×

நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பது எப்படி?

நேரம் நன்றாக இருந்தால் எல்லாமே நல்லபடியாக முடியும் என்று சொல்வார்கள். இது நம்முடைய ஜாதகத்தில் நடக்கின்ற நேரம் மட்டுமல்ல, ஒரு செயலைச் செய்ய துவங்குகின்ற நேரத்தினையும் குறிக்கும். எந்த ஒரு செயலையும் செய்யத் துவக்கும்போது கண்டிப்பாக அதற்குரிய நாளையும், நேரத்தையும் கணக்கிட்டுச் செய்வது நல்லது. நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தினை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை சற்று விரிவாகக் காண்போம். இந்த நல்ல நாள் என்பதனை, பொதுவாக வருகின்ற நல்ல நாட்கள், தனிப்பட்ட மனிதனுக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். பொதுவான நல்ல நாட்கள் என்பதை பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் சுபமுகூர்த்த நாட்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாட்களில் கூட எல்லா சுபநிகழ்ச்சிகளையும் செய்துவிட முடியாது. ஒவ்வொரு சுபநிகழ்ச்சிக்கும் அதற்குரிய விதிமுறையின் படி நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு கிரகப் பிரவேசத்திற்கு நாள் பார்க்கும்போது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் திருமணத்தை ஆனி மற்றும் பங்குனி மாதங்களில் நடத்துவார்கள். எந்த ஒரு சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ளோமோ அதற்கு ஏற்றவாறு, அந்த நிகழ்ச்சியைத் துவக்குவதற்கு எந்தெந்த விதிகளை பின்பற்ற வேண்டுமோ அவற்றை மனதில்கொண்டு நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

தாராபலன், சந்திர பலன்

அதேபோல தனிப்பட்ட மனிதருக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்களைக் கணக்கிடுவதற்கு என்று தனியாக விதிகள் உண்டு. குறிப்பாக தாராபலன், சந்திரபலன் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ள நாளின் நட்சத்திரத்தினை எண்ணி அதனை ஒன்பதால் வகுத்த மிச்சம் 1, 3, 5, 7 வந்தால் ஆகாத நாட்கள் எனவும், 2, 4, 6, 8, 9 வந்தால் நன்மை தரும் என்றும் கணக்கிடுவதே தாராபலன் பார்க்கும் முறை. அதே போல ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசி முதல் அதாவது ஒருவருடைய ஜென்ம ராசி முதல் நிகழ்ச்சியினை நடத்துகின்ற நாளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியை எண்ணிவர 1, 3, 6, 7, 10, 11 வந்தால் சுபம் என்றும் 2, 5, 9 வந்தால் மத்திமம் என்றும் 4, 8, 12 அசுபம் என்றும் கணக்கிட வேண்டும். இதில் வளர்பிறையாக இருந்தால் 2, 5, 9 உத்தமம் என்றும் தேய்பிறையாக இருந்தால் 4, 8, 12 உத்தமம் என்ற கணக்கும் உண்டு. இவ்வாறு தனிப்பட்ட மனிதனுக்கு நல்ல நாளைக் கண்டறியும்போது தாராபலன், சந்திர பலனைக் கணக்கிடுவதோடு அந்த நாள் பொதுவாக வருகின்ற நல்லநாளாகவும் அமைந்திருக்க வேண்டும். தாராபலன் இருந்து சந்திர பலன் இல்லை என்றாலும் பரவாயில்லை, சந்திராஷ்டம நாளாக அமையாமல் இருந்தால் போதுமானது என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து.
 
செவ்வாய்க்கிழமை நல்ல நாளா இல்லையா..?

ஒரு சிலர் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. ‘செவ்வாயோ... வெறும் வாயோ...’ என்ற பழமொழியை கிராமப்புறங்களில் கேட்டிருப்போம். செவ்வாய்க் கிழமையில் பேச வேண்டாம், புதன்கிழமையில பேசுவோம் என்று முக்கியமான விவாதங்களையும் செவ்வாய்க்கிழமையில் தவிர்ப்பார்கள். இவ்வாறு செவ்வாயைத் தவிர்ப்பதன் காரணத்தையும் ஜோதிடம் விளக்குகிறது. நவகிரகங்களில் சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரகங்களில் ஒருவராக செவ்வாய் சித்தரிக்கப்படுகிறது. இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைத் தரும். விஸ்வாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் தரும். எதைப்பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தரும். ஜோதிட ரீதியாக செவ்வாயின் குணம் இதுவென்றால், சாஸ்திரம் செவ்வாய்கிழமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும். தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத் திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் கூட (ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்றவை) செவ்வாய்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கிறது. அதனாலேயே திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ.. வெறும் வாயோ...’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம். அதேநேரத்தில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி ஆகியவற்றை செவ்வாய்கிழமையில் செய்யலாம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

பொன் என்பது நம் வாழ்வினில் தேடும் பொருட் செல்வத்தைக் குறிக்கும். புதன் என்பது அறிவுச் செல்வத்தைக் குறிக்கும். ஜோதிடவியலில் புத்திகாரகன் ஆக புதன் கிரகத்தினை குறிப்பிடுவார்கள். வித்யாகாரகன் என்றும் கல்விக்குரிய கோளாகவும் புதனையே குறிப்பிடுவார்கள். சாதாரணமான கல்வியறிவு, படிப்பறிவு, ஆகியவற்றை மட்டும் புதன் தருவதில்லை. நுட்பமான அறிவு, சமயோஜித புத்தி, அபாரமான கணித ஞானம் ஆகிய அனைத்தையும் வழங்குவது புதன் மட்டுமே. அதேபோன்று விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கவும் புதனின் அருள் தேவை. பொன் எனும் பொருட் செல்வத்தை எவ்வகையிலும் தேடிவிடலாம், ஆனால் புதன் எனும் அறிவுச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்பதையே இந்தப் பழமொழி குறிக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த நாள் புதன் என்பதாலும் எல்லோருக்கும் நன்மையைச் செய்யும் நாள் புதன் என்பதாலும் இந்த நாள் சௌமிய வாரம் என்றழைக்கப்படுகிறது.

கரிநாள் என்றால் என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை.

தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆகுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள் ஆகும். பிரதி வருட கரிநாட்களின் விவரம்
:
சித்திரை - 6, 15, வைகாசி - 7, 16, 17, ஆனி - 1, 6, ஆடி - 2, 10, 20, ஆவணி - 2, 9, 28, புரட்டாசி - 16, 29, ஐப்பசி - 6, 20, கார்த்திகை - 1, 10, 17, மார்கழி - 6, 9, 11, தை - 1, 2, 3, 11, 17, மாசி - 15, 16, 17, பங்குனி - 6, 15, 19. கரிநாட்களில் சுபகாரியங்ளைச் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

அசுப திதிகள்

பிரதமை, அஷ்டமி, நவமி ஆகியவை பொதுவாகச் சொல்லப்படக் கூடிய அசுபமான திதிகள் ஆகும். இந்த நாட்களில் கண்டிப்பாக சுபநிகழ்வுகளைச் செய்யக்கூடாது. அமாவாசை நல்ல நாள் என்று சொல்லப்பட்டாலும் திருமணம் முதலான சுபநிகழ்வுகளை அந்நாளில் செய்யக்கூடாது. அமாவாசை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய திதிகள் சுபநிகழ்வுகளுக்கு உகந்தவை அல்ல என்று காலவிதானம் எனும் நூல் குறிப்பிடுகிறது.

தீதுறு நட்சத்திரங்கள்

ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யமுப்பூரம் கேட்டை
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறில்
மாதனங்கொண்டார் தாரார் வழிநடை போனார் மீளார்
பாயினில் படுத்தார் தேறார் பாம்பின்வாய் தேரைதானே.
மேற்கண்ட பாடல் பரணி, கார்த்திகை,
திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களை தீதுறு நட்சத்திரங்கள் என்றும், பாம்பின் வாயினில் அகப்பட்ட தேரைபோல மாட்டிக் கொள்வார் என்று எச்சரிக்கை செய்கிறது. அதேநேரத்தில்
இந்த 12 நட்சத்திரங்களில் மகம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களை சுபநிகழ்வுகள் நடத்துவதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற ஒன்பது நட்சத்திரங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

நல்ல நேரம்  


நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பது போலவே அந்த நாளில் செயலைச் செய்ய வேண்டிய நேரத்தினைத் தேர்ந்தெடுக்கவும் தனித்தனியே விதிமுறைகள் உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம், திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்குதல், சாந்தி முகூர்த்தம், சீமந்தம், குழந்தையை தொட்டிலில் விடுதல், அன்ன ப்ராசனம், காது குத்தல், அக்ஷர அப்பியாசம், குழந்தையை பள்ளியில் சேர்த்தல், உபநயனம், வாகனம் வாங்கி இயக்குதல், உழவு செய்தல், எருவிடுதல், விதை விதைத்தல், கதிர் அறுத்தல், தான்யம் களஞ்சியத்தில் வைத்தல், தான்யத்தை செலவிடுதல், ஆடு - மாடு முதலானவை வாங்குதல், பொன் ஆபரணம் அணிதல், புதிய வஸ்திரம் உடுத்துதல், மனைகோலுதல், வாசக்கால் வைத்தல், வியாதியஸ்தர் குளித்தல், வியாதியஸ்தர் மருந்துண்ணல், ப்ரயாணம், நிர்வாகம் இடம் மாற்றுதல், புதுக்கணக்கு தொடங்குதல், புதுதொழில் தொடங்குதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், வீடு - மனை வாங்க, விற்க என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனியே விதிமுறைகள் என்பது உண்டு. அதற்குரிய லக்னங்களைக் குறித்து எட்டாம் இடம் சுத்தமாக உள்ளதா, அப்படி எட்டாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதற்குரிய பரிகாரம் போன்றவை அத்தனையும் தெளிவாகக் கண்டறிந்து அதன்படி செய்வது நல்லது.

ஹோரை  


ஹோரை என்ற வார்த்தையில் இருந்துதான் ஹவர் என்றவார்த்தை உருவாகியிருக்கிறது. ஹோரை என்பது ஒரு மணி நேரத்தினைக் குறிக்கும். ஒரு நாளின் சூரிய உதய காலத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தைச் சேரும். அதாவது பொதுவாக சூரிய உதயம் காலை ஆறு மணி என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்றால் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான முதல் ஒரு மணி நேரம் சூரிய ஹோரை ஆகும். ஒன்பது கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு - கேதுக்களைத் தவிர மற்ற ஏழு கிரஹங்களின் பெயர்களைத்தான் நாம் வார நாட்களுக்கும் சூட்டியுள்ளோம். இந்த ஏழு கிரஹங்களும் தான் ஹோரையிலும் இடம்பிடிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை என்று வைத்துக்கொண்டால் சூரிய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் சூரிய ஹோரை அதனைத் தொடர்ந்து சுக்கிர ஹோரை, புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் வந்து மீண்டும் சூரிய ஹோரை, சுகிக்ரன் என்ற சுழற்சியில் வந்து கொண்டிருக்கும். திங்கட்கிழமை என்றால் சந்திர ஹோரையில் நாள் துவங்கும்.

இதே போலவே ஒவ்வொரு நாளும் தனது கிழமையின் பெயரில் உள்ள கிரஹம் எதுவோ அதனுடைய ஹோரையில் துவங்கும். சூரிய உதய நேரத்திற்குத் தகுந்தாற்போல் ஹோரை துவங்கும் கால நேரத்தில் மாறுபாடு இருக்கும். உதாரணத்திற்கு தை மாதத்தில், தஞ்சாவூர் சூரிய உதயம் காலை 06.40 மணி என்று வைத்துக்கொண்டால் அந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் காலை 06.40 மணி முதல் 07.40 மணி வரை சூரிய ஹோரை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றில் பொதுவாக குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப ஹோரைகள் என்றும், சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஹோரைகள் அசுப ஹோரைகள் என்றும் சொல்வார்கள். சுப ஹோரைகளில்தான் சுபநிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்பது ஒரு சிலரின் கருத்து. அசுப ஹோரைகள் என்று அழைக்கப்பட்டாலும் சூரிய ஹோரையும், செவ்வாய் ஹோரையும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் உகந்தது. சமையல், கேட்டரிங், ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு சனி ஹோரை மிகவும் நற்பலனைத் தரும் இவ்வாறு கிரஹங்களின் தன்மைக்கு ஏற்றவாறு ஹோரைக்கான பலன்களை அனுபவிக்க இயலும்.

ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இவற்றில் குறிப்பாக ராகுகாலம் மற்றும் எமகண்ட நேரத்தினை சுபநிகழ்ச்சிகளில் தவிர்க்கும் வழக்கம் நம் தமிழகத்தில் உண்டு. வடஇந்தியாவில் இவற்றை யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை. இருந்தாலும் கால தேச வர்த்தமான அனு ஷ்டானத்தின்படி நமது தமிழக சம்பிரதாயத்தில் இந்த நேரங்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம் உள்ளது. அதே போல குளிகை நேரத்தில் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் அது மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கும் என்று சொல்வார்கள். இந்த கருத்தினை மனதில் கொண்டு செய்கின்ற செயலுக்கு குளிகையின் காலம் உகந்ததுதானா என்பதனை அறிந்து செயல்படுதல் அவசியம்.எந்த ஒரு செயலைச் செய்தாலும் நமது ஜாதகப்படி நேரம் நன்றாக இருந்தாலும் கூட நாம் அந்தச் செயலைத் துவக்குகின்ற நாளும், நேரமும் அந்த செயலுக்கு உரிய விதிமுறையின்படி அமைந்திருந்தால் நாம் செய்கின்ற பணியானது எந்தவிதமான தடையுமின்றி வெற்றிகரமாக நடந்தேறும் என்பதில் அணுஅளவும் ஐயமில்லை.

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்