×

ஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்

நன்மை  செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை ( நீதி .19 :22)
தமிழகத்தில் முன்னொரு காலத்தில் ஆபிரகாம் பண்டிதர் என்னும் இறையடியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கடவுள் அவரை ஆசீர்வதித்ததால் மிகுந்த செல்வந்தர் ஆனார். ஒருமுறை அவரது மகனுடைய திருமணத்தின் போது அவர் ஊக்கமாய் ஜெபித்து, கடவுளை திருமண விருந்திற்கு அழைத்தார். திருமண தினத்தன்று விருந்து நடக்கும்போது ஆண்டவருக்காக ஒரு வாழை இலையைப் விரித்து, நிச்சயமாக ஆண்டவர் வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். அந்த இடத்தில் யாரையும் உட்காரவிடக்கூடாது என்று வேலைக்காரருக்கு தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். திருமண விருந்து முடிந்தது. அவர் எதிர் பார்த்திருந்தபடி கடவுள் வராததால், பண்டிதர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

அதன்பின்பு, ஏழைகள் விருந்துண்ணும் நேரம் வந்தது. கனத்திற்குரிய அந்த இடத்தில் யாரும் அமராதபடி வேலைக்காரர் இன்னும் பலரை விரட்டிக் கொண்டிருந்தனர். பண்டிதரும், கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்த ஏழைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேற்சட்டையில்லாதவனும், உடலெல்லாம் அழுக்கு படிந்தவனுமான ஒரு சிறுவன் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்தவனாய், கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு, வேலைக்காரர் அசந்த ஒரு விநாடியில் கடவுளுக்காக விரிக்கப்பட்ட அந்த இலை முன் உட்கார்ந்துவிட்டான். கோபமடைந்த வேலைக்காரர் அவனது ஒரு கையைப் பிடித்து அவனை தூக்கிவிட்டனர். அதைக் கண்டு பரிதாபமடைந்த பண்டிதர் பரவாயில்லை, விடுங்கள் அவனை, சாப்பிட்டுவிட்டுப் போகட்டும், கடவுளுக்காக வேறு இலை போட்டுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அவனும் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு, எழுந்து ஓடினான். பண்டிதர், ஏய், தம்பி உன் பெயரென்ன ? என்று சத்தமாக கேட்டார். அதற்கு அச்சிறுவன், நான் மரியா மகன் என்று கூறிவிட்டு, மின்னலென கூட்டத்திற்குள் ஓடி மறைந்தான். அச்சிறுவனது குரல் மட்டும்தான் அவரது காதுக்கு எட்டியது.

அன்பார்ந்தோரே ! மரியா மகனின் மற்றொரு பெயர் இயேசு என்பதாகும். ஆம், ஆபிரகாம் பண்டிதரின் விருப்பப்படி ஆண்டவர் இயேசு, ஏழைச் சிறுவனின் உருவில் அத்திருமண பந்தியில் பங்கு கொண்டார். எனவே தான், மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 25 : 40) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.ஆகவே அன்புக்குரியவர்களே, ஏழை, எளியோர் மீது தயவு கொண்டு அவர்களுக்கு நம்மால்  இயன்ற உதவிகளைச் செய்வோமெனில், அது இறைவனுக்கே உதவி செய்ததற்கு சமமாகும்.  

நன்மை செய்யும்படி, உனக்குத் திராணி  இருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே (நீதிமொழிகள்  
3 : 27) என்று திருமறைக் கூறுகிறது. எனவே, ஏழை மாணாக்கரின் படிப்பிற்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, மருத்துவ சிகிச்சைக்காக உதவிசெய்வது, நமது திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஏழை, எளியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அழைத்து அவர்களுக்கு உணவளிப்பது, முதியோர் இல்லங்களையும், மனவளர்ச்சி குன்றியோர் இல்லங்களையும் சந்தித்து அவர்களுக்கு உணவளிப்பது போன்ற செயல்களை நாம் செய்து வந்தால் ஏழைகளின் சிரிப்பில் ஏசுவைக் காணலாம்.

இறைமகன் இயேசுவும் எளிமையின் வடிவாகவே வாழ்ந்தார். நாமும், அவரைப் போல எளிமையாக வாழவும், ஏழை, எளியோருக்கு தாராளமாக உதவிபுரியவும் அவர் நம்மை அன்போடு அழைக்கிறார்.ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் ( நீதிமொழிகள் 19:17) என்று திருமறை கூறுவதற்கேற்ப, தேவையிலுள்ள மக்கள் மீது தயவுகூர்ந்து, அவர்களுக்கு உதவிசெய்தால், கடவுள் நம்மை ஆசீர்வதித்து ஒரு நன்மையும் குறையாதபடி நம்மை அற்புதமாக வழிநடத்துவார்.

Tags : poor ,
× RELATED இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை...