலம்.

Related Stories:

>