×

கல்வியின் பயன் என்ன?

“இறைவா, பயனுள்ள கல்வியை அருள்வாயாக” என்பது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஓர் அழகிய இறைஞ்சுதல்.பயனுள்ள கல்வி என்றால் என்ன?இது இன்று நேற்றல்ல, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக எழுப்பப்படும் கேள்வி. ஐயன் வள்ளுவரும் இந்த வினாவை எழுப்பி விடையும் சொல்லியுள்ளார்.

‘கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்’

இறைவனுக்கு அடிபணிந்து வாழும் பண்பைக் கற்றுத்தராத கல்வி பயனற்றதே ஆகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரைவிலக்கணம் வகுத்துவிட்டார் வள்ளுவர். கல்வியின் பயன் என்ன என்பதை இலங்கையைச் சேர்ந்த தமிழ்அறிஞர் ஜெயராஜ் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார்.

கல்வியின் பயன் என்ன?

“கல்வியின் பயன் அறிவு. கற்றகல்வி அறிவாக மாற வேண்டும். அறிவாக மாறாத கல்வியால் பயன் இல்லை.

சரி, அறிவின் பயன் என்ன?
அறிவு ஒழுக்கமாக மாற வேண்டும். ஒழுக்கமாக மாறாத அறிவினால் எந்தப்பயனும் இல்லை. ஒருவரிடம் கல்வியும் அறிவும் இருக்கின்றன. ஆனால் அவரிடம் ஒழுக்கம் இல்லை எனில் எந்தப்பயனும் இல்லை.

சரி, ஒழுக்கத்தின் பயன் என்ன?
ஒழுக்கம் அன்பாக மாறவேண்டும். ஒருவரிடம் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவை உள்ளன. ஆனால் அன்பு இல்லை எனில் எந்தப்பயனும் இல்லை.

“சரி, அன்பின் பயன் என்ன?
அன்பு அருளாக மாறவேண்டும்.  அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு எனில், தம்மைச் சார்ந்தவர்மீது மட்டும் காட்டப்படுவது அன்பு. சார்ந்தவர், சாராதவர் என அனைவர் மீதும் காட்டப்படுவது அருள்.

சரி, அருளின் பயன் என்ன?
அருள் துறவாக மாறவேண்டும். துறவு என்பது துறவறம் அல்ல. உலகில் வாழ்ந்தாலும் உலகப்பற்றற்று வாழ்வது. பற்றற்றான் பற்றைப் பற்றுவது.

சரி, துறவின் பயன் என்ன? வீடு பேறு சொர்க்கத்தை அடைதல்.


இப்போது தொகுத்துப் பாருங்கள்.
கல்வியின் பயன் அறிவு
அறிவின் பயன் ஒழுக்கம்
ஒழுக்கத்தின் பயன் அன்பு
அன்பின் பயன்  அருள்
அருளின் பயன் துறவு
துறவின் பயன் வீடுபேறு, சொர்க்கம்.”
“இறைவா,  பயனுள்ள கல்வியைத்தா” எனும் நபிமொழியின் பொருள் இப்போது நமக்கு எளிதாகப் புரிந்திருக்கும்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்