மஹா சங்கட ஹர சதுர்த்தி : 7.8.2020 அன்று விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.

*    மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய் களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

   

*ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்குப் பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

*    கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

*    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

*    மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

*    விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.

*    நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

*    தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா

வருகிறார்.

*    கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

*    சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

*    சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறை களைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

*    தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

    

*சென்னை திருமயிலை கபாலீச்சரத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம்.

 - கார்த்திக்

Related Stories:

>