×

அஷட காளியர தரிசனம்

ஊரடங்கு காலத்திலும் தளர்வு செய்யப்பட்டதால் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்த அஷ்ட காளியர் கோயில்கள்.அசுரர் குலத்து பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் என்ற மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டான். அதனை கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.

வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ்செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம் ‘‘தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்தார், தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.’’ அதற்கு பார்வதி தேவி ‘‘தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட முருகன் ‘‘தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்’’ என்றார்.

‘‘இதை எப்படி தந்தையிடம் கூற, என்று முருகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கனமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணை திறந்தார் சிவன்.‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாககன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.

இந்த சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.பாதாள லோகத்தில் நாககன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடை காத்து வந்தாள். 41 வது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய் கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. 2வதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. 4வதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. 5வதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். 6வதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். 7வது பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.

பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியார் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாககன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப்போல் படைக்காமல் மனித குல பெண்களாக படைக்கவேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப்பெறப்போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக்கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, சிவனும் பதில் கூறினார். மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷா சுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு என்று கூற, மாரி முத்தாரம்மன், தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும். என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷா சுரனை அழிக்கும் வகையில் வரங்கள் கேட்க, அவர்களுக்கு அனைத்து வரங்களையும் நல்கினார். சிவபெருமான்.

சாமுண்டீஸ்வரி

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரிபர்வத மலைக்கு வருகின்றனர். அஷ்டகாளிகள். மகிஷாசுரன் இடையே யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒரு சேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிரிகளுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான்.அதன்படியே மகிஷாசுரனை சிங்கமாக்கி தனது வாகனமாக வைத்துக்கொண்டாள் சாமுண்டீஸ்வரி. சாமுண்டிஸ்வரி கோயில், கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாமுண்டி மலையில் அமைந்துள்ளது.  

வயிரவரை கண்டெடுத்தல்

மகிஷாசுரனை வதம் செய்த பின் எட்டுபேரும் சிவபெருமான் தங்களை மணமுடிப்பதாக கூறினாரே, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கா, தங்கை எட்டுப்பேரும் கயிலாயம் வருகிறாள். இதையறிந்த சிவன், நந்தி தேவரை அழைத்து ரகசியம் கூற, அதன்படியே நந்திதேவரும் வண்டு மலைக்கு சென்று 8 வண்டுகளை பிடித்து 8 குழந்தைகளாக்கி அஷ்ட காளிகள் வரும் வழியில் வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்து அதன் அழுகுரலை நிறுத்தி, அவர்களுடன் கயிலாயம் வருகிறார்கள்.

சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மணமுடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான் நான் உங்களிடம் கூறியது உண்மைதான். ஆனால் நீங்கள் கன்னியர்களாக வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்ட காளிகள். நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்கவேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன் என்றார்.வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். ஆளுக்கொரு பிள்ளையை கையில் வைத்தவர்கள் அந்த எட்டு பிள்ளைகளையும் ஒன்றாக்கி, ஒரே பிள்ளையாக உருவாக்கினர். வழியில் கண்டெடுத்ததால் அந்த பிள்ளைக்கு வயிரவன் என்று பெயரிட்டனர்.

முத்துமாரி என்ற
மாரி முத்தாரம்மன்

கயிலாய மலையிலிருந்து புறப்பட்டவர்கள் பூலோகத்தின் சொர்க்கபுரியான பொதிகை மலைக்கு வந்தனர்.மூத்தவள் மாரி முத்தாரம்மன் தான் வந்ததை இவ்வையகம் அறிய வேண்டும் என்றெண்ணி, நெல்லை நகருக்கு வந்தாள். அங்கு வளையல் விற்கும் செட்டி
யாரிடம் சென்று தனக்கு வளையல் போடும்படி கூற, அவரும் வளையல் போட சம்மதித்தார். இரு கைகள் தானே என்று நினைத்தவர் வியந்தார். காரணம் அன்னை மாரிமுத்தாரம்மன் தனது எட்டு கரங்களையும் நீட்டி வளையல் போட்டு விடும்படி கூறினாள். செட்டியார் வளையல் அணிவித்து விட்டு பணம் கேட்டார். அன்னை மாரிமுத்தாரம்மன் நான் தரவேண்டிய பணத்தை நெல்லை தெற்கு ரதவீதியிலுள்ள மணியக்காரரிடம் வாங்கிக்கொள் என்றார்.(மணியக்காரர் என்றால் கிராம நிர்வாகி பொறுப்பு வகிப்பவர்) மறுநாள் நெல்லை நகருக்கு உரிய மணியக்காரரிடம் சென்ற வளையல்காரர் ‘‘மஞ்சள் பொட்டும்,

மங்கல பட்டும் அணிந்து வந்த மங்கை ஒருத்தி, தனது கைகளுக்கு வளையல் போட சொன்னார். அதற்குரிய பணத்தை உங்களிடம் வாங்கும்படி கூறினார்’’ என்று செட்டியார் கூற, அதைக்கேட்டு வீட்டுக்கு உள்ளியிருந்து சினம் கொண்டு வந்தாள் மணியக்காரரின் மனைவி, யாரவள் எனக்கு தெரியாமல் என்று தனது கணவனிடம் கேட்க, மறுகனமே அவள் நாவில் முத்து வந்தது. பேச முடியாமல் அவதிப்பட்டாள். சிறிது நேரத்தில் மேனியெங்கும் முத்துக்கள் படர அம்மை நோயால் அவதிப்பட்டாள் மணியக்காரரின் மனைவி. அஞ்சினார் மணியக்காரர். அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய மாரிமுத்தாரம்மன், தான் யாரென்பதையும், தனக்கு கோயில் கட்டி வழிபட்டால் வந்த பிணி மாறும், இனி வரும் காலம் வளமாகும் என்றுரைத்தாள். அதற்கு தாயே, தங்கள் விருப்பப்படி கோயில் கட்டுகிறேன் என்றுரைத்தார்.

அப்போது மாரிமுத்தாரம்மன் நெல்லை நகரில் தற்போது கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கு ஒரு வேம்பு செடி முளைவிட்டிருக்கும். அதை நாகம் ஒன்று சுற்றியிருக்கும். நாளை காலை சூரிய உதயத்தின் போது இது நடக்கும். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டு. என்றுரைத்தாள். அதன்படி மணியக்காரர், அந்த இடத்தில் அம்மனுக்கு கோயில் கட்டினார்.மாரிமுத்தாரம்மன் கோயில் என்றழைக்கப்பட்டது. அது மருவி முத்தாரம்மன் கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.
 
வீரமாகாளி என்ற வீரமனோகரி படை வீட்டம்மன்

நாக கன்னியின் வயிற்றில் பிறந்த அஷ்ட காளியரில் 2வதாக பிறந்தவள் மாகாளி. திருச்செந்தூரில் சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்தபோது, சூரபத் மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த குருதியை தான் வாங்கியவள் இந்த மாகாளி. அதன் பின்னர் வீரமாகாளி என்று அழைக்கப்படலானாள். திருச்சிரலைவாய்(திருச்செந்தூர்)பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்த பின்னர், வீர மாகாளி அவ்விடம் விட்டு மீண்டும் பொதிகை மலை செல்ல முற்பட்டாள். வரும் வழியில் வீரைவளநாடு(குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற் கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்து விட அங்கேயே வாசம் செய்தாள். தனக்கு ஒரு ஆலயம் வேண்டும். முக்கால பூஜை மற்றும் விழாக்கள் வேண்டும். அதற்கு, தான் இவ்விடம் வந்ததை, இப்பகுதியினர் அறிய வேண்டும் என்று எண்ணிய வீரமாகாளி, அவ்வழியாக வருவோர், போவோரை அடித்து, அச்சுறுத்தினாள். குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள்.

ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் பெரியவனாக திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்ததில் வந்திருப்பது உக்கிர வடிவான காளி என்று தெரிந்தது. காளிக்கு கோயில் எழுப்பி அம்பாளை சாந்தரூபனியாக கருத வீரமனோகரி என நாமம் இட்டு வழிபட்டு வந்தனர். இந்த அம்மன் தான் போர்க்கள கொற்றவையாக வணங்கப்பட்டாள். படை வீரர்கள் தங்களது இருப்பிடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டதாலே இந்த அம்மன்
படை வீட்டம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

முத்தலை அம்மன்
(முத்தாலம்மன்) என்ற
முப்பிடாதி அம்மன்

அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என அழைக்கப்படலானது.அஷ்ட காளியர்கள் கயிலாயம் விட்டு வந்தவர்கள் பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து காளியர்கள் ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடம் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்து கொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி யிலிருந்து கறவை மாடுகள் வாங்குவதற்காக யாதவர்கள் 4 பேர் கேரளாவிற்கு சென்றனர். அந்த காலத்தில் கால் நடையாக சென்று வருவதால் 2 நாட்களுக்கு மேலாகும் பயணத்தில் தங்கள் கைவசம் பாத்திர பண்டங்களை கொண்டு சென்று காட்டில் அடுப்பு கூட்டி சமைத்து சாப்பிட்டு விட்டு, தங்களது பயணத்தை தொடங்குவது வழக்கம். அவ்வாறு இந்த 4 பேரும் மாடுகளை பிடித்துக்கொண்டு வரும் போது குற்றால மலையடிவாரத்தில் நான்கு மரங்கள் சூழ ஆற்றங்கரையோரம் இருந்த நிழலில் அடுப்பு கூட்டி சோள கஞ்சி சமைக்கின்றனர். அந்த நேரம் மலையிறங்கி வந்த முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன் இருவரும் சமையல் வாசனை முகர்ந்து அவ்விடம் வருகின்றனர்.

அந்த 4 பேரும் சாப்பிட்டு முடித்து அவ்விடத்திலிருந்து  புறப்படுகின்றனர். அன்னையர் இருவரும் அவர்களை பின் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சிக்கு வருகின்றனர். ஊரின் எல்லை பகுதியில் கொல்லப்பட்டறை இருக்க அந்த குடிலின் கீழ் வந்து அமர்ந்தாள் முப்பிடாதி அம்மன். முத்தாரம்மன் அந்த 4 பேரின் பின்பு தனது பயணத்தை தொடங்கினார்.ஊருக்குள் வந்ததும் 4 பேரும் ஆளுக்கொரு திசையாக சென்றனர். அப்போது முத்தாரம்மன் நாலு பேரும் பிரிந்து சென்ற அந்த சந்திப்பகுதியில் அமர்ந்தாள். நாட்கள் நகர்ந்தது. தான் இவ்விடம் வந்ததை இப்பகுதி மக்கள் அறிய வேண்டும் என்பதற்கு அவ்வூர் மக்களுக்கு அம்மை நோயை உருவாக்கினாள். ஊரே அவதிப்பட ஊர்பெரியவர்கள் ஒன்று கூடி மலையாள நம்பூதரியை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தனர். அப்போது வந்திருப்பது முத்தாரம்மன் என்று தெரிந்தது. அம்மனுக்கு சிலை இட்டு, பூஜை செய்து வந்தால் நோய்கள் விலகும் என்று கூற, அதன்
படியே அங்கே முத்தாரம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது.

இது நடந்த பல நாட்களுக்கு பிறகு அந்த ஊருக்கு மாடு திருடர்கள் வந்தனர். இடக்குடியில் கட்டி வைத்திருந்த கேரளாவில் இருந்து வாங்கி வரப்பட்ட உயர் தர கறவை மாடுகள் 4 யும் அவிழ்த்துக்கொண்டு திருடர்கள் 5 பேர் புறப்பட்டனர். அப்போது ஊர் எல்லையில் இருந்த முப்பிடாதி அம்மன், அவர்கள் முன் தோன்றினாள். மாடு திருடர்களிடம் அறிவுரை கூறி தடுத்துப்பார்த்தாள். அவர்கள் கேட்காமல் மீறி சென்றனர். அவ்விடம் விட்டு நகர்ந்த அடுத்த விநாடி அவர்களுக்கு அந்த பௌர்ணமி வெளிச்சத்திலும் கண் பார்வையின்றி போனது. கத்தினர், கதறினர். பொழுது புலர்ந்தது. ஊர் மக்கள் திரண்டனர். அப்போது திருடர்கள் தாங்கள் செய்த தவற்றை மன்னிக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அவர்களும் மன்னித்ததாக கூறினர். அப்போது ஒரு திருடன் கூறினான். அய்யா, சிகப்பு கண்டாங்கி சேலை கட்டி, நீளமான தலைமுடிய சீவி, அதன் அடிப்பாகத்தில் கொண்டையிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து 50, முதல் 60 வயது நிரம்பிய நிலையில் ஒரு தாய் வந்து எங்களுக்கு புத்திமதிக சொல்லியும், நாங்க கேளாமல் சென்றதால் எங்களுக்கு கண் பார்வை பறிபோனது. அந்த அம்மாவை பார்த்து மன்னிப்பு கேட்கனும். அவங்க இந்த கூட்டத்தில நிற்கிறாங்களா என்று கேட்டனர்.உடனே ஊர்க்காரரகள் நீங்க சொன்ன அடையாளத்தில எங்க இடக்குடியில யாரும் இல்ல, பிராமணக்குடி யிலும், கம்மாளக்குடியிலும் கூட யாரும் இல்லையே என்றதும், கூட்டத்தில் நின்ற ஒருவர் எல்லாம் முத்தாரம்மன் செயல் என்று கூற, அனைவரும் அதை ஒப்புக்கொண்டு கோயிலுக்கு முன் நின்று வணங்கினர். பூஜை நடந்தது. அம்மன் அருள் வந்து ஆடுபவர் கூறினார்.

ஏம்பா, இந்த மாட்டு திருட்ட தடுத்து நிறுத்தினது. என் தங்கச்சி முப்பிடாதி, அந்த கொல்லப்பட்டறை இருக்கும் இடத்தில அவளுக்கு சிலை கொடுத்து கோயில் கட்டி வழிபடுங்க, நன்மை வந்து சேரும், நல்ல வளர்ச்சி கூடும், கண் பார்வையற்றவர்கள் மனமாறி வழிபட்டால் மீண்டும் பார்வை கிடைக்கும் என்று கூற, அதன்படி அந்த இடத்தில் கோயில் கட்டினர்.பூஜை நடந்து கொண்டிருக்கும்போது அம்மா, தாயே முப்பிடாதி என்று அவர்கள் 5 பேரும் கத்த, மறுகனம் பார்வை வந்தது. கொல்லப்பட்டறை இருந்த இடத்தில் ஓலை குடிசையில் முதலில் உருவானது. கோயிலை பெரிய அளவில் கட்ட வேண்டும் என்று நினைத்த போது, அம்மாவிடம் உத்தரவு கேட்கும் பொருட்டு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அம்மன் அருள் வந்து ஆடுபவர், எனக்கு தனி சந்நதியும், என் தங்கை சந்தனமாரிக்கும், தாண்டவராயருக்கும் ஒரு சந்நதியும் கட்டுங்கள் என்று சாமியாடி கூறினார்.

அதன்படி கோயில் புதிதாக கட்டப்பட்டது. ஒரு சந்நதியில் முப்பிடாதி அம்மன் மூன்று முகத்துடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மற்றொரு சந்நதியில் சந்தனமாரியம்மன் தாண்டவராயன் சுவாமியோடு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக சுடலைமாடன், பைரவர், சின்னதம்பி, முண்டன், காத்தவராயன், ஈனமுத்து, நாக கன்னி, விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இவ்வாலயத்தில் வருடத்தில் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. இரு சமூகத்தினர் கோயிலை நிர்வகித்து வருகின்றனர்.சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முப்பிடாதி அம்மன் மூன்று முகத்துடன் எழுந்தருளியுள்ளார். மூன்று கண்கள் கொண்ட சிவனை முக்கண்ணார் என்று கூறுவது போல, முக்காலம் உணர்ந்த சக்தியின் அம்சமான மூன்று தலைகளோடு வீற்றிருக்கும் முப்பிடாதி அம்மனை அம்மாவட்டங்களில் மூன்று தலை அம்மன் என்று அழைத்தனர். அதுவே முத்தலையம்மன் என்று அழைக்கப்படலாயிற்று. நாளடைவில் அது மருவி முத்தாலம்மன் என்றானது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் எல்லைப்பிடாரி அம்மனாக அருள் பாலிப்பதும் அன்னை முப்பிடாதி அம்மனே. நம்பி வழிபடும் அடியவர்களுக்கு முப்பொழுதென்ன எப்பொழுதும் துணையிருப்பாள் முப்பிடாதி என்ற முத்தாலம்மன்.
இந்த சொல்லே தென் மாவட்டத்தில் வழக்கில் உள்ளது. முப்பிடாதி அம்மன் கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக உள்ளது.

நாகாத்தம்மன் என்ற உலகம்மன்

அஷ்ட காளியரில் 4 வதாக பிறந்த உலகம்மன் குற்றால மலையில் வாசம் செய்தாள். அந்த சமயத்தில் நெல்லை நகரத்தில் வசித்து வந்த சண்முகம் பிள்ளை, பாளையத்து அரண்மனையில் கணக்குபிள்ளையாக இருந்தார். இவரும், அப்பகுதியில் பெரும் வணிகராக திகழ்ந்த ஆறுமுக செட்டியாரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும், தங்கள் மனைவி மக்களோடு 2 மாடுகள் பூட்டிய வில்லு வண்டியில் குற்றாலத்திற்கு பயணம் செய்தார்கள். குற்றாலம் அருவியில் 2 குடும்பத்தாரும் நீராடுகின்றனர். அப்போது சண்முகம்பிள்ளையின் மனைவி தான் கொண்டு வந்த மஞ்சள் கட்டியை எடுத்து அவ்விடம் உள்ள பாறையில் உரசுகிறார். உரச, உரச உருவாகும் மஞ்சள் மறுநிமிடமே மாயமானது. உற்று நோக்கினால் ஒரு பெண்ணின் கை தடம் மட்டுமே இருந்தது. திடுக்கிட்ட சண்முகம்பிள்ளையின் மனைவி மீனாட்சி, ஆறுமுகம் செட்டியார் மனைவி சுந்தரியிடம் கூறுகிறார். சுந்தரி அருகே வந்து மீனாட்சியின் கையிலிருந்த மஞ்ச கட்டியை வாங்கி உரசுகிறார். அப்போதும் முன்னர் நிகழ்ந்தது போலவே நடந்தது. வியப்புற்ற இருவரும் தங்களது கணவர்களை அழைக்க, ஆறுமுகச்செட்டியார் சரி, எதை நினைச்சும் பயப்படாம முதல்ல கரையேறுங்க. குளிச்சது போதும் என்றார். அச்சத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறியவர்கள் தங்களது இல்லம் வந்து சேர்ந்தனர்.

வீடு வந்து சேர்ந்த, அவர்கள் வீட்டு பெண்களுக்கு மறு நாளிலிருந்து உடல் நலம் குன்றியது. வேர்க்காத உடல் நிலையும், நிற்காத உதிரப்போக்கும் அவர்களை வாட்டி வதைத்தது. மருத்துவச்சியரை வைத்து பார்த்தும் குணமாகவில்லை. குறி சொல்லும் குறவர் குல பெண் ஒருவர் சண்முகம்பிள்ளை வீட்டு முன் நின்று குறி சொன்னாள், ‘‘அம்மா, வீட்ல யாரு, ஜக்கம்மா அருளால நான் சொல்றேன். உங்க வீடு தேடி, அந்த அஷ்ட காளியரில் இரண்டு பேரு வந்திருக்காக, குற்றால மலையில் குடியிருப்பவள், குளிக்கையில் மஞ்சள் மணம் கண்டு, மவராசிங்க பின்னே வந்துள்ளாள், அவள் குடியிருக்கு இடம் ஒதுக்கி, குறித்த நேரத்தில் பூஜைகள் செய்து குடும்பத்தோடு சேர்ந்து வழிபட்டு வந்தால் குறைகள் விலகும், நிறைகள் பெருகும். குறத்தி நான் சொல்லறது உண்மையாங்கும்’’ என்று
கூறினாள்.

அந்த பெண்ணை அழைத்து பேசிய சண்முகம்பிள்ளை, அவளுக்கு ஆடை தானம் செய்தார்.உடனே ஆறுமுகமும், சண்முகமும் சேர்ந்து நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் மண் பீடம் அமைத்து பூஜை செய்து வழிபட்டனர். பூஜையின்போது அம்மன் அருள் வந்து ஆடியவர் தான் உலகம்மை என்றும் என்னோடு எனது தங்கையும் வந்திருப் பதாகவும், இன்றிலிருந்து உங்கள் வீட்டு பெண்கள் உடல்நலம் தேறுவர். இல்லத்தில் எல்லா வளமும் உண்டாகும் என்றுரைத்தார். உலகம்மனோடு அவளது தங்கையான அரியநாச்சி அம்மன் வந்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அம்மன் அருள் வந்து ஆடியவர் பெயர் கூறாததால் புது அம்மன் என்றே இவர்கள் அழைத்து வந்தனர். கோயில் நாளடைவில் பெரிதாக கட்டப்பட்டது. கல் சிலைகள் அமைக்கப்பட்டது. நெல்லை ஜங்சன் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

துலுக்கானத்தம்மன் என்ற அழகு நாச்சியம்மன்

அஷ்ட காளியரில் ஐந்தாவதாக அவதரித்தவள் அழகு நாச்சியார்.
நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன்படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும்போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு ஏதாச்சும் கொழுவில் மாட்டி இறந்து விட்டதோ, என்று வருந்தினார்.

பின்னர் கம்பு ஒன்றை கொண்டு வந்து ரத்தம் படிந்திருந்த இடத்தை தட்டுகிறார். அங்கே ஒரு கல் ஒன்று தட்டுப்படுகிறது. உடனே அதை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. அவரது மனைவி பொன்னுத்தாயி அருகேயுள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த
நபர்களை அழைத்தாள்.வந்த நான்கு பேரும் குப்பாண்டியும் சேர்ந்து  ஐந்து பேராக அந்த கல்லை சுற்றியிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வெளியே எடுத்தனர். அது அழகான ஒரு பெண் அமர்ந்த நிலையில் இருந்த சிலை. அம்மன் சிலையின் வலது தோளில் வெட்டுக்காயம் இருந்தது. அந்த காயத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது. குப்பாண்டி மனம் உருகி வேண்டினார். அப்போது ஒரு அசிரீரி கேட்டது. எனக்கு இந்த இடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள் எனது பெயர் அழகு நாச்சியார் என்றும் கிழக்கு திசை நோக்கி வைக்காதே, எனக்கு பிடித்த வட திசையை நோக்கி வைத்து பூஜை செய் என்றது.

உடனே அம்மன் சிலையை அங்கிருந்த புளியமரத்தின் அடியில் வடக்கு நோக்கி வைத்து பூஜித்தனர். பூஜை முடிந்த மறுநிமிடம் சிலையிலிருந்து நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம் நின்றது. மனமகிழ்ந்த விவசாயிகள். வயல் நடவு மற்றும் விதைப்பு நேரங்களிலும், அறுவடை நாட்களிலும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் ஒரு நாள் வழிபடும் அன்பர்களின் கனவில் தோன்றிய அம்மன், நான் மழையில் நனைந்து வெயிலில் காய்கிறேன். அது மட்டுமன்றி தனித் தனியாக வந்து பூஜை செய்து என்னை வணங்கி செல்லும் நீங்கள் ஒரு சேர நின்று பூஜித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்று கூறினாள். அதன் பின்னர் ஊரார்கள் ஒன்று கூடி கோயில் எழுப்பி கொடைவிழா நடத்தினர்.அழகுநாச்சியம்மன் கோயில் தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் வழியில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள
சிந்தாமணி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அம்மன் புல் கூட துளிர்க்காத வனத்தில் வந்தமர்ந்ததால் துளிர்க்காத வனத்து அம்மன் என்று அைழக்கப்பட்டாள். அதுவே மருவி துலுக்கானத்தம்மன் என்றானது.

செண்பகவல்லி  

கயிலாயம் விட்டு பொதிகை மலை வந்த செல்வி அம்மன் மலையிலிருந்து இறங்கி, குற்றாலநாதர் கோயிலுக்கு வந்தாள். நந்திதேவன் உள்ளே அனுமதிக்கவில்லை. உடனே கொடி மரத்தில் வந்தமர்ந்தாள். அதன்பின் குற்றாலநாதர் கோயிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம் கொடியேற்றம் அன்று வாலிப வயதுடைய யாராவது ஒருவர் மாண்டு போவது, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தது. உடனே கேரள தேசத்து நம்பூதிரிகள் வந்து பார்த்ததில் கொடி மரத்தில் இருக்கும் செல்வியம்மன் தான் கொடியேற்றத்தின் போது நடக்கும் துர்மரணங்களுக்கு காரணம் என தெரிய வந்தது. அவர்களது ஆலோசனைப்படி ஒரு மந்திரவாதியை வரவழைத்து செல்வியம்மனை மந்திரத்தால் மதி மயக்கி பொன்னால் ஆன செம்பில் அடைத்து குற்றால மலையில் செண்பக மரங்கள் அடர்த்தியாக ஓங்கி வளர்ந்திருந்த பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

மாதங்கள் சில கடந்த நிலையில் மழை அதிகமாக பெய்ததால், குழியில் புதைக்கப்பட்ட பொற்செம்பு, மேலெழுந்து வந்தது. அப்போது செங்கோட்டையை சேர்ந்த மூப்பனார் வகையறாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு நிலை விடுவதற்காக மரம் வெட்ட கூலியாட்களுடன் செண்பக மலைக்கு வருகின்றார். அவர் கண்ணில் செம்புபட்டு விட, அதை எடுத்து திறக்க, மறுகனமே செம்பு விண்ணை நோக்கி பறந்து, அருகே இருந்த மர உச்சியில் சிக்கிக் கொண்டது. அப்போது அசிரீரி கேட்டது. எனக்கு இவ்விடத்தில் கோயில் எழுப்பு. உனக்கு வேண்டிய செல்வங்களை நான் தருவேன் என்று உரைத்தது. அதன்படி அவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் கோயில் கொண்டதால் செல்வி அம்மன், செண்பககாட்டு செல்வி அம்மன் என்றும், செண்பகமலை செல்வி அம்மன் என்றும் அழைக்கப்பட்டவள் நாளடைவில் செண்பகசெல்லி என்றும் செண்பகவல்லி என்றும் அழைக்கப்படலானாள். கேரளத்து காரர்கள் வருகைக்கு பின்னர் செண்பகாதேவி என்று அழைக்கப்படலானாள். இத்தாயவளே, விஸ்வநாத செல்வி, பேராத்துச் செல்வி, வடக்குவாசல் செல்வி என பல நாமங்களில் அழைக்கப்படுகிறாள்.

சந்தன மாரி

அஷ்ட காளியரில் ஏழாவதாக அவதரித்தவள் சந்தனமாரியம்மன். சந்தனம் குளிர்ச்சியான பொருள். அதுபோல தாய் சந்தனமாரியம் மனும் பக்தர்களுக்கு இறங்கும் குளிர்ந்த மனம் உடையவள். நெல்லை மாவட்டத்தில் உள்ளது சேரன் மகாதேவி. இந்த ஊர் முன்பு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்த பகுதியை ஆண்டு வந்த சேரமன்னனுக்கு குழந்தை இல்லை. ஒரு நாள் மன்னன் அப்பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் நீராட வரும்போது ஆற்றின் கரையோரம் நின்ற ஒரு சிறுமி, ‘‘மன்னா’’ என்று அழைத்தாள். குரல்கேட்டு திரும்பிய மன்னன் ‘‘குழந்தாய் அழைத்தது நீயா!’’ என்று வினவினான்.‘‘ஆம், நானே தான், என் முன்னே இரு கரமேந்தி கண்ணை மூடி நில்’’ என்றாள். ‘‘மன்னன் அந்த சிறுமி கூறியபடியே கண்ணை மூடி கரமேந்தி நின்றான். அப்போது மாங்கனி ஒன்றை கொடுத்த அந்த சிறுமி, ‘‘இந்த மாங் கனியை எடுத்துச்சென்று உன் பத்தினியிடத்தில் கொடு, குழந்தைபேறு அடைவாள் என்றது. இவ்வாறு கூறிவிட்டு அச்சிறுமி அவ்விடத்திலிருந்து அகன்றாள்.

அந்த மாங்கனியை உண்டதன் காரணமாக மகாராணி கர்ப்பமுற்றாள். அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இந்த குழந்தை ஆதி பராசக்தியின் அருளாள் கிடைக்கப்பெற்றது என்றெண்ணிய மன்னன் தனது மகளுக்கு மகாதேவி என்று பெயரிட்டான்.
அந்த சிறுமியை கண்ட தாமிரபரணி ஆற்றங்கரையின் வேப்பமரம் அடியில் தனது வழிபாட்டு தெய்வமான சக்திக்கு பீடம் அமைத்து பூஜித்தான். நாளடைவில் கோயில் சிதைந்து போனது. பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினர் கோயிலை புதிதாக அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பிரசன்னம் பார்க்கையில் கோயில் கொண்டிருந்தது அஷ்டகாளியரில் ஒருவரான சந்தன மாரியம்மன் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் மூலவருக்கு சந்தனமாரியம்மன் என பெயரிட்டு கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோயில் சேரன் மகாதேவி பேருந்து நிலையத்தி லிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

காந்தாரி அம்மன்

நாக கன்னியின் வயிற்றில் பிறந்த அஷ்ட காளியரில் எட்டாவதாக அவதரித்தவள் காந்தாரியம்மன். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது கல்லிடைக்குறிச்சி. இயற்கை வளமும், இறையருளும் கொண்ட ஊர். இங்குள்ள ஆதிவராக பெருமாள் கோயிலுக்கு தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்தனர். அதற்கு கொடியேற்றம் நிகழ்ச்சி  நடத்தப்படவேண்டும் என்பதால் அந்தணர்கள் ஒன்று கூடி பாண்டிய மன்னன் வம்சா வழியைச் சேர்ந்த ஜமீன்தாரிடம் முறையிட்டனர். உடனே அவர், எனக்கு இறைபணி செய்ய ஒரு வாய்ப்பினை பெருமாளே கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக மரத்தை வெட்டி கோயிலுக்கு கொண்டு சேர்த்துவிடுகிறேன் என்று உறுதி கூறினார்.

கொடிமரம் வெட்ட நாள் குறிக்கப்பட்டது. தனது ஆட்களை அனுப்பி தனக்கு சொந்தமான கட்டள மலை எஸ்டேட்டில் இருந்து மரம் வெட்டி வண்டியில் வைத்து கொண்டு வரப்படு கிறது. கல்லிடைக்குறிச்சி ஊர் எல்லையில் தற்போது காந்தாரி அம்மன் கோயில் இருக்கும் பகுதியில் வண்டி வந்த போது, வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி அவ்விடத்திலிருந்து நகர வில்லை. அதிகமான ஆட்கள் முயன்றும் வண்டி நகராததால், யானையை கொண்டு வந்து மரத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. நம்பூதரியை வர வழைத்து பிரசன்னம் பார்த்தபோது கொடிமரத்துடன் அஷ்ட காளியரில் ஒருவரான பெண் தெய்வம் ஒன்று வந்திருப்பதாகவும், உடனே இவ்விடத்தில் சிலை  அமைத்து பூஜை செய்தனர். பின்னர் அச்சாணி போட்டு வண்டியை நகர்த்த முயன்ற போது வண்டி நகர்ந்தது. கொடி மரம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறிய தாக அன்று உருவாக்கப்பட்ட கோயிலுக்கு எட்டாவது பூஜை நடத்தும்போது அருள் வந்து ஆடிய ஒருவர் தனது பெயர் காந்தாரி அம்மன் என்றும் எனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் கூற அதன்படி கோயில் எழுப்பப்பட்டது. பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே கமும் நடத்தப்பட்டுள்ளது. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கஷ்டங்களை நீக்கி கவலைகளை போக்கி காத்தருள்கிறாள் காந்தாரி அம்மன். இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள கல்லிடைக்குறிச்சியில் மணிமுத்தாறு - சிங்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

Tags : Ashta Kaliyara Darshan ,
× RELATED காமதகனமூர்த்தி