×

ராஜபீமா விமர்சனம்…

சிறுவயதில் தனது தாயை இழந்ததால் அவதிப்படும் ஆரவ், காட்டிலிருந்து வழிதவறி விளைநிலங்களுக்குள் புகுந்த யானையை ஊர் மக்கள் விரட்டுவதைப் பார்த்து பதறுகிறார். அதைக் காப்பாற்றும் ஆரவ், அதனிடம் தனது தாயின் பாசத்தை உணர்கிறார். பிறகு அதை தானே வளர்க்கிறார். அது வந்த நேரம் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க, ஆரவ் தந்தை நாசர் உள்பட அனைவரும் யானையை உயிராக நினைத்து பாதுகாக்கின்றனர். அப்போது அரசாங்கம் சார்பில் நடத்தப்படும் முகாமுக்கு யானையை அழைத்துச் செல்லும் வனத்துறையினர், பிறகு வேறொரு யானையை ஆரவ்விடம் காட்டி அதிர வைக்கின்றனர்.

இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை அறிந்த ஆரவ், அந்த யானையைத் தேட ஆரம்பிக்கிறார். இறுதியில் அது கிடைத்ததா? யானை கடத்தப்பட்டதன் பின்னணி என்ன என்பது மீதி கதை. யானை மீது பாசம், ஆக்‌ஷன், நடிப்பு என்று ஆரவ் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கும், யானைக்கும் இடையே ஏற்படும் பாசமும், பிரிவும் நெகிழ வைக்கிறது. ஆரவ்வை காதலிப்பது, பாடலுக்கு ஆடுவது என்று ஆஷிமா நர்வால் நிறைவாக நடித்துள்ளார். அமைச்சராக வரும் கே.எஸ்.ரவிகுமார் வில்லத்தனம் செய்துள்ளார்.

வழக்கமான தந்தை என்றாலும், நடிப்பில் தனது முத்திரையை நாசர் பதித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஓவியா ஆடியிருக்கிறார். யாஷிகா ஆனந்த், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே உள்பட அனைவரும் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர். யானை சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ் குமாரின் உழைப்பு தெரிகிறது. சைமன் கே.கிங் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ப பயணித்துள்ளது. விலங்குகளிடம் காணப்படும் அன்பையும், செல்லப்பிராணிகளிடம் மனிதர்களுக்கு இருக்கும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் நரேஷ் சம்பத் எழுதி இயக்கியுள்ளார். யானை இருப்பதால் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் படம் பிடிக்கும்.

Tags : AARAV ,Aorav ,
× RELATED விடாமுயற்சி: விமர்சனம்